Thursday, June 01, 2006

அருவி அபாயங்கள்

காட்டருவிகள் உற்சாகம் தருபவை, பெரும்பாலும் மலைகளுக்கிடையே மட்டுமே காண முடிவதால் அவற்றை நினைத்தாலே லேசாக குளிரடிக்கும்.ஆனால் அருவிகளின் இன்னொரு முகம் கோரமானது.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது அடிக்கடி கொடைக்கானல் மற்றும் அடிவாரத்திற்கு டூர் போவோம்( பழனியிலிருந்து கொடைக்கானல் ரொம்ப பக்கமே).அங்கே கொடைக்கானல் அடிவாரத்தில் ஒரு 4 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அருவி உண்டு.காட்டுப்பாதை நடந்து தான் போக வேண்டும், அங்கே ஹோட்டல் முதலாளி,வேலை செய்தவர்கள் எல்லாம் இப்போதும் எங்கள் நெருங்கிய நண்பர்கள் (வள்ளுவர் ஹோட்டல் என்பது பெயர் பழனியில் புகழ்பெற்றது).பிரியாணி செய்து ஐம்பது பேர் போனோம்.4 கிலோமீட்டர் தள்ளி அவ்வளவு அழகாக ஒரு அருவி அது தான் காட்டுப்பாதையின் முடிவு.சலசலவென தண்ணீர் சப்தம் நண்பர்கள் கையோடு 'தண்ணி' எடுத்து வந்திருந்தார்கள் (அப்போதெல்லாம் நான் பழகியிருக்கவில்லை நல்ல பையன்...) ஸ்னாக்ஸ் கொள்ளையை ஆரம்பித்தோம், தண்ணியடிப்பவன் பக்கத்தில் இப்படி ஒரு கும்பல் கடுப்பேத்தும் ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவது தான் ஹைலைட்.

ஒரு இருபது பேர் அப்படியே குளிக்க கிளம்பினோம்.அருவி என்றால் ஒரே ஒரு இடத்தில் இருந்து விழவில்லை கொஞ்ச தூரத்தில் மெயின் அருவி விழ அங்கே ஒரு பழைய காலத்து குட்டி அணைக்கட்டு ஸ்டைலில் தடுப்பு இருக்க அதற்கு கீழே ஓட்டைகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.நாங்கள் அந்த தடுப்பின் மேல் அமர்ந்திருந்தோம்.ஐஸ்கட்டிகளை மொத்தமாக உருக வைத்திருந்தால் எவ்வளவு சில் என்றென்று இருக்குமோ அப்படி இருந்தது, அப்படியே குளித்தபோது ஒருவன் இங்கிருந்து நீந்தியே மெயின் அருவிக்கு போகலாம் என்றான் எல்லோரும் ஒப்புக்கொண்டோம்.எனக்கு அப்போது ஷான் நீச்சல் பழக ஆரம்பித்திருந்த காலம் லேசாக உதறல் தான் இருப்பினும் 20 பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் நீந்த ஆரம்பித்தேன் பார்க்கும்போது ரொம்ப பக்கம் போலத் தெரிந்த அருவி நீந்தும்போது ஏதோ தொலைவில் தெரிந்தது ஒவ்வொருவராக என்னைத் தாண்டிப்போக ஆரம்பித்திருந்தார்கள் நான் தான் கடைசி சரி கொஞ்ச நேரம் நின்று விட்டு நீந்துவோம் என்று அப்படியே நின்றேன் மார்பளவு தண்ணீரில் தரை தட்டுப்பட்டது ஊறிய இலை,தழைகளோடு.ஒரு நொடி தான் அப்படியே காலில் தரை கரைகிற உணர்வு அதாவது அது தரை இல்லை இலை,தழைகள் கடைசி வரை அது மட்டுமே அதாவது நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் இத்தனையும் ஆலோசித்தபோது தான் உறைத்தது வாய் வரை முழுகி விட்டது மூளைக்குள் முதுகெலும்பு வழி மின்சாரம் வ்ர்ரென பாய கண்களை மூடிக்கொண்டு நீந்த ஆரம்பித்தேன் 20 பேரையும் முந்தி வெறும் ஒரு நிமிடத்தில் மெயின் அருவியைத் தொட்டிருந்தேன்.என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.

இதற்கடுத்து சொல்லப்போவது மிகவும் பயங்கரமானது மற்றும் இப்போதும் நிகழும் சம்பவம்.என் பக்கத்து வீட்டு நண்பர் பொள்ளாச்சி அருகே அருவிக்கு குளிக்க அவர் நண்பர்களுடன் போயிருக்கிறார்.குளித்துக் கொண்டிருக்கும்போதே பத்து பேரில் ஒருவரைக் காணோம், சரி என்று விட்டு விட்டார்கள் போகும்போது தான் சீரியஸ்ஸாக உறைக்க எல்லோரும் தேடியிருக்கிறார்கள் ஆளே கிடைக்கவில்லை இரவு வரை கிடைக்கவில்லை மறு நாள் போலீஸுக்கு தகவல் சொல்லி, குடும்பத்திற்கு தகவல் சொல்லி எல்லோரும் வந்திருந்தார்கள்.கூட்டம் கூடி பேசிக்கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், ஒருவேளை தண்ணீருக்குள் பாறைகளில் சிக்கியிருக்கலாம், இங்கிருக்கும் ஊசி,தேனெடுப்பவர்களை கேட்டால் தேடிப் பார்ப்பார்கள் என்று.அவர்களை அழைத்திருக்கிறார்கள் தேடிப்பார்க்க அவர்கள் செய்த டீல் தான் கொடுமையானது பதினைந்தாயிரம் டிமாண்ட் செய்திருக்கிறார்கள்.அப்போதும் பிணம் தான் கிடைக்கும் என்று சொல்லி.தரும் வரை போகவில்லையாம், தந்ததும் வெறும் அரை மணி நேரம் தானாம், கால் பாதத்திற்கு மேல் ஒரு காயம் பாறையிடுக்கில் சிக்கி உயிர் போய் விட்டது என்று கூலாக சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

என் நண்பருக்கு சந்தேகம் பொறுமையாக விசாரிக்க பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன அதாவது அந்த சிலருக்கு அது தான் வேலையாம் அவர்களுக்கு தண்ணீர் ஆழத்திற்குள் இருக்கும் அத்தனை விஷயமும் தெரியுமாம்.தண்ணீருக்குள்ளேயே காத்திருந்து இப்படி வருபவர்களில் அவ்வளவு லாவகமாக நீந்தத் தெரியாதவரை சரேலென நீருக்குள் காலைப்பிடித்து இழுத்துப்போய் பாறையிடுக்குகளில் வேகமாக அடித்து சொருகி வைத்து விடுவார்களாம்.அப்புறம் ஒன்றும் தெரியாத மாதிரி வெளியே வந்து விடுவது.எதற்காக... அந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துக்காக.அதைக் கேள்விப்பட்டதில் இருந்து இப்போது வரை அருவிகள் எனக்கு பயத்தையும் மிரட்சியையுமே தருகின்றன.

ஆகவே எச்சரிக்கை தெரியாத அருவிகளில் குளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

2 comments:

ரவி said...

பயமுறுத்திட்டீங்க...

வடுவூர் குமார் said...

பணத்துக்காக என்ன வேணும் பண்ணுவார்கள் போல.
Hokenakkaலில் குளித்த அனுபவம் உண்டு