Tuesday, May 30, 2006

தமிழ்மணத்திற்கு என் ஐடியாக்கள்

தமிழ்மணத்தில் இப்போது புதிதாக Cloud அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இது போல தர நிர்ணயம் (Quality Check) பயனர் மூலமாகவும் கேட்பார்கள்.என் தளத்திற்கு 90 சதவீத ட்ராபிக் தமிழ்மணம் மூலமே வருகிறது ஆதலால் சில யோசனைகள் தரலாம் என விழைகிறேன்.

"Search Column" ஒரே ஒரு டைப் பண்ணும் பகுதி மற்றும் Enter பட்டனோடு முதல் பக்கத்தில் வைப்பது தான் சிறந்தது மற்றும் வழக்கமானது.ஆனால் நம் தமிழ்மணத்தில் அது இரண்டாம் பக்கம் ஒரு லிங்க் வைத்து இன்னும் ஒரு புது பக்கமாக வருகிறது.இவ்வளவு தூரம் வந்து பார்க்க பயனர் யோசிக்க மாட்டார் அல்லது அப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாமல் போய்விடும்.

மறுமொழி மட்டுறுத்தல் (Comment Moderation) மூலம் அதிக கமெண்ட் தரப்பட்ட பக்கங்கள் தனியே காட்டப்படுகின்றன.அதிக பேர் பாராட்டியோ விவாதித்தோ தரப்படும் கமெண்ட்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது,(எனக்கும் நிறைய முறை இங்கு இடம் கிடைக்கிறது என்றாலும்)இந்நோக்கமே சிதைபட்டுள்ளது.பெரும்பாலும் கமெண்ட்களில் வாக்குவாதங்கள் தான் நிகழ்கின்றன.இதனால் தரமில்லாத பதிவுகளும் கூட சில சமயங்களில் இடம் பெற வாய்ப்புள்ளது/நல்ல பதிவுகள் இடம் பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது அதாவது கமெண்ட் எழுதப்படாத நல்ல பதிவுகளும் உண்டு எல்லா பிரச்னைகளையும் தெளிவாக அலசும் பதிவுகளுக்கு பாராட்டை தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றாது, ஏற்கனவே பத்து பேர் பாராட்டியிருந்தால் அடுத்து வருபவர் சொல்ல நினைப்பதை அவ்வளவு பேரில் யாராவது ஒருவர் சொல்லியிருப்பார்.இதற்கு பதில் அதிகம் பேர் விசிட் செய்த பதிவுகளை காட்டலாம் (எப்படி என்று நானறியேன் ஒரு யோசனை அவ்வளவே)

ஒரு பதிவை ஒருவர் தமிழ்மணத்தில் அப்டேட் செய்ததும் 'ஜன்னலை மூடு' என்று காட்டுகிறது அப்படியே அருகே தமிழ்மணத்தின் மூலப்பக்கத்திற்கு ஒரு லிங்க் தரலாம்.பதிவருக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஓய்வாக ஏதேனும் படிக்கத் தோன்றும் உடனே தமிழ்மணம் வர ஏதுவாக இருக்கும்.

கவிதை,சிறுகதைகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை அதற்கு ஏதாவது போட்டி நடத்தலாம் (பரிசு... ட்ராபிக் தான்) சிறந்த நான்கு வரி கவிதை ஒன்றை தினமும் தேர்ந்தெடுத்து முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் போடலாம்.

புதுப்பேட்டை - விமர்சனம்


படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்டியே டான்செட் எழுத சென்னை வந்து மறு நாள் படம் பாக்கலாம்னு தியாகராஜா போனோம்.அங்கே தான் சனி,ஞாயிறு ரிசர்வ் பண்ணாம டிக்கட் கிடைக்கும்.சில தடவை படம் பாக்கப்போறப்ப "ஹை சூப்பர்"னு துள்ளலாம் அதும் முத மூணு நாளைக்குள்ள அப்டியாப்பட்ட படம் பாக்றது பெரிய அதிர்ஷடம்னு நினைப்பேன், காதல்,காதல் கொண்டேன் மாதிரி.ஆனா எல்லா தடவையும் நாம நினைக்கிறது நடந்துடுதா என்ன?

