Friday, June 30, 2006

விஜயகாந்த் - நடிகர் சங்கத்தலைவர்?

விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...

என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?

அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.

ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.

அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.

Categories: ,

Sunday, June 25, 2006

சிக்குன் குனியாவால் ஸாரீஈஈஈஈஈ

சிலபல நாட்கள் தொல்லையில்லாமல் இருந்த நண்பர்களுக்கு வணக்கம்.சுமார் பத்து நாட்களாக சிக்குன் குனியா நாமக்கல் சேலம் பகுதிகளில் பாடாய் படுத்துவது அனைவரும் அறிந்ததே, இந்நேரம் பார்த்து எனக்கும் காய்ச்சல் வர எழுத இயலாமல் போய் விட்டது.முன்பே எழுத உட்கார்ந்தேன் அப்போது தான் தமிழ்மணம் விற்பனைக்கு என்கிற அதிர்ச்சி தகவலை பார்க்க நேரிட்டது.ஏனோ சோகம் மனம் கவ்வ எழுதும் மூட் போய் விட்டது.

அதுவும் நாமக்கல் சிபி போனில் தொடர்பு கொண்டு பேசிய அன்று தான் கடைசி நாள் எழுதியது என்று ஞாபகம்.அவருடன் பேசிய நிமிடங்கள் தான் செல்பேசியில் (ஒத்த பாலின மனிதருடன்) அதிக நேரம் பேசியவை, சுவாரசியமாக பேச்சு நீண்டது.தெரிந்தவர்களை தாண்டி இப்படி பேசுவது இப்படி அரிதாகவே நிகழ்கிறது.

ஆனால் வளர்சிதை மாற்றம் போட்டியில் தான் கலந்து கொள்ள முடியவில்லை,கவிதை எல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.ம்ச்ச்

இன்று முதல் வழக்கம் போல் தினமும் எழுத உறுதி தர இயலாது ஆயினும் Updates இருக்கும் ;)

Categories:

Wednesday, June 14, 2006

புட்பாலா கிரிக்கெட்டா

எங்க பாத்தாலும் புட்பால் பத்தியே பேச்சு,இன்னைக்கு பேப்பர்ல வயசான பாட்டி செத்துட்டதா டாக்டர்ஸ் சொன்னதுக்கப்புறம் திடீர்னு பாட்டி எந்திரிச்சு "ஜெர்மனி இன்னைக்கு விளையாடுதா?"ன்னு கேட்டிருக்கு.அதில்லாம இந்த தடவ ஜெர்மனி உலகக்கோப்பை வாங்கறத பாக்க தான் அவங்க உயிரோட இருக்கறதா பேட்டி வேற.

நமக்கு புட்பால் பாய்ஸ் ஸ்கூல்ல அறிமுகமாச்சு.நூறு பசங்கள பி.டி பீரியட்ல ஒரே ஒரு புட்பால குடுத்து ஓட்றா ராசான்னு அனுப்பிடுவாங்க கோச்சிங்லாம் ஒண்ணுமில்ல,பெப்பென்னு ஒரு கூட்டம் பந்த சுத்தி ஓடும், இன்னும் கொஞ்சம் குழுக்கள் அங்கங்க நின்னு பேசிக்கிட்டிருக்கும் அப்டியே பந்து வந்ததும் படார்னு கேம்க்குள்ள இறங்கி நாலு தள்ளு தள்ளிட்டு திரும்ப வந்து எங்கனயாச்சும் நின்னு பேச ஆரம்பிக்கும்.அது கோல்பாஸ்ட் இல்ல கோல் போஸ்ட்னு இப்ப தான் தெரியும் (ஆமா தானே?)அதில்லாம கிரிக்கெட் விளையாடக்கூடாது புட்பால் தான் விளையாடணும்னு ரூல் போட்டதும் தான் கொள்ள பேரு கிரிக்கெட் விளையாடவே ஆரம்பிச்சோம்.அதென்ன இது விளையாடக்கூடாது அது விளையாடக்கூடாதுன்னு சொல்றது...அப்டின்னு.

பாத்தா புட் பால் விளையாட அதிக உபகரணம் தேவையில்ல கிரிக்கெட் விளையாட என்னென்னமோ தேவ அப்டிம்பாங்க நாம தான் மரத்த ஸ்டெம்பாவும்,கிளைய பேட்டாவும் மாத்துற கேடிகளாச்சே அப்றமென்ன?

சரி எல்லோரும் சொல்றாங்களே,புட் பாலையும் பாப்போம்னு நேத்து பாத்தேன்,செக் நாடும் டோகோன்னு (?!) ஒரு நாடும் விளையாடிச்சு.நல்லா தான் போச்சு மஞ்ச சட்ட நாடு பாவமா இருந்ததால அது ஜெயிக்கணும்னு பாத்தேன்.கோல்போஸ்ட் பக்கத்துல நம்மாளு அடிக்கிற நேரம் வந்து சிவப்பு சட்ட ஒருத்தன் கெட்டியா பிடிச்சுக்கிட்டான் பா.அத அம்பயரு(வேற ஏதும் சொல்வீங்களோ தெர்ல) கண்டுக்கவே இல்ல,இதே மாதிரி சிவப்பு சட்ட பண்ண மஞ்ச சட்டயும் ஆரம்பிச்சிட்டானுவ. அடப்பாவிகளா ஏதோ சில தடவ கறுப்பு சட்ட அம்பயரு தடுத்தாரு அப்புறம் போங்கடா வெளக்கெண்ணங்கிற மாதிரி தேமேன்னு விட்டுட்டாரு போல.

கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டண்ணே வார்த்த விளையாட்டு இருக்குமே தவிர ஆளப்பிடிக்கிற கோக்கு மாக்கு வேல நடந்தது... அம்புட்டுதேன் கத.ஸ்டீவ் வாக் , இன்சமாம் பந்த தடுத்ததுக்கு அவுட் குடுத்தது நல்ல உதாரணம்.

ஆனாலும் ஒவ்வொரு விளையாட்டும் முன்னேறணும் அதுக்கு அதயெல்லாம் பாக்கணும்தான்...முயற்சி செய்(வோம்)யறேன்.

Categories:

Sunday, June 11, 2006

பெண்ணியம் போல் இது ஆணியம்

நான் அவ்வப்போது பெண்கள் மலர்,குடும்ப மலர் மாதிரி பத்திரிக்கைகளை படிப்பதுண்டு.பெண்கள் சமைக்க மட்டுந்தானா (அதிரடியாக வேறு வார்த்தை போட்டும் கேட்டிருந்தார்கள்) என்று முதல் பக்கத்திலும், நூல்கோல் சூப் வைப்பது எப்படி என்று கடைசி பக்கத்திலும் கோலம், வீட்டுக் குறிப்புகள்,ஆண் வர்க்கத்தை திட்டி ஒரு சிறுகதை என்று ஏகப்பட்ட வெரைட்டி கிடைக்கும்.

ஏனென்றே தெரியவில்லை பெண்களின் உலகம் அதாவது பெண்களின் மீடியா உலகம் ஆண்களை திட்டுவதாகவே அமைந்துள்ளது.எந்த பெண்கள் பத்திரிக்கையிலாவது ஆண்களின் படம்,அவர்களை பற்றிய குறிப்பு,மாதவன் என்ன ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார் என்றெல்லாம் இருக்கிறதா? இதே ஆண்கள் (சரி அப்படி எதும் இந்தியாவில் இல்லை/எனக்குத் தெரியவில்லை) அல்லது ஆண்கள் அதிகம் வாங்கும் பத்திரிக்கையை பாருங்கள்.சானியாவில் இருந்து நமீதா வரை எல்லா தகவலும் இருக்கும்,

ஓகே சீரியஸ்... என்ன சொல்ல வந்தேன் என்றால் நேற்று செல்வி தொடரில் கடைசி காட்சி பார்த்தேன் (ந்ண் எப்போதும் பத்து மணிக்கு மேல் தான் வீட்டிற்கு போவது...சீரியல்களை தவிர்க்க,ஆனாலும் நேற்று சீக்கிரம் போய் விட்டேன்) ராதிகா வில்லனை பார்த்து சில டயலாக்குகள் பேசி விட்டு கடைசியில் ஒருவரை ஒரு தள்ளு, இன்னொருவரை ஒட்சே ஒரு அடி ஆஹா...எனக்கு ஏனோ இது அந்நியமாகவே பட்டது,பெண்களை பற்றிய பழைய அபிப்ராயமோ என்னவோ...பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் பெண் போராடுவது,சண்டை போடுவது எல்லாம் சகஜம் தான் ஆனால் ஆண்களை திட்டுவது,ஆண்களை அடிப்பது ஏன் என்று தான் கேட்கிறேன்.

ஆண்கள் அதிகம் டாமினேட் செய்யுமிடமென சினிமாவை எடுத்துக் கொண்டால் அங்கே கூட ஆண்கள் ஆண்களுடன் தானே போராடுகிறார்கள் (சில அரிதான நிகழ்வுகளை தவிர்த்து).

அதே போல பெண்கள் விளம்பரங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்று போராட்டங்கள் நடத்துகிறார்கள்.அதே செல்வி தொடரின் இடைவேளையில் விளம்பரம் ஒன்று போடப்பட்டது, "இவரை நான் பத்து ரூபா கொடுத்து வாங்கினேன்" என்கிறார் ஒரு அழகி, பதறிப்போய் பார்த்தால் ஒரு பியூட்டி சோப் வாங்கினாராம் அந்த ஈ அழகனை அதற்காக 10 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்கிறார்.புற அழகை பார்த்து மயங்குவது சரியா தவறா என்கிற வாதம் வேண்டாம் (ஏனென்றால் ஆண்கள் பக்கம் வாதாடி நான் தோற்று விடுவேன்).அதென்ன பத்து ரூபாயில் ஆண்களை கேவலப்படுத்துவது, அசின் வரும் ஒரு கிரீம் விளம்பரத்திலும் இதே போலத்தான் கறுப்பாக இருக்கும்போது வேண்டாம் என ஒதுக்கும் ஆண் அசின் இக்கிரீம் பூசி அழகானதும் ஓடிப்போய் கெஞ்சுகிறார்.ஆண்களின் குணாதிசயம் தானே என்கிறீர்களா அப்படியானால் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள் பெண்களின் குணாதிசயம் அப்படியென்று.

