Friday, June 02, 2006

பயம்...பயப்படுத்தும்

"மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுத் தர வேண்டுமா?" என்பது போல பயம் எப்போதிருந்து ஆக்ரமித்ததென்றே நினைவில்லை, ஆனால் இப்போது வரை இருக்கிறது.ஆண் அழக்கூடாது, பயப்படக்கூடாது என்பவை கட்டாயம் என்கிற மாயை இருப்பதால் அதை வெளிக்காட்ட மறுக்கிறேனே தவிர பயம் என் நிழலை விட எனக்கு நெருக்கமானது.தனிமையோ, இரவு பன்னிரெண்டு மணியோ நிச்சயம் பயத்திற்கான காரணிகளாகப்படவில்லை.காரணம் இரவு 11 -12 மணிக்கு தனியாக சுற்றிய அனுபவங்கள் உண்டு.பயம் அந்த ஒரு குறிப்பிட்ட நாளுக்கு சொந்தமானது அப்போது மட்டுமே அது வரும்.

கல்லூரி படித்தபோது சில நாட்களில் இரவு 12,ஒரு மணிக்கெல்லாம் பாத்ரூம் போக வேண்டிய கட்டாயம் வரும், தண்ணீர் அதிகம் குடித்தால் ;).அப்போதெல்லாம் பயமும் சேர்ந்து வரும்.அதை வீட்டில் சொன்னால் என்னடா இத்தனை வயசாயிடுச்சு இன்னமும் பயப்படுற என்பதில் ஆரம்பித்து ஆண்பிள்ளை வரை தேவையில்லாத சம்பந்தமில்லாத துறைகளுக்கெல்லாம் போவார்கள் என்பதால் அமைதி காப்பேன் யாராவது எழுந்தால் போகலாமென்று.ஆனால் கடைசியில் தனியாகத் தான் போக வேண்டி வரும்.அதுவும் பாத்ரூமில் கொஞ்சம் அதிக நேரம் நிற்க வேண்டி வரும் பாருங்கள்... கொடுமை.ஒரு நாள் ரொம்ப கடுப்பாகி விட்டது நானும் பயப்படுகிறேனே தவிர பேய் எதையும் பார்த்ததில்லை.நின்று இப்போ பேய் ஏதாவது இருந்தா வரணும் நான் பார்க்கணும் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் நின்று இருக்கிறேன்.அப்போதெல்லாம் "என்ன தம்பி கூப்டியா?" என்று ஏதாவது குரல் கேட்டிருந்தால் ஐயய்யோ Horrible!

இப்போது வரை பேய் என்கிற கான்செப்டில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை, இருளில் நடக்கும்போது பின்னால் ஏதாவது சத்தம் கேட்டால் பயந்த மனது தனக்கேற்றவாறு கற்பனை செய்துகொள்கிறது, திரும்பிப் பார் ஒன்றுமில்லை வெறும் காற்று தான் என்று மூளை சொல்லும் ஆனால் எங்கே முடிகிறது?
அதே போல செத்தவர்கள் எல்லாம் பேயாக வேண்டுமானால் எத்தனை ஆடு,கோழி நானே சாப்பிட்டிருப்பேன் அதெல்லாம் வராதா ஏன் மனித உருவமே பேயாகிறது அதுவும் பொதுக்கூட்டத்தில் வரவேண்டியது தானே ஏன் தனியாக ஒருவன் போகும்போதே வர வேண்டும் என்றெல்லாம் வக்கணையாக யோசிப்பேன் ஆனால் பயம் பயம் தான்.

மற்றபடி இதெல்லாம் ரகசியம் தான் காரணம் நான் பயப்படும் தருணங்கள் அரிதானவையாகி விட்டன.அதில்லாமல் மற்றவர்களை பயப்படுத்தும் அளவு பேய்க்கதை சொல்லமுடிவதால் அவர்களின் பயத்தை பார்த்துவிட்டு இப்படித்தானே நீயும் பயப்படுகிறாய் என்று எனக்கே கேலியாக இருக்கும்.இப்படி பயப்படுத்துவதற்கெனவே நிறைய கதைகள் உண்டு,அதில் மிக புகழ் பெற்றது மோதிரக்கதை... இப்போது வரை 100% இக்கதை மூலம் பயப்படுத்த முடியும் அவ்வளவு அருமையாக யோசித்திருக்கிறார்கள்
யாரென்று தெரியவில்லை அதுவும் இரவில் ஒரு கும்பலைக்கூட்டி இதை சொன்னால் பெட்டர்.மற்றபடி ஒரு பேய்க்கதைக்கான சூழலை உருவாக்கினால் போதும்.பலகீன இதயமுள்ளோர், குழந்தைகள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

