குழந்தைப்பிராயத்தின் நினைவுகள் முதல் காதலை விடவும் இனிமையானவை.காட்டு மலர்ச்செடி போல மனதின் ஏதோ ஒரு மூலையில் அது தினமும் பூக்கிறது.நாம் அப்பிரதேசத்துக்குள் என்றாவது தான் நுழைகிறோம் அதுவும் நேரமில்லாத பயணி போல.
சிறு வயதில் புளியாங்காய் அடித்து உப்பு தொட்டு சாப்பிடும் போது ஒரு மிகப்புதிய புளிப்பு நாக்கில் உரசும், அதன் சுவை தாளாது சட்டென வெளியில் எடுத்து விடுவோம்.ஆனால் அதன் ருசி இப்போது வரை புளிப்பாக அடிநாக்கில் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது.அதிலும் பாதிப்பழம், பாதிக்காயாக ஒரு பருவம் உண்டு அதை பூப்பழம் என்போம் ( நிறைய பெயர்கள் உண்டு).அது கிடைப்பதும் அரிது ஆனால் சுவை வர்ணிக்க இயலாதது.
ஈவில் டெட் படம் ரிலீஸ் ஆகும்போது பல கதைகள் உலவும், தனியாகப்பார்த்தால் கோடி ரூபாய் பரிசு பிரிவியூ பார்த்த போது டைரக்டரே செத்து விட்டார் ஒரே ஒருவன் தனியாக பார்த்து வெளியே வந்தான் அவனும் அன்று இரவு தூங்கும்போது ரத்தம் கக்கி செத்து விட்டான் அந்த படத்தை தனியாக பார்க்கும்போது சீட்டுக்கடியில் ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள் என்று பல கதைகள் உலவும்.அதிலும் ஆசை சாக்லேட் பேப்பரை அதிக தூரம் இழுத்தால் பரிசு என்று நம்பி வாங்கி வாங்கி அவசியமாக கவனமாக இழுத்துக்கொண்டிருப்போம், இவையெல்லாமே குழந்தைகளின் நேரத்தை கழிக்க குழந்தைகளாலேயே உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.
எனக்கு சிறு வயதில் முக்கிய வேலையே என் எல்லா பிராப்பர்டியையும் பாதுகாப்பது தான்.ஆனாலும் சரியாக கிளம்பும் நேரத்தில் பேனா, ரப்பர், காம்பஸ் ஏதாவது காணாமல் போகும், அரை மணி நேரம் தேடியும் கிடைக்காது, சாயங்காலம் வீட்டுக்கு வந்தால் கண் முன்னாலேயே சமர்த்தாக உட்கார்ந்திருக்கும்.நான் ஏதோ ஒரு குட்டிச்சாத்தான் தான் அவைகளை தன் மாய உலகுக்கு எடுத்துப்போய் விட்டு திரும்ப வைத்து விடுவதாக நம்பினேன்.
தூர்தர்ஷன் தான் கதி என்றிருந்த காலத்தில் ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை படம் இவை தான் பொழுது போக்கு.ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னை படம் பார்க்க பக்கத்து தெருவுக்கு கூட்டிப்போனார்கள். ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ எம்ஜிஆர் அண்ணன் குகைக்குள் மாட்டிக்கொண்ட வேளையில் விளம்பரம் போட்டு படத்தை முடித்து விட்டார்கள்.டிவியை ஆஃப் பண்ணி வெளியே அனுப்பி விட்டார்கள்.எனக்கு அதற்கப்புறம் என்னாகும் என்ற சஸ்பென் ஸ் தாள முடியவில்லை, ஆனால் அதற்கு மேல் படம் போட மாட்டார்கள் என்று எனக்கு புரிய வைக்க முயற்சித்தார்கள் ‘அது திரை மலர்’ என்று.நான் வெளியே அனுப்பத்தான் இப்படி சதி செய்கிறார்கள் என்று ரொம்ப நாள் நம்பினேன்.
சமீபத்தில் திருப்பதி போயிருந்தோம்,அங்கே லட்டு வாங்குமிடத்தில் எடுத்துப்போக பை நாமே தான் எடுத்து வர வேண்டும்.வெளியே பாலிதீன் கவர் விற்பார்கள் ஆதலால் லட்டு வாங்கி வெளியே வந்தோம் வேக வேகமாக ஒரு சிறுமி வந்து விற்றாள் அவளிடம் எவ்வளவு என்று கேட்டதற்கு ஒரு கவர் இரண்டு ரூபாய் என்றாள், எங்களுக்கு இரு கவர் தேவை ஆனால் இரண்டு ரூபாய் தான் உள்ளது (திருப்பதியில் சில்லரை கிடைப்பது கடினம், ஒருவேளை எல்லாம் உண்டியலில் போய் விடுகிறதோ என்னவோ) அவள் ஒப்புக்கொள்ளவேயில்லை.எங்கள் குடும்ப நண்பர் அச்சிறுமி கன்னங்களில் கொஞ்சுவது போல் கை வைத்து “என்னடா கண்ணா ரெண்டு ரூபாய்க்கு ரெண்டு தரக்கூடாதா”.என்றார்.அவ்வள்வு தான் அவள் உருகி விட்டாள், லேசாக சாய்ந்தாற்போல் நின்று அழகான புன்னகையோடு "“ஃப்ரீயாவே எடுத்துக்கங்க” என்றாள்.”பரவாயில்ல” என்று காசு கொடுத்து விட்டு நடந்தோம்.
கடைசியாக திரும்பி பார்த்தேன் அவள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ’டாடா’ காட்டினேன் அவளும் ‘டாடா’ காட்டினாள் அப்போது தான் கவனித்தேன் அவள் கண்கள் லேசாகப் பனித்திருந்தன.எனக்கு அப்போது தான் சுரீர் என உறைத்தது, ஒருவேளை இது போல் யாரும் அவளிடம் பேசியிருக்கவே மாட்டார்களோ? என் பால்யம் நிறைய கற்பனைக்கதைகளும், விளையாட்டுகளும் நிறைந்ததைப்ப் போல இவள் வாழ்க்கை பாலிதீன் கவர்களால் நிரப்பபட்டிருக்கிறதோ? அடுத்த முறை வரும்போது வெங்கடாஜலபதியை பார்க்கிறோமோ இல்லையோ லட்டு தருமிடத்தில் பாலிதீன் கவர் விற்கும் சென்னையை சேர்ந்த குமாரி என்கிற உதய குமாரியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.நீங்கள் கூட திருப்பதி போய் அவளைப்பார்க்க நேர்ந்தால் அவளை நான் கேட்டதாகச் சொல்லுங்கள் முடிந்தால்.
Saturday, February 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
test
Post a Comment