Tuesday, October 25, 2005

எதிர்ப்பதம்

எனக்குப் பிடிக்கவில்லை
வியர்வை வாடையோடு
மாற்றாத உடைகளினுள்
குளிக்காத உடல்கள்

ரயிலின் ஒவ்வொரு அதிர்விலும்
நெருக்கமாகும் எனக்கும் சேர்த்து
கழுத்து வரை அவள் போர்த்துவது கூட
துவைக்காத போர்வை தான்

அந்தக் குளிரான இரவில்
காதலின் உரிமையோடு
உச்சந்தலை திருப்பி - அவள்
காட்டிய திசையிலிருந்தது
எங்களைப் போலவே
அந்த அழுக்கு நிலா

Sunday, October 23, 2005

தேவதையல்ல

நீ தூசி விழுந்ததில்
கண் கலங்கிய போது தெளிந்தேன்...
"மனுஷி தான்"
மணற்பரப்பில் கிறுக்குவதிலிருந்து உன் விரல்களும்
மாலை வெயிலை ரசிப்பதிலிருந்து என் கண்களும்
சலிப்படையத் தொடங்கிய வேளையில்
நீ வெட்கப்பட ஆரம்பித்தாய்
நான் பயப்பட ஆரம்பித்தேன்