அறியப்படுபவை (இவற்றில் ஒன்றோ பலவோ உண்மையாக இருக்கலாம்)
1.ஆண்கள் கேவலமானவர்கள் , பெண்கள் உண்மை பேசுபவர்கள்
2.ஆண்கள் கேவலமானவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள்
3.ஆண்கள் கேவலமானவர்கள், உப்பு போடாதவர்கள்
(இத்தோடு நிறுத்திக் கொண்டால் இப்பதிவு பெண்கள் இதழுக்கு போய் விடும்)
4.பெண்கள் ஆண்களை திட்ட முடியவில்லை திட்டுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்
5.4வது சொன்னது உண்மை என்று மீடியா நினைக்கிறது
6.பெண்கள் குறைகளை பெரிது படுத்துபவர்கள்

எப்படியாயினும் முடிவு ஒன்றே ஒன்று தான் இனி ஸ்ட்ரிக்டாக பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு போகக்கூடாது.

Categories:

Thursday, June 08, 2006

ஏழை என்பதில் என்ன பெருமை

"ஒவ்வொரு தடவை உணவுக்கும்
உயிர் விடுமளவுக்கு துணியும் நீ சாமுராய்
ஏழையிடம் மட்டுமே வீரம் காட்டுவதால்
நீயும் ஒரு போலீஸ்காரன்"

என்று கொசுவைப்பற்றி எழுத நினைத்தபோது எனக்கும் கூட ஏழை என்பது பெருமையான ஒரு பட்டம் போலத் தான் தோன்றியது. அண்ணா ஒருமுறை சொன்னாராம்,"இந்தியா ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு" (அண்ணாவா, நேருவா?).சினிமா ஹீரோக்களும்,அரசியல்வாதிகளும் சேர்ந்து ஏழை என்பது ஒரு சந்தோஷப்பட வேண்டிய பாக்கியம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

பணம் படைத்தவன் தவறான வழிகளில் மட்டுமே அந்நிலைக்கு வரமுடியும் என்பது போலவும்,இரவில் தூக்கம் வராமல் மாத்திரைகளை நம்புவது போலவும் நாம் உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.ஏழையாக கட்டாந்தரையில் படுத்தால் சுகமான தூக்கம் கொஞ்சும்,பஞ்சு மெத்தையில் படுத்தாலும் பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது இன்னும் என்னென்னவோ.

பணக்காரன் என்பவன் புத்திசாலி,எல்லோரும் ராஜ பரம்பரையில் பணக்காரர்களாகவே பிறப்பதில்லை, ஏழையாக இருந்து சரியான வழியில் நேரத்தை திட்டமிட்டு செலவழித்து கஷ்டப்பட்டே பணக்காரராகிறார்கள்.அப்படியே பிறக்கும்போதே பணக்காரராக பிறந்திருப்பினும் வெற்றியை தக்க வைப்பதை விட பெரிய சாதனை உண்டா?

நம்மாளு மிக சாதாரணமாக பொய் சொல்வான் அதுவும் ஆயிரம் பொய் அவன் அப்பவே நல்லா படிச்சான் என்று ஆரம்பித்து கல்யாணம் பண்ணின யோகம்யா என்பது வரை.ஏழையாக இருப்பது கேவலம் நம் சோம்பேறித்தனத்திற்கும், சரியான வழியில் முயற்சி செய்யாமல் இருப்பதற்கும் கிடைக்கிற தண்டனை என்பதும் நம் மக்களால் உணரப்படுவதே இல்லை என்பது கசப்பான உண்மை.

நாம் வேலை உருவாக்கும் படிப்பு எதுவோ அதற்கு முக்கியத்துவம் தருவதை விட வேலை கிடைக்கிற படிப்பு எதுவோ அதை தேடிப்போவதில் தான் ஆர்வம் காட்டுகிறோம்.வட மாநில மக்கள் கூட பொறியியல் படிப்புகளை விட நிர்வாக படிப்புகளுக்கு (MBA) முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அங்கே தங்கி விட்ட என் நண்பன் கூறுவான்.

ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதார உயர்வு மட்டும் நிகழ்ந்தால் போதும் அரசியல்வாதியில் ஆரம்பித்து நாட்டின் ஒவ்வொரு அரசாங்கத் துறையும் விழிக்கும்.ஏழையாக இருப்பதில் மமதை கொள்ளும் மனோபாவத்தில் இருந்து வெளி வருவோம்.கலாம் விரும்பிய இந்தியா 2020க்கு முன்பே கிடைக்கும்.

