Thursday, June 08, 2006

ஏழை என்பதில் என்ன பெருமை

"ஒவ்வொரு தடவை உணவுக்கும்
உயிர் விடுமளவுக்கு துணியும் நீ சாமுராய்
ஏழையிடம் மட்டுமே வீரம் காட்டுவதால்
நீயும் ஒரு போலீஸ்காரன்"

என்று கொசுவைப்பற்றி எழுத நினைத்தபோது எனக்கும் கூட ஏழை என்பது பெருமையான ஒரு பட்டம் போலத் தான் தோன்றியது. அண்ணா ஒருமுறை சொன்னாராம்,"இந்தியா ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு" (அண்ணாவா, நேருவா?).சினிமா ஹீரோக்களும்,அரசியல்வாதிகளும் சேர்ந்து ஏழை என்பது ஒரு சந்தோஷப்பட வேண்டிய பாக்கியம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

பணம் படைத்தவன் தவறான வழிகளில் மட்டுமே அந்நிலைக்கு வரமுடியும் என்பது போலவும்,இரவில் தூக்கம் வராமல் மாத்திரைகளை நம்புவது போலவும் நாம் உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.ஏழையாக கட்டாந்தரையில் படுத்தால் சுகமான தூக்கம் கொஞ்சும்,பஞ்சு மெத்தையில் படுத்தாலும் பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது இன்னும் என்னென்னவோ.

பணக்காரன் என்பவன் புத்திசாலி,எல்லோரும் ராஜ பரம்பரையில் பணக்காரர்களாகவே பிறப்பதில்லை, ஏழையாக இருந்து சரியான வழியில் நேரத்தை திட்டமிட்டு செலவழித்து கஷ்டப்பட்டே பணக்காரராகிறார்கள்.அப்படியே பிறக்கும்போதே பணக்காரராக பிறந்திருப்பினும் வெற்றியை தக்க வைப்பதை விட பெரிய சாதனை உண்டா?

நம்மாளு மிக சாதாரணமாக பொய் சொல்வான் அதுவும் ஆயிரம் பொய் அவன் அப்பவே நல்லா படிச்சான் என்று ஆரம்பித்து கல்யாணம் பண்ணின யோகம்யா என்பது வரை.ஏழையாக இருப்பது கேவலம் நம் சோம்பேறித்தனத்திற்கும், சரியான வழியில் முயற்சி செய்யாமல் இருப்பதற்கும் கிடைக்கிற தண்டனை என்பதும் நம் மக்களால் உணரப்படுவதே இல்லை என்பது கசப்பான உண்மை.

நாம் வேலை உருவாக்கும் படிப்பு எதுவோ அதற்கு முக்கியத்துவம் தருவதை விட வேலை கிடைக்கிற படிப்பு எதுவோ அதை தேடிப்போவதில் தான் ஆர்வம் காட்டுகிறோம்.வட மாநில மக்கள் கூட பொறியியல் படிப்புகளை விட நிர்வாக படிப்புகளுக்கு (MBA) முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அங்கே தங்கி விட்ட என் நண்பன் கூறுவான்.

ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதார உயர்வு மட்டும் நிகழ்ந்தால் போதும் அரசியல்வாதியில் ஆரம்பித்து நாட்டின் ஒவ்வொரு அரசாங்கத் துறையும் விழிக்கும்.ஏழையாக இருப்பதில் மமதை கொள்ளும் மனோபாவத்தில் இருந்து வெளி வருவோம்.கலாம் விரும்பிய இந்தியா 2020க்கு முன்பே கிடைக்கும்.

Categories: ,

No comments: