Friday, March 14, 2008

அமெரிக்க பொருளாதாரம் பலவீனம் - புஷ் ஒப்புதல்

இந்திய கணிணி நுட்ப நிறுவனங்களுக்கு இது கொஞ்சம் இல்லை ரொம்பவே கவலையளிக்கிற செய்தி தான். ஏற்கனவே வேலை குறைப்பு, சம்பள குறைப்பு என பல வழிகளில் ஐ.டி நிறுவனங்கள் ஈடு கட்டிக் கொண்டிருந்தன. கடைசியில் வேறு வழியில்லை, அமெரிக்க பொருளாதாரம் கடினமான நிலையை சந்திக்கிறது என்று புஷ் ஒப்புதல் பேட்டி அளித்துள்ளார்.

ஏற்கனவே ஒபாமா, தான் பதவிக்கு வந்தால் Outsourcing ஐ குறைப்பதாக உறுதி அளித்திருப்பதும், அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஹிலாரியும் அதே வாக்குறுதியை கொடுத்திருப்பதும் நினைவிருக்கலாம்.

சடசடவென ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்குவதை விட புதிய உத்திகள் (Strategies) பற்றி யோசித்தால் தொலை நோக்கு அணுகுமுறையாக இருக்கும். E.U லிருந்து கூட இந்தியாவோடு இத்துறையில் வியாபாரத்தை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பெரிய நிறுவனங்கள் நேரடியாக ஐ.டி மென்பொருட்களை தயாரிப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இதன் மூலம் உலக சந்தையில் ஏற்கனவே இந்தியாவிற்கு இருக்கும் பெயரை சிறக்க செய்யலாம்.

மற்றும் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் நம் நாட்டிற்கான ஐ.டி தேவையை பூர்த்தி செய்ய முயலலாம். எவ்வளவு நாள் தான் ஒரு கண்டத்தையும், Outsourcing என்கிற ஒரே ஒரு அணுகுமுறையையுமே நம்பப் போகிறோம்?

பி.கு: ஹ்ம்ம்.. அதுவும் நான் ஒரு ஐ.டி நிறுவனத்தில் சேரப்போகும் நேரத்தில் தானா நிகழ வேண்டும்? ஆம் நண்பர்களே, எனக்கு Caritor எனும் நிறுவனத்தில் Business Analyst ஆக Campus Interviewல் வேலை கிடைத்திருக்கிறது, இன்னும் மூன்று வாரங்களில் சேர வேண்டியிருக்கும், சென்னையா, பெங்களூருவா என தெரியவில்லை.

Wednesday, March 12, 2008

மூட நம்பிக்கையை மாற்றுங்கள்

இன்றைய தினமலரில் ( புதுச்சேரி இதழ் இரண்டாம் பக்கம்) சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவை கண்டித்து ஜார்கண்ட் மாநில‌ க‌ல்லூரி மாண‌விகள் வளையல், சேலை போன்றவற்றை அனுப்பி வைக்கப் போவதாக கூறி, தன்பாத் நகரில் நேற்று போராட்டம் நடத்தியாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள்.

அதில் போஸ் கொடுக்கும் விதமாக பெண்கள் பெருமையாக சேலை, வளையல் எல்லாம் வைத்திருந்தார்கள். சிரிப்பு சிரிப்பாக வந்தது. போராடுவதன் நோக்கம் நல்ல விஷயம் தான். போராடிய விதம் தான் சகிக்கவில்லை.

வளையல், சேலை அனுப்பி வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சின்கா கோழை என்றா? பெண்கள் கோழைகளா?

யார் இந்த யோசனையை கொடுத்ததோ... பாவம்... பெண் புத்தி பின் புத்தி என்கிற மூட நம்பிக்கையை நிரூபிக்காதீர்கள்.

அப்புறம் பழைய விகடனை புரட்டினேன் (March 12, 2008), ஹாய் மதனில் ஒரு கேள்வி "புத்திசாலி கூட தோற்கும் இடம் எது?" அதற்கு மதனின் பதில், "பெண்ணிடம் மட்டுமே". ஹாய் மதன் எனக்கு பிடித்தமான பகுதி. இக்கேள்வி ஒரு பாலினத்தை மட்டுமே குறிக்கவேயில்லை. ஆனால் ஏன் பதிலில் ஆண்கள் மட்டுமே புத்திசாலி என்கிற பாவம் வந்ததென்று தெரியவில்லை.

பி.கு: நான் இல்லை. இயல்பாக தோன்றிய கேள்விகள் இவை.