Thursday, April 27, 2006

எல்லாரும் அரசியல்வாதிங்க தானே...

சமீபத்துல வைகோ எங்க கூட்டம் போட்டாலும் அங்க யாராவது ஒருத்தர் எந்திரிச்சி "அம்மா கிட்ட எவ்ளோ தலைவா வாங்கினீங்க?" என்றோ "40 கோடி என்ன பண்ணீங்க தலைவா" என்றோ டார்ச்சர் பண்ணிய விஷயம் தினசரி ஏடுகளில் (தினகரனில் பெருசா...) வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.அவரு எவ்ளோ கடுப்பாகிருப்பாரு? அது உண்மையோ என்னவோ அத்த விடுங்க (அதான் நினைச்சிருப்பாரு ஒரு வேளை காசு கொடுத்து எதிர்க்கட்சி சதியோன்னு அதுக்காக இவரும் சதி செஞ்சோ என்னவோ) நேத்தோ, முந்தா நேத்தோ கருணாநிதி பிரச்சாரம் பண்ணும்போது,"தலைவா சன் டிவி வெச்சு கோடி கோடியா சம்பாதிக்கிற... எனக்கு (?!) எதுமே தர்லியே" என்று நேரிடையாக கேட்டிருக்கிறார், வைகோ போல கருணாநிதி பொறுமையாக பேசவெல்லாம் இல்ல... கில்லியில் வருவது போல "யேய் யார்யா அது தூக்கு அந்த ஆள" என்று கட்டளை பறக்க 'தொண்டர்'களால் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்.

(ஒரு வேளை ஆள் ஏற்பாடு பண்ணி செய்யப்பட்டிருந்தால்) இதெல்லாம் தேவையா...? எல்லாரும் அரசியல்ல இருக்கும்போது ஒருத்தர் மட்டுந்தான் கேள்வி கேக்க முடியற நிலையா/ ஏற்கனவே இதே ஸ்டைல்ல பதவி விலகற பிரச்னையை ஆரம்பிச்சு அது எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தத பாத்தும் இப்டி உள்குத்து வச்சுக்கலாமா?

அப்புறம்...பேசாம மக்கள்ல ஒருத்தரே இப்டி ஏதாவது அப்பப்ப பண்ணினா எதிர் கட்சிக்காரன் தான் பண்ணினான்னு ஒவ்வொரு கட்சியும் ஆள் வச்சு மக்களுக்கு நல்லது பண்ண மாட்டாங்க? (மாட்டாங்க!) இத ஒரு ப்ளானா ஹீரோ செயல்படுத்தி முதல்வராகிற கதைக்கு ஆயுள் தடை விதிக்கிறேன் (அட்லீஸ்ட் என் ஆயுள் வரை)

Sunday, April 23, 2006

சேவைக்குறைபாடு

நேற்று செல்பேசி ரீசார்ஜ் செய்ய டாப் அப் கார்டு வாங்கினேன், ரீசார்ஜ் செய்தால் "other error" என்றது, நான் சந்தேகப்பட்டது போலவே கடைக்காரர் கேட்டார்,"எந்த ஊர்ல சிம் வாங்கினீங்க?" "சென்னை" நாட்டாமை 'செல்லாது செல்லாது' என்பது போல விளக்கம் தந்தார்,"சென்னைல வாங்கினா ரீசார்ஜ் கூப்பனும் அங்க வாங்கணும் அது தான் வேலை செய்யும் தமிழ் நாட்டில வாங்கின கூப்பன் ஆகாது" என்றார்.யேய் என்னய்யா இது சென்னை வேற தமிழ் நாடு வேறங்கிற மாதிரியே பேசுறன்னு நினைச்சேன்.சரி ஒரு மாசம் டாக் டைம் இருக்கே அது வரை உபயோகிப்போம்னு சென்னையில் இருக்கும் நண்பனுக்கு பணம் போட ஐசிஐசிஐ பேங்க் போனேன்.

நண்பனிடம் அவன் பேங்க் அக்கவுண்ட் நம்பரும் பெற்றிருந்தேன், 12 மணியோடு மூடி விடுவார்கள் இன்னும் கால் மணி நேரமே இருக்கும் என்ற நிலையில் படிவம் நிரப்பி கொண்டு போய் தந்தால் "இது அக்கவுண்ட் நம்பரே இல்லை ஐசிஐசிஐயில் 15 இலக்கம் இருக்கும் பாருங்கள் 12 தான் இருக்கிறது" என்றார்."ஓ அப்படியா எனக்கு ஐசிஐசிஐ பத்தி தெரியாது, சரி கண்டிப்பா தெரியும் தானே இது தப்பான நம்பர்னு?" என்றேன், தலையை வித்தியாசமாக ஆட்டினார், அப்போதே டவுட் ஆனேன்...நான் நினைத்த மாதிரியே என் நண்பன் அப்புறம் (இரவு தான் லைன் கிடைத்தது) சொன்னான்,"டேய் அந்த 12 நம்பருக்கு முன்னாடி மூணு சைபர் சேக்கணும்டா பேங்க்லயே சொல்லுவாங்களே"

