Wednesday, November 30, 2005

மூன்று ஹைக்கூக்கள்

நீ என்னை அழைக்கும்போதெல்லாம்
சொல்ல நினைப்பேன்
"ஐ லவ் யூ"
ஆனால் சொல்வதென்னவோ
"ப்ரசென்ட் மேடம்"

-------------------------------

நீ கூப்பிடும்போதெல்லாம் தோன்றும்...
இதற்காகவே எனக்கு
பெயர் வைக்கப்பட்டதோ?

-------------------------------

பேனாவை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம்
உன்னிடமிருந்து வரவில்லை...
உன் பேனாவை என்னிடம்
தந்ததிலிருந்து வந்தது

Tuesday, November 29, 2005

ஆழ்காதல்

சூடாக என் மேல் விழும்
வெப்பக் காற்றை
குளிர்ச்சியான உன் பேச்சு
சமன் செய்து கொண்டிருந்தது

தூரத்து மணல் மேட்டில்
சிறுவர்கள் குதிப்பதாய்
கடல் நீர் மௌனத்தை
உடைத்துக்கொன்டிருந்தார்கள்

உன் கண்களும்-அந்தக்
கடலைப்போலவே
ஆழமாய்...அழகாய்...

எனக்கும் குதிக்க ஆசைதான்
என்ன செய்வது?
அவர்களைப் போல் எனக்கு
ஆழம் தெரியாதே...

Monday, November 28, 2005

சூட்சுமம் தேடல்

எறும்புகளின் சுவடுகள் போல
உலகெங்கும் நிறைந்திருக்கின்றன
மனிதர்களின் காதல்கள்

பிரபஞ்சத்தின் சிறுதுளி வெளிச்சத்தில்
கீற்றாய் ஒளிர்கிறது
காலத்தின் நமட்டுச் சிரிப்போடு சிங்கப்பல்

வெளி எல்லைகள் மறந்து
மிகப்பெரியதென நாம் கருதும்
மனிதக்கூட்டங்களில்
எல்லோருக்கும் பிடித்ததென கர்வப்பட்டதொரு
கவிதையை முன் வைத்தேன்...
ஒருவர் கூட புரட்டி பார்க்கவில்லை

Saturday, November 12, 2005

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்

எல்லோருக்கும் வணக்கம்

இன்னைக்கு பேப்பர்ல படிச்சேன் சிவகாசி படத்துக்கு கோர்ட்ல கேஸ்ன்னு
இது ஒரு அட்டு படம் அம்பது ரூபா வேஸ்ட் பண்ணிட்டானுகன்னு கேஸ் போட்டிருந்தா பரவால்லன்னு விட்டுருப்பேன்
"ப்ளாட்பார வக்கீல்"னு ஒரு டயலாக் படத்துல வருதாம் வக்கீல கேவலப்படுத்திட்டாய்ங்கடான்னு கேஸ்
நல்ல வேள நம்மூராளுக இன்டர்நேஷனல் லெவலுக்கு போவுல
ஏன்னா இங்க சர்தார் ஜோக் மாதிரி அங்க வக்கீல் ஜோக் ரொம்ப பிரபலம் (புக்கே இருக்கு)

இந்த மாதிரி சினிமா மேல கேஸ் போடறது அதிகமாக ரெண்டு காரணம் தான்
மக்களுக்கு சென்சிட்டிவிடி உணர்ச்சி வசப்படறது அதிகமாய்டிச்சி
அல்லது
ச்சீப் பப்ளிசிட்டி தேட்ற மனோபாவம் அதிகமாய்டிச்சி

நேத்து ப்ராஜெக்ட் கடைசி நாள் (அதனால தான் ப்லாக் எழுதலை) சுமார் 8 மணி டீம் லீடர் வந்து முடிச்சிட்டு
கெளம்பலாம்னான்.வடிவேலு மாதிரி "ஏன்டா அடிச்சது ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் ஒன் அவரா?" ங்கிற மாதிரி
பாத்தேன்...அவன் முறைச்சிட்டே போய்ட்டான்.ஓரளவு எல்லாம் முடிஞ்சதும் ஒரு ஃபோன் கால் "உடனே கெளம்பி வாடா தீர்த்தத்திருவிழா"ன்னு
பழைய படத்துல வர்ற கடவுள்கள் மாதிரி விஷ்க்னு மறைஞ்சேன்