மிகவும் சாதாரண அரதப்பழைய கதை, மிக சாதாரண ஏழைப்பையன் தாதாவாகிறான்.தாதாக்களின் கதைகளில் வேறெதுவும் பெரிதாக சொல்ல முடியாது என நினைத்தோ என்னவோ திரைக்கதை பலமாக கட்டப்பட்டிருக்கிறது.முதல் பாதியை செதுக்கியிருக்கிறார்கள்.அட்டகாசம் ஒரு பத்து நிமிடம் படம் போன பிறகு புதுப்பேட்டை என்று டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.

தனுஷ் ஸ்கூல் யுனிபார்மில் வருவதிலிருந்து அரசியல்வாதியாக மேடையேறுவது வரை குறையில்லாமல் நடித்திருக்கிறார்.தாதா என்பவனுக்கான ஒரு ஆஜானுபாகுவான உருவம் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேஷிவலாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.ஆக்ரோஷம், சிரிப்பு, கோபம் என எல்லா ஏரியாவிலும் தனுஷ் ஆட்டம் தான்."அம்மான்னா ரொம்ப பிடிக்குமா" என்றதும் லேசாக சிரித்து விட்டு "யாருக்குத்தான் பிடிக்காது?" என்பது அற்புதம்.அதே போல தனியாளாக எதிரிகளிடம் மாட்டி மரண அடி வாங்குவதும் சீறி திருப்பி அடிப்பதும் மிகவும் இயல்பு.தனுஷை சராசரியானவராக காட்டியிருக்கிறார்கள் அதுவும் பலமே, ஸ்நேகாவை விபசாரத்திற்கு அனுப்பக்கூடாது என்பதும்,பிறந்த பிள்ளையை தன் முகம் வைத்து தன் மகன் தானா என பார்ப்பதும், ஸ்நேகா போகிறேன் என்றதும் பணம் வேணுமா என்பதுமாக.

அடுத்தது ஸ்நேகா, நிச்சயம் பராட்ட வேண்டிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.குடும்பப்பாங்கான அவர் விலைமாதுவாக நடிக்கப்போகிறார் என்றதுமே பல ரசிக நெஞ்சங்கள் வெடித்திருக்கும் (பெண்கள் உட்பட).அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பொசுக்கென்று அழுவதும், "இப்பவேவா" என தைரியமாக கேட்கும் பெண்ணாகவும் மெல்லிய இயல்புகளை நிறைய இடங்களில் காட்டியிருக்கிறார்.

மற்றும் தனுஷின் அப்பா,கஞ்சா கும்பல் லீடர் அன்பு, அதற்கடுத்த அரசியல் தலைவர்,எதிரி மூர்த்தி,நண்பர்கள் எல்லாருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.நிறைய முகங்கள் அதிகம் இதற்கு முன் பார்க்கப்படாதவை, இனி கவனிக்கப்பட வேண்டியவை.

தைரியமான காட்சிகளும் அதிகம், கெட்ட வார்த்தையில் தாயை ஒருவன் திட்டுவதை காட்டுவது, வெட்டு குத்து,விலைமகள் வாழ்க்கை,ஜன நாயகத்தில் நிகழ்வதை காட்டும் க்ளைமாக்ஸ் இப்படி நிறைய.

டைமிங் ஜோக்ஸ் ஏராளம், கதையோடு இப்படி சேர்க்க செல்வராகவனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.முதல் தடவை கையை வெட்ட தனுஷை கூட்டிப்போகும் ரவுடி பண்ணும் கமெண்ட்களில் தியேட்டர் அதிர்கிறது.அதுவும் கடைசியாக வேலை முடித்தபின் "கவலைப்படாத மேல உன்னப்பத்தி நல்லா சொல்றேன்" என்பது சூப்பர்.