Categories: ,

Wednesday, June 07, 2006

இணையம்,டேட்டிங்,பணம்

முதல் முதலாக பத்தாம் வகுப்பு படித்தபோது இணையம் எனக்கு அறிமுகமானது.study in canada என்கிற விளம்பரத்தை பார்த்து விட்டு தட்டுத்தடுமாறி அறுபது ரூபாய் சேர்த்து இணைய மையம் வந்தேன்.ஏசி, அமைதியான இடத்தில் மெல்லிய இசை, ரெண்டே வார்த்தை பதில்கள் எனக்கு இது நம்மூர் தானா என்ற குழப்பத்தை உண்டாக்கின.தள முகவரி அடிக்க வேண்டிய இடத்தில் பொறுமையாக அடித்து வைக்க page cant be displayed காட்டியது.இன்னும் பொறுமையாக திரும்ப அடித்தேன் திரும்ப அதே...சுமார் அரை மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு ஜெயிக்கவில்லை...ஓனரைக் கூப்பிட்டேன்.அவர் இதுக்கு பேர் email id இது போட்டா ஒண்ணும் வராது இதப்போடணும் என்று அதில் இருக்கும் முகவரியை அடித்தார், வந்தது.அவர் போனதும் அதை close செய்தேன்.நானே திரும்ப இன்னொரு விண்டோ திறந்து studyincanada.comக்காக s என அழுத்தியதும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் முன்பே பார்க்கப்பட்ட தள முகவரிகள் காட்டப்பட்டன.ஏகப்பட்ட முகவரிகள் எல்லாமே sex என ஆரம்பித்தன, தலையில் இரு கொம்புகள் முளைத்தன

நண்பர்களிடம் பகிர்ந்தேன்... அவ்வளவு தான் ஒரு சிஸ்டத்திற்கு நான்கைந்து பேர் படையெடுப்போம் அப்போது தானே அறுபது ரூபாயும் ஷேர் ஆகும் அப்புறம் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் போல மூன்று மாதங்களுக்கு மேல் எனக்கே உவ்வே ஆனது.இணையத்தின் மற்ற பக்கங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்,இப்போது வரை ஆச்சர்யம் யாரிடமும் நான் எதையும் கேட்கவேயில்லை மின்னஞ்சல் எப்படி வேலை செய்கிறது என்பதில் ஆரம்பித்து இணையம் இயங்குவது வரை இணையமே எனக்கு கற்றுத் தந்தது.

அடுத்து நேரம் அதிகம் வீணானது இணையத்திலிருக்கும் டேட்டிங் தளங்களால் தான்.இணையத்தில் நான் புரிந்து கொண்ட முதல் பாடம் "இது அமெரிக்கர்களுக்கானது".இணையத்தில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி பெற அதிக வாய்ப்பு நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் தான்.டேட்டிங்கில் ஆரம்பித்து ஆன்லைன் வர்த்தகம் வரை இந்தியாவில் ஒர்க் அவுட்டாக வாய்ப்புகள் மிகக்குறைவு.

காரணம் இந்தியர்கள் "touch & feel" நம்பிக்கை உடையவர்கள்.தொட்டுப் பார்க்காமல் எதையும் வாங்க மாட்டோம்.அமெரிக்கர்களைப் போல ஒரு டிஜிட்டல் இமேஜைப் பார்த்து பொருளை நம்பி வாங்க மாட்டோம் வாங்கவும் முடியாது.தவறு இரு பக்கமும் தான்.கஸ்டமர் கேர் அவ்வளவு மோசமாக இங்கே உள்ளது.இப்போது நிறைய கம்பெனிகள் வந்திருந்தாலும் இந்திய ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் இதை இன்னமும் கூட புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.தான் ஏமாற்ற மாட்டோம் என்ற நம்பிக்கையை இந்தியாவில் ஒரு முறை உருவாக்கி விட்டால் பலமான அஸ்திவாரம் அமைத்து விடலாம்.

நான் சொல்ல வந்தது இதுவல்ல, இப்போதாவது உருப்படியாக மீதி நேரத்தை வலைப்பூக்கள் பதிப்பதில் செலவு செய்கிறேன் முன்பெல்லாம் டேட்டிங் தளங்களை பார்ப்பதும் ஆன்லைன் நண்பர்களை (ஹானஸ்ட்லி இருபாலினமும் தான்)சேர்ப்பதும் மட்டுமே வேலை.ஆணோ,பெண்ணோ சந்தித்ததில்லை.சில சமயங்களில் என்னால் சில சமயங்களில் அவர்களால்.முக்கிய காரணம் இணைய வலை எப்படிப்பட்ட ஆளாகவும்,புரிதல் உடையவராகவும் பழகி இருப்பினும் பார்க்காதவராக இருந்தால் நம்பிக்கையின்மையோடான ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.சமீப காலங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளில் எனக்கு முதலில் ஆச்சர்யமும் பின்பு ஆர்வமும் ஏற்பட்டது.ஆனால் நான் அச்சமயங்களில் எல்லாம் மிஸ் பண்ணி விடுகிறேன் அது மட்டுமின்றி தலைப்பை பார்த்து விட்டு படிக்கப் போனால் எல்லாம் தனி மனித அ சாதி சண்டைகளாக இருக்கிறது ஆதலால் நண்பர் வட்டம் ஏதும் இல்லை,நாமக்கல் நண்பர்கள் இருந்தால் நேரில் பார்க்கலாம்.மற்றபடி மெயிலில் சில நண்பர்கள் சந்தேகம் கேட்பதுண்டு.