ஒரு ஏழைக்கிழவி தன் மகனோடு இருந்தாள் அவளுக்கு தங்க மோதிரம் போட ரொம்ப ஆசை தன் சொத்தை விற்று போடுகிறாள், அன்று நல்ல மழை சோம்பேறி மகன் கோபத்தில் கொன்று விடுகிறான் எல்லோரிடமும் மறைத்து நோயில் செத்ததாக புதைத்து விடுகிறான் அன்றிரவு தான் நினைவு வருகிறது தங்க மோதிரம் கழட்டாமல் விட்டது...போய் தோண்டி பிணத்தின் கையிலிருந்து மோதிரத்தை உருவுகிறான் ஆனால் அது வரவேயில்லை அந்த மோதிரவிரலை வெட்டி மோதிரத்தை எடுத்துப் போகிறான்.அதற்கப்புறம் அவனுக்கு பணம் குவிகிறது. பங்களா, மனைவி என்று செட்டிலாகி விட அதே போல ஒரு மழை நாள்...
அதே போல ஒரு கிழவி வாசலில் ஹீனமான குரலி "ஐயா பசிக்குதுய்யா" என்கிறாள்
இவனுக்கு மனது கேட்கவில்லை, அவளை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறான்.நலம் விசாரித்தான்.
சாப்பாடு போட்டான், அவன் தாய் போலவே இருக்கிறாள்,

"ஏன்மா உங்க குடும்பத்தில யாருமில்லயா?"
"இருந்தாங்கப்பா என் மகன் கடைசி வரை இருந்தான் இப்போ பிரிஞ்சிட்டான் கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன்"
"சரி சரி சாப்பிடுங்க"

அவ்வப்போது கிழவி அவனை தீர்க்கமாக பார்க்கிறாள், அவன் மனசாட்சி குத்த குனிகிறான் அப்போது தான் கவனித்தான்...கிழவிக்கு மோதிர விரல்...இல்லை
"என்னம்மா இது மோதிர விரலக்காணோம்"
"அது...வெட்டிட்டாங்கப்பா"
"யாரும்மா வெட்டினது?" கேட்டது தான் தாமதம் கிழவி சடாரென நிமிர்ந்து முறைத்து பார்த்தாள்
"இல்ல தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் யாரும்மா வெட்டினது?"
..
..
..

நீ தான்

இதை மட்டும் திடீரென சத்தமாக சொல்ல வேண்டும் ஒருமுறை கம்பெனியில் எல்லோரையும் உட்கார வைத்து சொன்னேன், ஒரு பெண் பாவம்...வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
என் பயமும் கூட என்னைப்பொறுத்தவரை இப்படி ரசிக்கக்கூடியதாக வாழ்வின் சுவைகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது,இருக்க வேண்டும் ஆதலால் பேய்கள் வாழ்க

1 comment:

சீனு said...

ஒரு முறை வீட்டில் தனியாக இருந்தேன். எந்த பயமும் அப்பொழுது இல்லை. உற்சாகமாய் பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருந்தேன். எங்க வீட்டு ceiling ரொம்ப சின்னது. மேலே மின்விசிறி வேறு. ஏதோ துணியை மடிக்கும் பொழுது, என் கை மேலே சென்றது. அங்கே சுற்றின் கொண்டிருந்த மின்விசிறியின் மேல் நான் கையில் வைத்திருந்த துணி பட்டது. எனக்குத் தெரிகிறது, என் கையில் இருந்த துணி தான் மேலே மின்விசிறியில் பட்டது என்று. ஆனால், அந்த சிறிய சத்தத்தினால் என் மணதில் ஒரு இனம் புறியாத பயத்தை ஏற்படுத்திவிட்டது. இதயத் துடிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது.

பின், சில் வினாடிகள் கழித்து அமைதியாய் யோசித்துப் பார்த்தேன். மனதில் ஒன்றுமே நினைக்காத பொழுது தனிமையில் இருக்கிறோம் என்ற பயமில்லாமல் பாடல் முனுமுனுத்துகொண்டிருந்தேமே, இப்பொழுது என்ன ஆயிற்று என்று. பின் தான் உணர்ந்தேன், நாமாக நினைத்துக் கொள்வதுதான் இந்த தேவையில்லாத பயத்துக்குக் காரணம் என்று.
உண்மையில், அன்றிலிருந்து தான் நான் இரவை கண்டும், மற்ற பயங்களையும் அறவே ஒதுங்கியது.