படத்தின் இசை,திரைக்கதை,காட்சியமைப்பு என எல்லா ஏரியாவும் திருப்தியே ஆனால் கதை ஹிஹி அங்கே தான் சறுக்கலே.தாதாக்களின் வாழ்க்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை ஆமாம் என்கிற மாதிரி காட்டப்பட்டிருக்கிறதே தவிர தாதாக்களின் ஹீரோயிசம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.
எளிய உதாரணம் தனுஷைத் தவிர வேறு யாருமே துப்பாக்கி உபயோகப்படுத்தாதது, ஆரம்பத்திலேயே தனுஷ் வரிசையாக கொலை செய்ய எல்லோரும் தேமே என இருப்பது,சாவது, போலீஸ் எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் இப்படி மற்ற தாதா படங்களில் என்னென்ன குறைகள் இருக்குமோ அவை இங்கேயும் ப்ரெசண்ட் சார் சொல்கின்றன.

ஸ்நேகா முதல் தடவை ரயில்வே ஸ்டேஷனில் காட்டப்படும்போது விலைமாதுவாக மேக் அப் அப்படி பொருந்துகிறது ஆனால் அப்புறம் எல்லாம் பாந்தமான முகம் தான், அதுவும் விலைமகளாக கொஞ்சம் காட்சிகள் தான் மற்றபடி தாதா மனைவியாக பதிகிறாரே தவிர விலைமகளாக பொருந்தவில்லை, விலைமாதுவின் பிரச்னைகள் அதிகம் சொல்லப்படாததும் ஒரு காரணம். வேறொருவனுடன் இருக்கும்போது தனுஷ் போனில் பேசும்போது நடக்கும் சித்ரவதை காட்டப்படுகிறது, ஆனால் விலைமாதுக்களின் நடைமுறைப்பிரச்னைகள் அதை விட அதிகம் அதுவும் உடலை விட மனம் சம்பந்தப்பட்டவை ஆனால் அவை எதுவும் இங்கே காட்டப்படவில்லை படத்திற்கான ரிசர்ச்சின்போது விலைமகள் பற்றிய சிறுகதைகள் படித்திருந்தால் கூட போதும்.

அதேபோல அதீத வன்முறை காட்சிகள், இப்படிப்பட்ட கதைக்கு இப்படித்தான் எனலாம் ஆனால் தாதாக்கள் வெட்டுவதால் வாழ்பவர்களில்லை வெட்டுவேன் என்று மிரட்டியே வாழ்பவர்கள் அவர்கள் பிரச்னை உயிர்பயம் தான் ஆனால் கிரவுண்டில் நூறு பேரை அநாயசமாக வெட்டுவதெல்லாம் அய்யய்யோ...

எடுத்தவுடனே தனுஷ் எஞ்ஜாய் பண்ணுகிறார் என்று காட்ட எங்க ஏரியா பாடல் இது போன்ற விஷயங்களை செல்வராகவனால் தவிர்க்க முடியவில்லையா? அதிலும் இயல்பாகவே சென்னை பையன்களுக்கு படித்தவர்கள் மீது ஒரு கோபம் உண்டு அதை நயமாக காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை அந்தப்பாடலை ஆடியோவில் கேட்டு விட்டு நிறைய எதிர்பார்த்தேன்.சோனியா அகர்வால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார், என்ன கோபமோ? பாடல்களில் இரண்டைத் தவிர வேறெதுவும் காட்சிகளுக்கு தேவையில்லை நீக்கி விடலாம்.இரண்டாம் பாதி நீளம் அதிகம் ஒரு கட்டத்தில் கிளம்பலாமா என்று பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.மூன்றாம் நாளே ஆப்பரேட்டர் இடைவேளைக்கப்புறம் சிலபல காட்சிகளை கட் பண்ண ஆரம்பித்து விட்டார்.

சரி க்ளைமாக்ஸ் பேக்ரவுண்டில் தனுஷ் பேச பொறுமையாக காட்சிகளில் மற்ற நிலைகளை காட்டியிருக்கலாம் தனுஷை நிதியமைச்சராக கெட் அப் காட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ ஸ்லைடு போட்டு விட்டார்கள்.

செல்வராகவனிடம் எதிர்பார்க்கப்படுவது மற்ற டைரக்டர்களைப்போல திரைக்கதையில் காட்டப்படும் வெரைட்டியல்ல கதையில் இருக்கும் வெயிட்.படம் முடிந்து வெளியே வரும்போது கூட்டத்தில் என்னை யாராவது குத்தி விடுவார்களோ என்று பயம் தான் வந்தது.