ஆனால் இப்போது வேறு மாதிரி நிலை,இணையம் எனக்கு பணம் தர ஆரம்பித்து விட்டது. ஆம், வேலையை விட்டு விட்டு மேற்படிப்புக்காக கல்லூரி சேரும்வரை வீட்டில் இருக்கலாமென இங்கு வந்தேன். வலைப்பூக்களில் ஏதாவ்து செய்யலாம் என்று இணைய மையத்தில் உறுப்பினராக பணம் கட்டியபோது நான் web designer என்று சொல்ல அதே நாளில் ஒருவர் தங்களுக்கு ஒரு தளம் வேண்டுமென்று கேட்க ஒரு கல்லூரிக்கான அத்தளம் உருவாக்க ஆரம்பித்தேன்.அவர்கள் அதற்கு முன் bid செய்த ஒருவரின் சாம்பிள் தளத்தை காட்டினார்கள்,நான் தவறாக சொல்லவில்லை ஆனால் அது மிகவும் சாதாரணமானது,அதை விட மலிவாக தரமானதாக செய்து தர முதல் வேலை ஆரம்பமானது இப்போது வரை நான்கு ப்ரொஜெக்ட்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கின்றன.

சொந்த கம்பெனி ஆரம்பிக்க யோசிக்குமாறு மார்க்கெடிங் நண்பர்கள் சொல்கிறார்கள்,எனக்கு இதுவே கனவா,நனவா என்று தெரியவில்லை.

Categories:

Tuesday, June 06, 2006

லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு

நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அறிந்ததே.நான் இப்போது சுயதொழில் புரிவதால் நாமக்கல்லின் ஒரு இணைய மையம் (Browsing Center) தான் அலுவலகம்.நேற்று இந்த பரபரப்பில் நானும் முடிவு அறிவிக்க ஆரம்பித்தேன்.இந்த மாதிரி நாட்களில் தான் இம்மாதிரி மையங்களுக்கு வாய்ப்பு, ஒரு முடிவு அறிவிக்க பத்து ரூபாய்.

என் அத்தை மகன் பத்தாவது அவன் செல்லப்பெயர் லட்டு, இனி வருவதெல்லாம் அவன் அம்மாவின் பேட்டி:

"காலைல ஏழு மணி இருக்குங்கண்ணு, படக்குன்னு ஏந்திரிச்சான், பிதா சுதன் போட்டான்.அவனுக்கு புடிச்சது ஏசு தான்.அம்மா தண்ணி எடுத்து வை குளிக்கணும்னான்.எனக்கு ஒண்ணும் புரியல,அட நம்ம புள்ளைக்கு பக்தி எல்லாம் வந்துருச்சே அப்டியே சாமி ரூம் போனான் அவனுக்கு அடுத்து புடிச்சது கருமாரி அப்டியே கண்ண மூடி கும்பிட்டான்,வெளியே கிளம்பினான்.எங்க கண்ணு போறன்னேன், ஆஞ்சநேயர் கோயிலுக்குன்னான்,அம்மாவுக்கே அம்பது காசு கொடுக்காதவன் அவருக்கு அஞ்சு ரூபா உண்டில போட்டிருக்கானப்பா

என்னக்கூட்டிட்டு இண்டர்நெட் வந்தான்,கோகுலு இருப்பான்னு நெனக்கலயாட்டமிருக்கு, யம்மா என்னம்மா மாமா உள்ள இருக்கு அதனால என்னடா அவன்ட்டயே குடு சீக்கிரம் பாப்பான்னேன் என்ன நினைச்சானோ சத்தமில்லாம பக்கத்தால வேற ஆளுகிட்ட குடுத்தான்

கோகுல் முதுகப்பாத்தே டேய் லட்டு வாடா இங்கேன்னான் கிக்கிக்கீன்னு போனான் 234ன்னு பேப்பர் தந்தான் கோகுலு லட்டு பாசாயிட்டே ன்னான் நான் அப்பவே சொன்னேன் மாமா கண்டிப்பா பார்டர் பாஸாய்டுவேன்னுன்னான்

வேட்டே அப்பா கிட்ட தானே டேய் எத்தனடா மார்க்கு? ஒடனே நம்மாளு மார்க்கு தெர்லப்பா பாஸாயிட்டேன் அவருக்கு இடி இடிச்சாப்ல ஆய்டிச்சி அது யார்ராவன் பாஸானத மட்டும் சொல்றவன்
செரி இனி என்ன பண்ண ரெண்டு நாள்ல என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணனும்,நீயும் சொல்லு கோகுலு மாமாகிட்ட"

