Tuesday, May 30, 2006

புதுப்பேட்டை - விமர்சனம்


படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்டியே டான்செட் எழுத சென்னை வந்து மறு நாள் படம் பாக்கலாம்னு தியாகராஜா போனோம்.அங்கே தான் சனி,ஞாயிறு ரிசர்வ் பண்ணாம டிக்கட் கிடைக்கும்.சில தடவை படம் பாக்கப்போறப்ப "ஹை சூப்பர்"னு துள்ளலாம் அதும் முத மூணு நாளைக்குள்ள அப்டியாப்பட்ட படம் பாக்றது பெரிய அதிர்ஷடம்னு நினைப்பேன், காதல்,காதல் கொண்டேன் மாதிரி.ஆனா எல்லா தடவையும் நாம நினைக்கிறது நடந்துடுதா என்ன?

மிகவும் சாதாரண அரதப்பழைய கதை, மிக சாதாரண ஏழைப்பையன் தாதாவாகிறான்.தாதாக்களின் கதைகளில் வேறெதுவும் பெரிதாக சொல்ல முடியாது என நினைத்தோ என்னவோ திரைக்கதை பலமாக கட்டப்பட்டிருக்கிறது.முதல் பாதியை செதுக்கியிருக்கிறார்கள்.அட்டகாசம் ஒரு பத்து நிமிடம் படம் போன பிறகு புதுப்பேட்டை என்று டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.

தனுஷ் ஸ்கூல் யுனிபார்மில் வருவதிலிருந்து அரசியல்வாதியாக மேடையேறுவது வரை குறையில்லாமல் நடித்திருக்கிறார்.தாதா என்பவனுக்கான ஒரு ஆஜானுபாகுவான உருவம் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேஷிவலாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.ஆக்ரோஷம், சிரிப்பு, கோபம் என எல்லா ஏரியாவிலும் தனுஷ் ஆட்டம் தான்."அம்மான்னா ரொம்ப பிடிக்குமா" என்றதும் லேசாக சிரித்து விட்டு "யாருக்குத்தான் பிடிக்காது?" என்பது அற்புதம்.அதே போல தனியாளாக எதிரிகளிடம் மாட்டி மரண அடி வாங்குவதும் சீறி திருப்பி அடிப்பதும் மிகவும் இயல்பு.தனுஷை சராசரியானவராக காட்டியிருக்கிறார்கள் அதுவும் பலமே, ஸ்நேகாவை விபசாரத்திற்கு அனுப்பக்கூடாது என்பதும்,பிறந்த பிள்ளையை தன் முகம் வைத்து தன் மகன் தானா என பார்ப்பதும், ஸ்நேகா போகிறேன் என்றதும் பணம் வேணுமா என்பதுமாக.

அடுத்தது ஸ்நேகா, நிச்சயம் பராட்ட வேண்டிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.குடும்பப்பாங்கான அவர் விலைமாதுவாக நடிக்கப்போகிறார் என்றதுமே பல ரசிக நெஞ்சங்கள் வெடித்திருக்கும் (பெண்கள் உட்பட).அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பொசுக்கென்று அழுவதும், "இப்பவேவா" என தைரியமாக கேட்கும் பெண்ணாகவும் மெல்லிய இயல்புகளை நிறைய இடங்களில் காட்டியிருக்கிறார்.

மற்றும் தனுஷின் அப்பா,கஞ்சா கும்பல் லீடர் அன்பு, அதற்கடுத்த அரசியல் தலைவர்,எதிரி மூர்த்தி,நண்பர்கள் எல்லாருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.நிறைய முகங்கள் அதிகம் இதற்கு முன் பார்க்கப்படாதவை, இனி கவனிக்கப்பட வேண்டியவை.

தைரியமான காட்சிகளும் அதிகம், கெட்ட வார்த்தையில் தாயை ஒருவன் திட்டுவதை காட்டுவது, வெட்டு குத்து,விலைமகள் வாழ்க்கை,ஜன நாயகத்தில் நிகழ்வதை காட்டும் க்ளைமாக்ஸ் இப்படி நிறைய.

டைமிங் ஜோக்ஸ் ஏராளம், கதையோடு இப்படி சேர்க்க செல்வராகவனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.முதல் தடவை கையை வெட்ட தனுஷை கூட்டிப்போகும் ரவுடி பண்ணும் கமெண்ட்களில் தியேட்டர் அதிர்கிறது.அதுவும் கடைசியாக வேலை முடித்தபின் "கவலைப்படாத மேல உன்னப்பத்தி நல்லா சொல்றேன்" என்பது சூப்பர்.