Thursday, May 25, 2006

நகம் வளர்த்தேன் நான் நகம் வளர்த்தேன்

கல்லூரியில் படித்த போது அப்படியொரு நீளமான நகம் வளர்த்திருந்தேன்.காரணம் ச்சும்மா தோணுச்சு வளர்த்தினேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை just to impress others வேறென்ன? அதிலும் குறிப்பாக சில கூடப்படிக்கும் பெண்களை.மற்றும் பலரும் பலவிதமான காரணங்களை சொன்னாலும் கடைசியாக மற்றவர்களை கவருவதில் தான் வந்து நிற்கும்.இப்படி கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே மிக நீளமான நகம் வளர்த்தவர் இப்படி வளர்த்தால் விரல்கள் செயலிழந்து விடும் எனத்தெரிந்தும் வளர்த்தேன் என்று சொன்னதாக படித்த போது வேறென்ன தோன்றும்?

உண்மையில் இதற்கு பலனுண்டு, நிஜமாகவே நிறைய பேரை நம் பக்கம் கவனிக்க வைக்க ஒற்றைத்தோடு, முன் தலை கலரிங், கறுப்பு band ஆகியவை உதவும் அதுவும் நம்மையுமறியாமல் நாம் எதிர்பார்க்காதவர்கள் கூட கவனிப்பார்கள்.அப்படித்தான் என் ஹிட்லிஸ்ட்டில் இருந்த பெண்கள் கவனித்தார்களோ இல்லையோ ஹெச் ஓ டி கவனித்தார்.அப்படியே அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார்.

ஒரே ஒரு தேவைக்காக இம்மாதிரி அசவுகரியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பது தான் கொடுமை.அதிலும் அம்மாவிலிருந்து யாரென்றே தெரியாத பயணி வரை, “ஏன்ப்பா இப்படி வளர்க்கிறே?” என்பார்கள் ஏதோ சாதனைப்பயணத்தை விசாரிப்பது போல. இப்படித்தான் பக்கத்து வீட்டு சிறுமி கேட்க “அதுவா என்னை யாராவது தொணதொணன்னு கேள்வி கேட்டா கோபம் வந்து அவங்க கன்னத்துல ஒரு கீறு கீறிடுவேன்” என்றேன் முகத்தில் கொஜ்சமும் சலனமின்றி .அதற்கப்புறமும் அவள் என்னிடம் பேசினாள் கொஞ்சம் தள்ளி நின்றே.

உண்மையிலேயே கீறல்கள் விழாமல் இருக்காது அதுவும் கூட இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.அதாவது கபடி,நீச்சல் ஆகியவற்றில் முக்கியமாக, முக்கியமின்றி இன்னபிற.தான் பாதிக்கப்படுவதென்றால் நல்ல தூக்கத்தில் கொசுக்கடி மற்றும் மிக அரிதாக சாப்பாட்டு இலையை கவனிக்காமல் கழுவும்போது.அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது அடுத்த முக்கிய வேலை.சிலர் இதை செய்ய சோம்பேறித்தனப்பட்டு நெயில் பாலிஷ் போடுவதும் உண்டு.

சினிமாக்களில் ஹீரோ யாரும் வைத்திருந்தார்களா நான் பார்த்ததில்லை.ஆனால் நிச்சயம் நீள நகம் வளர்ப்பது தவறு.காரணம் என் நீள நகத்தின் சோக மற்றும் பயங்கரமான முடிவு தான்.மெல்லிய பலகீன இதயமுள்ளவர்கள் முடிவை படிக்க வேண்டாம்.

பேருந்தில் புட்போர்டு போடுவது சிலபஸ்ஸில் இல்லாத கடமை.அப்படி கடைசியாக கல்லூரி ஸ்டாப்பிங்கில் குதித்த போது தான் சுளீர்ரென்று ஒரு வலி தண்டுவடம் தாண்டி வேகமாக மூளைக்கு செய்தி அனுப்பியது.கண்கள் திருப்பினால் பாதி நகம் பழைய அலுமினிய கடைசி ஜன்னலில் சிக்கி கிழிந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.கத்த நேரமில்லை பஸ்ஸை எடுத்து விட்டார்கள் இன்னமும் பாதி நகம் தான் வலித்தாலும் பரவாயில்லை என்று வேகமாக இழுக்க நான் நினைத்தபடியே அப்படியே நக முனை நோக்கி கிழிந்து கையை விடுவித்தேன்.