மதிப்பெண் மோகத்தில் அலையும் பெற்றோர் மத்தியில் திருப்தி படும் இவர் தங்கம் தான்.மனனக் கல்வியில் திறமை என்று காட்ட ஏதுமில்லை என்பது என் கருத்து.குறைந்த மதிப்பெண் வாழ்க்கையை பாதிப்பதும் தவறானதே.ஓவியத்தில் விருப்பமிருப்பவன் கணிதத்தில் பெயிலாகலாம் அதற்காக உடனே (இங்கே) பட்டறைக்கு அனுப்புவது என்ன நியாயம்? ராமானுஜரே பட்டப்படிப்பில் கணிதத்தில் மட்டும் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் பெயிலாவதுமாக இருந்தாராமே

எப்படியாயிருந்தால் என்ன...? லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு கொண்டாடு

Categories: ,

Friday, June 02, 2006

பயம்...பயப்படுத்தும்

"மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுத் தர வேண்டுமா?" என்பது போல பயம் எப்போதிருந்து ஆக்ரமித்ததென்றே நினைவில்லை, ஆனால் இப்போது வரை இருக்கிறது.ஆண் அழக்கூடாது, பயப்படக்கூடாது என்பவை கட்டாயம் என்கிற மாயை இருப்பதால் அதை வெளிக்காட்ட மறுக்கிறேனே தவிர பயம் என் நிழலை விட எனக்கு நெருக்கமானது.தனிமையோ, இரவு பன்னிரெண்டு மணியோ நிச்சயம் பயத்திற்கான காரணிகளாகப்படவில்லை.காரணம் இரவு 11 -12 மணிக்கு தனியாக சுற்றிய அனுபவங்கள் உண்டு.பயம் அந்த ஒரு குறிப்பிட்ட நாளுக்கு சொந்தமானது அப்போது மட்டுமே அது வரும்.

கல்லூரி படித்தபோது சில நாட்களில் இரவு 12,ஒரு மணிக்கெல்லாம் பாத்ரூம் போக வேண்டிய கட்டாயம் வரும், தண்ணீர் அதிகம் குடித்தால் ;).அப்போதெல்லாம் பயமும் சேர்ந்து வரும்.அதை வீட்டில் சொன்னால் என்னடா இத்தனை வயசாயிடுச்சு இன்னமும் பயப்படுற என்பதில் ஆரம்பித்து ஆண்பிள்ளை வரை தேவையில்லாத சம்பந்தமில்லாத துறைகளுக்கெல்லாம் போவார்கள் என்பதால் அமைதி காப்பேன் யாராவது எழுந்தால் போகலாமென்று.ஆனால் கடைசியில் தனியாகத் தான் போக வேண்டி வரும்.அதுவும் பாத்ரூமில் கொஞ்சம் அதிக நேரம் நிற்க வேண்டி வரும் பாருங்கள்... கொடுமை.ஒரு நாள் ரொம்ப கடுப்பாகி விட்டது நானும் பயப்படுகிறேனே தவிர பேய் எதையும் பார்த்ததில்லை.நின்று இப்போ பேய் ஏதாவது இருந்தா வரணும் நான் பார்க்கணும் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் நின்று இருக்கிறேன்.அப்போதெல்லாம் "என்ன தம்பி கூப்டியா?" என்று ஏதாவது குரல் கேட்டிருந்தால் ஐயய்யோ Horrible!

இப்போது வரை பேய் என்கிற கான்செப்டில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை, இருளில் நடக்கும்போது பின்னால் ஏதாவது சத்தம் கேட்டால் பயந்த மனது தனக்கேற்றவாறு கற்பனை செய்துகொள்கிறது, திரும்பிப் பார் ஒன்றுமில்லை வெறும் காற்று தான் என்று மூளை சொல்லும் ஆனால் எங்கே முடிகிறது?
அதே போல செத்தவர்கள் எல்லாம் பேயாக வேண்டுமானால் எத்தனை ஆடு,கோழி நானே சாப்பிட்டிருப்பேன் அதெல்லாம் வராதா ஏன் மனித உருவமே பேயாகிறது அதுவும் பொதுக்கூட்டத்தில் வரவேண்டியது தானே ஏன் தனியாக ஒருவன் போகும்போதே வர வேண்டும் என்றெல்லாம் வக்கணையாக யோசிப்பேன் ஆனால் பயம் பயம் தான்.

மற்றபடி இதெல்லாம் ரகசியம் தான் காரணம் நான் பயப்படும் தருணங்கள் அரிதானவையாகி விட்டன.அதில்லாமல் மற்றவர்களை பயப்படுத்தும் அளவு பேய்க்கதை சொல்லமுடிவதால் அவர்களின் பயத்தை பார்த்துவிட்டு இப்படித்தானே நீயும் பயப்படுகிறாய் என்று எனக்கே கேலியாக இருக்கும்.இப்படி பயப்படுத்துவதற்கெனவே நிறைய கதைகள் உண்டு,அதில் மிக புகழ் பெற்றது மோதிரக்கதை... இப்போது வரை 100% இக்கதை மூலம் பயப்படுத்த முடியும் அவ்வளவு அருமையாக யோசித்திருக்கிறார்கள்
யாரென்று தெரியவில்லை அதுவும் இரவில் ஒரு கும்பலைக்கூட்டி இதை சொன்னால் பெட்டர்.மற்றபடி ஒரு பேய்க்கதைக்கான சூழலை உருவாக்கினால் போதும்.பலகீன இதயமுள்ளோர், குழந்தைகள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