சபை 'கலகலகல'ன்னு கூடுச்சு.ஊறுகாயில இருந்து தட்டுவட வரைக்கும் இருந்தது
சியர்ஸ் அடிக்கும்போது "ஏண்டா இதெல்லாம் பண்றோம்"னான் ஒர்த்தன்
நாஞ்சொன்னேன் "அடேய்...தண்ணியடிக்கும்போது கண்ணு பாத்து சந்தோஷப்பட்டுக்குது நாக்கு ருசிச்சும்,
மூக்கு நுகர்ந்தும் சந்தோஷப்பட்டுக்குது ஆனா இந்த காதுக்கு ஒண்ணுமே கெடைக்காது அத குஷி பண்ண தான்
'சியர்ஸ்னு சொல்றொம்'"னேன்
இன்னொருத்தன் சொன்னான் "அதெல்லாம் இல்லடா அளவு சரியா இருக்கான்னு பாத்துக்கத்தான்"ன்னு
உங்கள திருத்தவே முடியாதுடான்னு சியர்ஸ் சொன்னேன்

இன்றைய கவிதை

என்ன ஆட்டம் ஆடிருப்ப?
-------------------
அடிக்கடி சொல்லுவாரு எம் மாமன்
துடிவயசுல ரொம்ப ஆடாதடா - அப்புறம்
பொட்டப் புள்ள பொறக்கு மின்னு
எட்டும் பொண்ணுங்க அவருக்கு



நட்புடன்
கோகுல் குமார்

Thursday, November 10, 2005

அல்சர் எதனால் வருகிறது?

அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி

இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்

சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"

Saturday, November 05, 2005

இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?

எல்லோருக்கும் வணக்கம்

வேலை விட்டதும் பக்கத்துலயே "அபிராமி"ல "மஜா" ஓடிச்சு பூந்துட்டேன்
பசுபதி காமெடி கலக்கல்ப்பா
என்ன...இந்த மசாலா படத்துல எல்லாம் ஹீரோயின் பாட்டுக்கு மட்டும் ஆட வர்ற மாதிரி இங்க விக்ரம் சண்டை போட வர்றார்

(விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்)
அப்புறம் நேத்து தான் சிவகாசி படத்தை பார்த்து தொலைச்சேன்
டைரக்டருக்கு "பில்ட்-அப்" கொடுத்த ஒரே படம் இதுவாத்தான் இருக்கும்
கஷ்ட காலம் இந்த படத்தையும் நூறு நாள் ஓட்டுவாய்ங்க

உஙளுக்கு இந்தியாவுலயே நெ.1 பணக்காரனாக ஆசையா?
ரொம்ப எளிது ஒரு லட்சத்துக்குள்ள எல்லா செலவையும் அடக்கி
நிகர விலை ஒரு லட்சம்னு ஒரு பிளான் கொண்டுவந்தா
பைக் வாங்கறவங்கள்ள 30% - 40% பேர் காருக்கு மாறுவாங்களாம்
நீங்க நெ.1 ஆக அதுவே போதுமாம்

அதே மாதிரி உலகத்துலயே நெ.1 ஆக...?
1.எய்ட்சுக்கு மருந்து கண்டு பிடிங்க (யார் கண்டா நோபல் பரிசு கூட கிடைக்கலாம்)
2.புத்தகங்கள போட்டொகாபி பண்றத தடுக்க வழி கன்டுபிடிங்க
3.சாஃப்ட்வேர்,புதுப்படம் இதெல்லாம் திருட்டு பண்றத தடுங்க (இத மட்டும் செஞ்சிட்டா பில் கேட்சை மிந்திடலாம்)

ஒரு பொண்ணு எழுதற மாதிரி கவிதைகள் எழுத எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அது கொஞ்சம் சவாலான விஷயம் இன்னும் முழுசா கைக்கு வந்திடலைனாலும்...
இன்றைய கவிதையும் அப்படித்தான்

முகவரி மறக்கப்பட்டதொரு பாடலோடே
இதயத்தை அதிர்வுக்குள்ளாக்கும்...
ஏன் எதற்கென்றே தெரியாமல் ஆரம்பித்து
அவசரமாக முடிக்கப்பட்டதொரு பழைய காதலின் சொச்சம்

கதறுதலுமில்லாது உதறுதலுமியலாது
உறுத்தும் வலி மாற்றப்படும்...
தற்காலிகமாக வேறு சேனலுக்கு

குடும்பமே அதிசயமாய்ப் பார்த்த
குட்டியைத் தாடையால் கவ்வி
அரவணைத்துப் போய்க்கொண்டிருந்த
அம்மிருகத்தைப் பார்க்கையில் தோன்றியது...
"அது நான் தானோ"


சரி... திங்கள் சந்திப்போம்
உடம்பு மனசு எல்லாதையும் நல்லா பாத்துக்கிடுங்க
நட்புடன்
கோகுல்

Thursday, November 03, 2005

முகமூடி

சம்பிரதாயத்துக்காக வைத்த பட்டாசு
வெடிக்குமா வெடிக்காதா என
பயத்தோடு எதிர்நோக்கும்போது
மெதுவாக எட்டிப்பார்க்கும்
எப்போதோ கை விடப்பட்ட
குழந்தைத்தனம்