ஆகவே ஆபத்துகள் நாம் அறியாத திசையிலிருந்து தான் வரும் என்பதை மனதில் கொண்டு நகம் வளர்ப்பவர்கள் யோசிக்கவும்

Monday, May 15, 2006

லாஜிக் லாஜிக் லாஜிக்

தமிழ் சினிமா என்று தனிமைப்படுத்தக்கூடாது, தேசிய அளவிலேயே நம்முடைய லாஜிக் மீறல்கள் அதிகம் அதுவும் சினிமா என்பதை தாண்டி சீரியல்,விளம்பரங்கள் வரை ஒரே காமெடி தான்.நானும் என் மாமாவும் (அதிசயமாக) பொதிகை சேனலை பார்த்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு விளம்பரம், டாக்டர் சொல்கிறார் "நீங்க அப்பாவாயிட்டீங்க" உடனே அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் "ஆ நிஜமாவா" அடப்பாவிகளா என்னய்யா எxபிரஷன் இது.

அதாவது ஹீரோ நூறு பேரை அடிப்பதை எல்லாம் தாண்டி சின்ன விஷயமும் எனக்கு உறுத்தும்.சிறு வயதில் படம் பார்க்கும்போது ஹீரோ ஹீரோயின் பின்னாலேயே சுற்றுவார் அப்போதெல்லாம் இவர் வேலைக்கே போகாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நினைப்பேன்.அதே போல கல்யாண மேடையில் மணமகள் புரட்சியாக கல்யாணத்தை நிறுத்துவது, அப்புறம் நிச்சயமான சில தினங்களில் கல்யாணத்துக்கு வந்த (?!) வேறு யாரோ ஒருவரை காதலிப்பது இதெல்லாமே நான் பார்த்ததேயில்லை (அரிதாக செய்தித்தாள்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்)

அப்புறம் சாதியை எதிர்த்து ஹீரோ பேசும் வசனங்கள் அடப்போப்பா எங்கே ஜாதி இல்ல? திருமணம் முதல் அரசியல் வரை, வலைப்பூக்கள் முதல் டீக்கடை பெயர் வரை எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கத்தான் செய்கிறது ஏதோ இளைஞர்கள் ஜாதியை அறவே வெறுப்பது போல காட்டுவது... இளைஞர்கள் (ஜாதி பற்றி பேச விரும்பாத நண்பர்களை தவிர்த்து விட்டு) தங்களுக்குள் வெகு சாதாரணமாக ஜாதி பற்றி பேசுவதையும் சில ஜாதிகளை திட்டுவதையும் கண்டிருக்கிறேன்.தங்கள் ஜாதியில் வரதட்சிணை எவ்வளவு வாங்குவார்கள் என்பது பற்றி கூட அரட்டை நீளும்.

என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய லாஜிக் மீறல் நிகழ்கிறதென்றால் அது காதலில் தான் பஸ் ஸ்டேண்டிலோ ஏதோ ஒரு கூட்ட நெரிசலான இடத்திலோ பார்க்கிற பெண்ணை அடுத்தடுத்து எப்படி தான் இவர்களால் மட்டும் மீட் பண்ண முடிகிறது? நானும் சென்னையில் எத்தனையோ முறை ட்ரை செய்திருக்கிறேன் 99% ஒரு முறை பார்த்த பெண்ணை மறுமுறை பார்ப்பதரிது.