ஒரு ஏழைக்கிழவி தன் மகனோடு இருந்தாள் அவளுக்கு தங்க மோதிரம் போட ரொம்ப ஆசை தன் சொத்தை விற்று போடுகிறாள், அன்று நல்ல மழை சோம்பேறி மகன் கோபத்தில் கொன்று விடுகிறான் எல்லோரிடமும் மறைத்து நோயில் செத்ததாக புதைத்து விடுகிறான் அன்றிரவு தான் நினைவு வருகிறது தங்க மோதிரம் கழட்டாமல் விட்டது...போய் தோண்டி பிணத்தின் கையிலிருந்து மோதிரத்தை உருவுகிறான் ஆனால் அது வரவேயில்லை அந்த மோதிரவிரலை வெட்டி மோதிரத்தை எடுத்துப் போகிறான்.அதற்கப்புறம் அவனுக்கு பணம் குவிகிறது. பங்களா, மனைவி என்று செட்டிலாகி விட அதே போல ஒரு மழை நாள்...
அதே போல ஒரு கிழவி வாசலில் ஹீனமான குரலி "ஐயா பசிக்குதுய்யா" என்கிறாள்
இவனுக்கு மனது கேட்கவில்லை, அவளை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறான்.நலம் விசாரித்தான்.
சாப்பாடு போட்டான், அவன் தாய் போலவே இருக்கிறாள்,

"ஏன்மா உங்க குடும்பத்தில யாருமில்லயா?"
"இருந்தாங்கப்பா என் மகன் கடைசி வரை இருந்தான் இப்போ பிரிஞ்சிட்டான் கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன்"
"சரி சரி சாப்பிடுங்க"

அவ்வப்போது கிழவி அவனை தீர்க்கமாக பார்க்கிறாள், அவன் மனசாட்சி குத்த குனிகிறான் அப்போது தான் கவனித்தான்...கிழவிக்கு மோதிர விரல்...இல்லை
"என்னம்மா இது மோதிர விரலக்காணோம்"
"அது...வெட்டிட்டாங்கப்பா"
"யாரும்மா வெட்டினது?" கேட்டது தான் தாமதம் கிழவி சடாரென நிமிர்ந்து முறைத்து பார்த்தாள்
"இல்ல தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் யாரும்மா வெட்டினது?"
..
..
..

நீ தான்

இதை மட்டும் திடீரென சத்தமாக சொல்ல வேண்டும் ஒருமுறை கம்பெனியில் எல்லோரையும் உட்கார வைத்து சொன்னேன், ஒரு பெண் பாவம்...வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
என் பயமும் கூட என்னைப்பொறுத்தவரை இப்படி ரசிக்கக்கூடியதாக வாழ்வின் சுவைகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது,இருக்க வேண்டும் ஆதலால் பேய்கள் வாழ்க

Thursday, June 01, 2006

அருவி அபாயங்கள்

காட்டருவிகள் உற்சாகம் தருபவை, பெரும்பாலும் மலைகளுக்கிடையே மட்டுமே காண முடிவதால் அவற்றை நினைத்தாலே லேசாக குளிரடிக்கும்.ஆனால் அருவிகளின் இன்னொரு முகம் கோரமானது.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது அடிக்கடி கொடைக்கானல் மற்றும் அடிவாரத்திற்கு டூர் போவோம்( பழனியிலிருந்து கொடைக்கானல் ரொம்ப பக்கமே).அங்கே கொடைக்கானல் அடிவாரத்தில் ஒரு 4 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அருவி உண்டு.காட்டுப்பாதை நடந்து தான் போக வேண்டும், அங்கே ஹோட்டல் முதலாளி,வேலை செய்தவர்கள் எல்லாம் இப்போதும் எங்கள் நெருங்கிய நண்பர்கள் (வள்ளுவர் ஹோட்டல் என்பது பெயர் பழனியில் புகழ்பெற்றது).பிரியாணி செய்து ஐம்பது பேர் போனோம்.4 கிலோமீட்டர் தள்ளி அவ்வளவு அழகாக ஒரு அருவி அது தான் காட்டுப்பாதையின் முடிவு.சலசலவென தண்ணீர் சப்தம் நண்பர்கள் கையோடு 'தண்ணி' எடுத்து வந்திருந்தார்கள் (அப்போதெல்லாம் நான் பழகியிருக்கவில்லை நல்ல பையன்...) ஸ்னாக்ஸ் கொள்ளையை ஆரம்பித்தோம், தண்ணியடிப்பவன் பக்கத்தில் இப்படி ஒரு கும்பல் கடுப்பேத்தும் ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவது தான் ஹைலைட்.