படத்தின் இசை,திரைக்கதை,காட்சியமைப்பு என எல்லா ஏரியாவும் திருப்தியே ஆனால் கதை ஹிஹி அங்கே தான் சறுக்கலே.தாதாக்களின் வாழ்க்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை ஆமாம் என்கிற மாதிரி காட்டப்பட்டிருக்கிறதே தவிர தாதாக்களின் ஹீரோயிசம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.
எளிய உதாரணம் தனுஷைத் தவிர வேறு யாருமே துப்பாக்கி உபயோகப்படுத்தாதது, ஆரம்பத்திலேயே தனுஷ் வரிசையாக கொலை செய்ய எல்லோரும் தேமே என இருப்பது,சாவது, போலீஸ் எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் இப்படி மற்ற தாதா படங்களில் என்னென்ன குறைகள் இருக்குமோ அவை இங்கேயும் ப்ரெசண்ட் சார் சொல்கின்றன.

ஸ்நேகா முதல் தடவை ரயில்வே ஸ்டேஷனில் காட்டப்படும்போது விலைமாதுவாக மேக் அப் அப்படி பொருந்துகிறது ஆனால் அப்புறம் எல்லாம் பாந்தமான முகம் தான், அதுவும் விலைமகளாக கொஞ்சம் காட்சிகள் தான் மற்றபடி தாதா மனைவியாக பதிகிறாரே தவிர விலைமகளாக பொருந்தவில்லை, விலைமாதுவின் பிரச்னைகள் அதிகம் சொல்லப்படாததும் ஒரு காரணம். வேறொருவனுடன் இருக்கும்போது தனுஷ் போனில் பேசும்போது நடக்கும் சித்ரவதை காட்டப்படுகிறது, ஆனால் விலைமாதுக்களின் நடைமுறைப்பிரச்னைகள் அதை விட அதிகம் அதுவும் உடலை விட மனம் சம்பந்தப்பட்டவை ஆனால் அவை எதுவும் இங்கே காட்டப்படவில்லை படத்திற்கான ரிசர்ச்சின்போது விலைமகள் பற்றிய சிறுகதைகள் படித்திருந்தால் கூட போதும்.

அதேபோல அதீத வன்முறை காட்சிகள், இப்படிப்பட்ட கதைக்கு இப்படித்தான் எனலாம் ஆனால் தாதாக்கள் வெட்டுவதால் வாழ்பவர்களில்லை வெட்டுவேன் என்று மிரட்டியே வாழ்பவர்கள் அவர்கள் பிரச்னை உயிர்பயம் தான் ஆனால் கிரவுண்டில் நூறு பேரை அநாயசமாக வெட்டுவதெல்லாம் அய்யய்யோ...

எடுத்தவுடனே தனுஷ் எஞ்ஜாய் பண்ணுகிறார் என்று காட்ட எங்க ஏரியா பாடல் இது போன்ற விஷயங்களை செல்வராகவனால் தவிர்க்க முடியவில்லையா? அதிலும் இயல்பாகவே சென்னை பையன்களுக்கு படித்தவர்கள் மீது ஒரு கோபம் உண்டு அதை நயமாக காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை அந்தப்பாடலை ஆடியோவில் கேட்டு விட்டு நிறைய எதிர்பார்த்தேன்.சோனியா அகர்வால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார், என்ன கோபமோ? பாடல்களில் இரண்டைத் தவிர வேறெதுவும் காட்சிகளுக்கு தேவையில்லை நீக்கி விடலாம்.இரண்டாம் பாதி நீளம் அதிகம் ஒரு கட்டத்தில் கிளம்பலாமா என்று பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.மூன்றாம் நாளே ஆப்பரேட்டர் இடைவேளைக்கப்புறம் சிலபல காட்சிகளை கட் பண்ண ஆரம்பித்து விட்டார்.

சரி க்ளைமாக்ஸ் பேக்ரவுண்டில் தனுஷ் பேச பொறுமையாக காட்சிகளில் மற்ற நிலைகளை காட்டியிருக்கலாம் தனுஷை நிதியமைச்சராக கெட் அப் காட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ ஸ்லைடு போட்டு விட்டார்கள்.

செல்வராகவனிடம் எதிர்பார்க்கப்படுவது மற்ற டைரக்டர்களைப்போல திரைக்கதையில் காட்டப்படும் வெரைட்டியல்ல கதையில் இருக்கும் வெயிட்.படம் முடிந்து வெளியே வரும்போது கூட்டத்தில் என்னை யாராவது குத்தி விடுவார்களோ என்று பயம் தான் வந்தது.

2 comments:

Unknown said...

:)

ragasiya snehithan said...

//படம் முடிந்து வெளியே வரும்போது கூட்டத்தில் என்னை யாராவது குத்தி விடுவார்களோ என்று பயம் தான் வந்தது.//

eggjactly :D :))