அப்புறம் மீறிப்போனால் இரண்டே இரண்டு பெண்களைத்தான் ஹீரோ காதலித்திருப்பாராம் (என்ன கொடும சரவணன்?) அதே போல ஹீரோயின் ஒரே ஒருவரைத்தான்.நாமெல்லாம் கணக்கு போட்டா அஞ்சாறு ஆட்டோகிராப் தாண்டுமே

சரி இதக்கூட ஒத்துக்கலாம்யா ஹீரோயினம்மா நம்ம ஹீரோவோட சில பல திறமைகள்ல மயங்கி ப்ரபோஸ் பண்ணுவாங்களாம்.யேயப்பா தமிழ்நாட்டுல எந்த ஊர்லயா நடக்குது இந்த அதிசயம்? நானெல்லாம் கேள்விப்பட்டதே இல்லப்பா அப்டியே நடந்தெல்லாம் அது சப்ப ஃபிகரா இருக்கும் அது கூட ப்ரபோஸ்லாம் பண்ணாது பண்ணினா இவரு ஒகே சொல்ல மாட்டாருன்னு பட்டுன்னு வீட்ல சொல்லி சொந்தத்துல கல்யாணம் முடிச்சிடும்.

அடுத்தது ஹீரோயினோட ட்ரெஸ் (இதுல லாஜிக் மீறல நானும் சில நண்பர்களும் காட்சிக்கு அவசியம் எனில் வைத்துக்கொள்வதில் தவறில்லை என ஒப்புக்கொள்கிறோம் என்றாலும் ;) நிஜத்தில் தமிழ்பெண்கள் அப்படி ட்ரெஸ் பண்ணுகிறார்களா? சென்னை வந்து பார்த்தாலும் அப்படி உடுத்துபவர்கள் எல்லாம் வட நாட்டு பெண்கள் தானே தவிர தமிழ் பெண்கள் மிகக்குறைவே.(அந்த சில நண்பர்கள் கமெண்ட்டில் கை தூக்கவும்)

ஆங்கிலப்படங்களிலும் லாஜிக் மீறல்கள் உண்டு இது இண்டர்நேஷனல் பிரச்னை தான் ஆனால் இதற்கு காரணம் எப்போதும் ரியாலிட்டியோடு வாழும் நமக்கு எண்டர்டைன்மெண்ட் கற்பனையானதாக இருப்பது ஒரு மாறுதல் தரும் என்ற லாஜிக் ஆக இருக்கலாம்.அங்கேயும் ரியாலிட்டியே இருந்தால் எதற்கு தியேட்டர் வரவேண்டும்?

வெகுசில படங்கள் ஈரானிய ஆங்கில டாகுமெண்டரி போல வருவதும் ஹிட்டாவதுமாக இருந்தாலும் "சுத்தமான உணவு எங்கள் சிறப்பம்சம்" என்று சில விடுதிகளில் எழுதியிருப்பார்கள் சுத்தமான உணவு சிறப்பம்சமல்ல அத்தியாவசியத் தேவை அது போல ரியாலிட்டியோடு படம் வருவது ஒரு சிறப்பம்சம் போல விளம்பரப்படுத்தப்படுகிறது வேறு வழி பார்ப்போம் ;)

Tuesday, May 09, 2006

செல்வி சீரியல் நிறுத்தாதற்கு காரணம்?

நேத்தோட தேர்தல் ஜீரம் முடிஞ்சிடிச்சி ஆனா நேத்து அம்மா சொன்ன விஷயம் இது... அந்தம்மா இல்ல எங்கம்மா தலைவா.அதாவது சரத்குமார் ராதிகாவோட அதிமுகவில சேர்ந்ததுக்கப்புறமும் செல்வி சீரியல் நிறுத்தப்படலை, ஏன்னு யோசிச்சு பாத்தா நிறைய அரசியல் தந்திரங்கள் இருக்குன்னு புரியும்.அதாவது அந்த சீரியல் தான் தாய்க்குலங்கள் அதிகம் பார்க்கிறது
பொசுக்குன்னு நிறுத்திப்புட்டா அதுவே ஒரு வகை அனுதாப அலையா மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது, அப்டி எதுவும் ஆகிடக்கூடாதுங்கிறது ஒரு காரணம்.

அடுத்து நிறைய திமுக ஓட்டு கேக்குற விளம்பரங்கள் மறைமுக நேரடி பிரச்சார விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி நடுவில ஒளிபரப்பப்பட்டது. எதிர்க்கட்சியா இருந்தாலும் அதிமுகவாலயோ ராதிகாவாலயோ இத தடுக்க முடியல.தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தான் எந்த மாற்றமா இருந்தாலும் நடக்கும், சும்மாவா சொன்னாங்க தமிழ் நாட்டு சாணக்கியர்னு.