ஒரு இருபது பேர் அப்படியே குளிக்க கிளம்பினோம்.அருவி என்றால் ஒரே ஒரு இடத்தில் இருந்து விழவில்லை கொஞ்ச தூரத்தில் மெயின் அருவி விழ அங்கே ஒரு பழைய காலத்து குட்டி அணைக்கட்டு ஸ்டைலில் தடுப்பு இருக்க அதற்கு கீழே ஓட்டைகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.நாங்கள் அந்த தடுப்பின் மேல் அமர்ந்திருந்தோம்.ஐஸ்கட்டிகளை மொத்தமாக உருக வைத்திருந்தால் எவ்வளவு சில் என்றென்று இருக்குமோ அப்படி இருந்தது, அப்படியே குளித்தபோது ஒருவன் இங்கிருந்து நீந்தியே மெயின் அருவிக்கு போகலாம் என்றான் எல்லோரும் ஒப்புக்கொண்டோம்.எனக்கு அப்போது ஷான் நீச்சல் பழக ஆரம்பித்திருந்த காலம் லேசாக உதறல் தான் இருப்பினும் 20 பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் நீந்த ஆரம்பித்தேன் பார்க்கும்போது ரொம்ப பக்கம் போலத் தெரிந்த அருவி நீந்தும்போது ஏதோ தொலைவில் தெரிந்தது ஒவ்வொருவராக என்னைத் தாண்டிப்போக ஆரம்பித்திருந்தார்கள் நான் தான் கடைசி சரி கொஞ்ச நேரம் நின்று விட்டு நீந்துவோம் என்று அப்படியே நின்றேன் மார்பளவு தண்ணீரில் தரை தட்டுப்பட்டது ஊறிய இலை,தழைகளோடு.ஒரு நொடி தான் அப்படியே காலில் தரை கரைகிற உணர்வு அதாவது அது தரை இல்லை இலை,தழைகள் கடைசி வரை அது மட்டுமே அதாவது நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் இத்தனையும் ஆலோசித்தபோது தான் உறைத்தது வாய் வரை முழுகி விட்டது மூளைக்குள் முதுகெலும்பு வழி மின்சாரம் வ்ர்ரென பாய கண்களை மூடிக்கொண்டு நீந்த ஆரம்பித்தேன் 20 பேரையும் முந்தி வெறும் ஒரு நிமிடத்தில் மெயின் அருவியைத் தொட்டிருந்தேன்.என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.

இதற்கடுத்து சொல்லப்போவது மிகவும் பயங்கரமானது மற்றும் இப்போதும் நிகழும் சம்பவம்.என் பக்கத்து வீட்டு நண்பர் பொள்ளாச்சி அருகே அருவிக்கு குளிக்க அவர் நண்பர்களுடன் போயிருக்கிறார்.குளித்துக் கொண்டிருக்கும்போதே பத்து பேரில் ஒருவரைக் காணோம், சரி என்று விட்டு விட்டார்கள் போகும்போது தான் சீரியஸ்ஸாக உறைக்க எல்லோரும் தேடியிருக்கிறார்கள் ஆளே கிடைக்கவில்லை இரவு வரை கிடைக்கவில்லை மறு நாள் போலீஸுக்கு தகவல் சொல்லி, குடும்பத்திற்கு தகவல் சொல்லி எல்லோரும் வந்திருந்தார்கள்.கூட்டம் கூடி பேசிக்கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், ஒருவேளை தண்ணீருக்குள் பாறைகளில் சிக்கியிருக்கலாம், இங்கிருக்கும் ஊசி,தேனெடுப்பவர்களை கேட்டால் தேடிப் பார்ப்பார்கள் என்று.அவர்களை அழைத்திருக்கிறார்கள் தேடிப்பார்க்க அவர்கள் செய்த டீல் தான் கொடுமையானது பதினைந்தாயிரம் டிமாண்ட் செய்திருக்கிறார்கள்.அப்போதும் பிணம் தான் கிடைக்கும் என்று சொல்லி.தரும் வரை போகவில்லையாம், தந்ததும் வெறும் அரை மணி நேரம் தானாம், கால் பாதத்திற்கு மேல் ஒரு காயம் பாறையிடுக்கில் சிக்கி உயிர் போய் விட்டது என்று கூலாக சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

என் நண்பருக்கு சந்தேகம் பொறுமையாக விசாரிக்க பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன அதாவது அந்த சிலருக்கு அது தான் வேலையாம் அவர்களுக்கு தண்ணீர் ஆழத்திற்குள் இருக்கும் அத்தனை விஷயமும் தெரியுமாம்.தண்ணீருக்குள்ளேயே காத்திருந்து இப்படி வருபவர்களில் அவ்வளவு லாவகமாக நீந்தத் தெரியாதவரை சரேலென நீருக்குள் காலைப்பிடித்து இழுத்துப்போய் பாறையிடுக்குகளில் வேகமாக அடித்து சொருகி வைத்து விடுவார்களாம்.அப்புறம் ஒன்றும் தெரியாத மாதிரி வெளியே வந்து விடுவது.எதற்காக... அந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துக்காக.அதைக் கேள்விப்பட்டதில் இருந்து இப்போது வரை அருவிகள் எனக்கு பயத்தையும் மிரட்சியையுமே தருகின்றன.

ஆகவே எச்சரிக்கை தெரியாத அருவிகளில் குளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.