Thursday, May 04, 2006

லோக் பரித்ரன் வெல்லுமா?

சமீபத்தில் எனக்கு நிறைய உணர்ச்சி வசப்பட்ட நண்பர்கள் லோக் பரித்ரனுக்கு ஓட்டு போட சொல்லும் எஸ்எம்எஸ்ஸை அனுப்பியிருந்தார்கள்... நான் சென்னைவாசியல்ல என்பதை மறந்த என் சென்னை நண்பர்கள்.நாமக்கல்லில் போட்டியிடவில்லை என நினைக்கிறேன்.நேற்று என் சென்னை தோழியும் தான் இக்கட்சிக்கு தான் ஓட்டு போட போவதாக தெரிவித்தாள், "நீ முதலில் ஓட்டு போட போவியா" என்றேன்.

இளைஞர்கள் ஆதரவு இருக்கலாம், ஆனால் இளைஞர்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை.இளைஞர் எழுச்சியெல்லாம் ஓல்டு ஃபேஷனாகி விட்டது, இதில் நல்ல விஷயம் மொழி,மதப்பிரிவினைவாதங்களுக்கு இன்றைய சமுதாயம் அடிமையாவதில்லை, யாராவது அப்படி தூண்டினால் கூட எஸ்எம்எஸ் கடி ஜோக் போல சிரித்து விட்டு விலகி போகிறார்கள்.

வயதனவர்களை,பெண்களை ஈர்க்க இது பத்தாது.என்ன தான் நகரம் என்றாலும் அங்கும் நடுத்தர,ஏழை மக்கள் தான் ஓட்டு நிர்ணயிப்பவர்கள் முக்கியமாக ஏழைகளுக்கு ஐஐடியில் படித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்பதை என்ன சொல்லி புரிய வைப்பார்கள்?

அது மட்டுமின்றி ஏதோ தேர்தலுக்காகவே திடீரென்று புறப்பட்ட மாதிரியல்லவா இருக்கிறது? ஒருவேளை கட்சி சார் பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு கூட இதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த இருட்டடிப்பையே சமாளிக்க முடியாதவர்கள் பதவியில் பிரச்னைகளை எப்படி சமாளிக்க முடியும்? (நான் எந்த பத்திரிக்கையிலும் இவை பற்றிய செய்திகள், பிரச்சாரங்கள், பேட்டிகள் படித்ததாக ஞாபகமில்லை)

கடைசியாக ஒன்று மக்களுக்கு நல்லது செய்ய தேர்தலில் ஜெயிக்க நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது, மார்கெட்டிங்கில் ஆரம்பித்து பொறுமை வரை நிறைய வேண்டும்.

Monday, May 01, 2006

தேர்தல் 2060

02/05/2060
காலை கொஞ்சம் லேட்டாக தான் எழுந்தான் ராமசாமி என்கிற அந்த இளைஞன் வெளியே பெருங்குரலில் மைக் சத்தம் கேட்டது,குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தான்.கையில் மஞ்சள் நோட்டீஸை ஒரு கரை வேட்டி திணித்தது.அவனுக்கு தெரியும் நகரத்தில் பிரசாரம் வேறு மாதிரியும் கிராமங்களில் வேறு மாதிரியும் செய்யப்படுகிறது,அங்கே டிஜிட்டல் பேனர் இங்கே மஞ்சள் நோட்டீஸ்.முன்பொரு காலத்தில் கருணாநிதி என்கிற தலைவர் "கிராமங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி வாயிலான பிரச்சாரங்களில் ஈடுபடாதீர்கள் நம்மை பணக்கார கட்சி என்று நினைத்து விட வாய்ப்புள்ளது" என்று சொன்னதை மக்கள் மறந்தாலும் எல்லா கட்சிகளும் மறப்பதில்லை.

நோட்டீஸில் பார்வையை ஓட்டினான், காவிரி நதி நீர் 738 ஆவது ஆணையம் அமைக்கப்பட்டு கண்டிப்பாக விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்.சடாரென ஒரு தலைவர் வாழ்நாள் முழுதும் இலவச அரிசி வழங்கப்படும் என்றதும் இன்னொரு தலைவர் அரிசி மட்டுந்தானா நாங்கள் சமைக்க தேவையான குக்கர் முதல் மசாலா வரை வழங்குவோம் என்றதும் அவன் நினைவுக்கு வந்தது.

தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும்...பெரிதாக சிரித்தான் எதற்கு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கவா? இவன் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான் பீஸா டெலிவரி பாயாக.இதே ஆங்கிலம் சரளமென்றால் இன்னும் நல்ல நிலைமை தரும் கால் சென்டர்,பிபிஓ வில் சேர்ந்திருப்பான்.இவன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தான் அப்புறமும் நல்ல மார்க் தான் ஓரளவு நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால் பெரிய படிப்பு சேர்ந்திருக்க முடியும், ஏழை நல்ல படிப்பில் சேர வகுப்பில் முதல் மாணவனாக அல்ல மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என அவன் அறிவான்,அந்தளவுக்கு அவன் அறிவாளி அல்லன்.

அப்போதிருந்து இப்போது வரை தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உண்டு, இப்போது வரை மின் இணைப்புகள் தரை கீழ் இணைப்பு தர வேண்டும் என்று எந்த கட்சியும் கூறவில்லை.இதனால் எவ்வளவு உயிரிழப்பு? மழை வந்தால் ஒரே நாளில் ஊருக்குள் வெள்ளம், அதில் மின்சாரம் தாக்கி சில பல உயிர் இழப்புகள்.அதற்கான உள்கட்டமைப்புகளை சரி செய்ய யாரும் வாக்குறுதி தரவில்லை.பொறியியல்,மருத்துவ படிப்புகளுக்கான கட்டணங்கள் மலைக்க வைக்கின்றன, அதை குறைக்க யாரும் முயற்சிக்கவில்லை.அரசாங்க வேலை வாய்ப்பு எட்டாக்கனி, வெளி நாட்டு கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் மற்ற மாநிலம் தேடி செல்கிறார்கள்,சுய தொழில் புரிய
விரும்புவோருக்கு உடனடி வங்கி கடன்,புற்றீசல் போல கல்லூரிகளுக்கு அனுமதி தராமல் சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்குதல்,சிறந்த சுற்றுலா தளங்களை பாதுகாத்தல்,உருவாக்குதல்,இன்னும் எவ்வளவோ.

ஆனால் இவை எவையும் எந்த கட்சியின் வாக்குறுதியிலும் இல்லை காரணம் மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.ஒவ்வொரு தனி மனிதனும் அவன் பி.எஃப் அவ்வளவு,அவனுக்கு என்னென்ன வசதி என்று தான் பார்க்கிறான் நாடாவது மண்ணாவது.இவர்களுக்கு அரசியல்வாதிகள் எப்படி தீர்வு சொல்ல முடியும் மேற்கண்ட வழிகளை தரலாம் ஆனால் அவை நீண்ட கால திட்டங்கள் மக்களை உடனடியாக கவர தற்காலிக திட்டங்கள் மூலம் அரசியல் அரியணை ஏறிவிட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் இப்படிப்பட்ட மன நிலையில் மக்களும் கட்சிகளும் இருக்கும் வரையில் 2060 என்ன 3060ல் கூட ஏழைகள் குடிசையில் தான் இருப்பார்கள்.அவன் அப்பா சத்தம் போட்டார்,

"டேய் என்னடா வானத்தை பாத்தாப்ல யோஜன? சட்டு புட்டுனு படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு போ இன்னும் ஆறு மாசத்துல நாலு காசு சேப்பம் குடிசைய சரி பண்ணலாம் அப்புறம் மழ காலம், நம்ம வாழ்க்கை நம்ம கையில மட்டுதான்"

குறிப்பு: வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப்போட்டிக்கு இப்பதிவு அளிக்கப்பட்டுள்ளது,இதே போன்ற மற்ற நண்பர்களின் பதிவுகளைக் காண இங்கு க்ளிக்கவும்.மே 21 முதல் 25 வரை ஓட்டெடுப்பு நிகழும் (இது ச்சும்மா ஒரு இன்ஃபர்மேஷனுக்கு மட்டுந்தான் ஹி ஹி)