இந்தியாவில் கஸ்டமர் கேர் என்பதே அரிதான வார்த்தையாக இருக்கிறது, இங்கே கவனிக்க வேண்டியது என் பிரச்னையல்ல அதன் வீரியம் குறைவாகக்கூட இருக்கட்டும், அலட்சியம் தான் எனக்கு அதிருப்தியை தருகிறது.அதுவும் சில கெட்ட தினங்களில் இப்படி தொடர்ச்சியாக. தனிப்பட்ட முறையில் இனி வழக்குகள் போட்டு தாக்கப்போகிறேன் (அக்கா பி.எல் கடைசி வருடம் படிக்கிறார்...ஹி ஹி)

Wednesday, April 19, 2006

ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

சமீபத்தில் ஹேரீஸ் ஜெயராஜின் வேட்டையாடு விளையாடு பாடல்கள் கேட்டேன் 'மஞ்சள் வெயில் மறையுதே' பாடல் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று திரும்ப திரும்ப யோசனை.அது அலை பாயுதேவில் வரும் 'என்றென்றும் புன்னகை' போல் இல்லை? அதுவும் சின்ன தாளம் கூட அப்படியே.

'பார்த்த முதல் நாளே' கூட 'சுட்டும் விழிச் சுடரே'வின் மேக் அப் தான். யுவன்,ஹேரீஸ் இருவருமே தேவாவின் கலையுலக வாரிசுகள் ஆக முயற்சிக்கிறார்கள் நல்லதில்லை.... பாட்டு ஹிட் ஆகிறது மட்டும் முக்கியமில்ல.... ஒன் பாத்ரூமுக்கும் தான் ஓட்றான் ஓட்டப்பந்தயத்துக்கும் தான் ஓட்றான் வித்தியாசமிருக்கில்ல?

இத கண்டுபிடிக்கிறதுல தான் என்னா சொகம்...(யார்பா அது... நிலா நதில வர்ற கவிதைகள்ல நிறைய பூக்காட்டில ஏற்கனவே எழுதினது இது ரிப்பீட்டு இல்லையான்னு கேக்குறது... மூச்)

Tuesday, April 18, 2006

தொலை நோக்கு பார்வை-ஜாலி பேட்டி

சரத் குமார் அதிமுகவில் இணந்த கையோடு அளித்த பேட்டி (கொஞ்சம் கற்பனை கலந்து) :

"திமுகவிலிருந்து விலகிய காரணம்?

அங்கே குடும்ப அரசியல் நடக்கிறது மற்றும் அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை.

தொலை நோக்கு பார்வை இல்லை என எப்படி சொல்கிறீர்கள்?

நேற்று சேப்பாக்கத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி இருந்தார்கள் அவர் கோமள வல்லி என மனசாட்சியே இல்லாமல் பெயர் வைத்திருக்கிறார்.இப்போதே இந்தப்பெயர் படு ஓல்டு பேஷன் இன்னும் இருபது வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தை தன் தந்தையிடம் "ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வச்சேள்?" என்று அபிதா ரேஞ்சுக்கு அழும் என நினைத்துப் பார்த்தாரா? இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என? இவ்வாறு தெரிவித்தார். மற்றும் அருகிலிருந்த ஜெ. இடை மறித்து "கருணாநிதி கிட்டப்பார்வை இருப்பதால் கண்ணாடி அணிந்திருக்கும்போது தொலை நோக்கு பார்வை எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடியாக கருணாநிதி அளித்த பேட்டி:

உங்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என சரத் கூறியிருக்கிறாரே?

"சினிமாவில் இறங்கிய காலம் முதலே மன்னாதி மன்னனில் எம்ஜிஆருக்கு இடுப்புக்கு கீழே இழையோடும் இலைகள் போன்ற பேஷனை யோசனை செய்தவன் நான் என்பது வரலாறு.
கோமள வல்லி என்பது இருபது வருடம் கழித்து பேஷனாகும் என்ற தயாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கியே அப்பெயர் சூட்டப்பட்டது அவர்களது கொக்கரிப்புக்கு காலம் பதில் சொல்லும் என்பதை அறிந்து கொள் கழகக்கண்மணியே"
அருகில் தயாநிதி இடைமறித்து,"கிட்டப்பார்வை இருப்பவர்களால் தூரத்தில் தான் பார்க்க முடியாதே தவிர தொலை நோக்கு என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இது கூட தெரியாதவர் தான் ஆட்சியில் இருக்கிறார் மற்றும் (வழக்கம் போல) இத்தனி நபர் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மான நஷ்ட வழக்கு போடப்படும்" என பயமுறுத்...சே பதில் சொன்னார்.

Sunday, April 16, 2006

போலீஸ் எப்போது திருந்துவார்கள்

சமீபத்தில் நாமக்கல்லில் இருக்கும் ஒரே ஒரு சிக்னலில் நின்றபோது சென்னை ஞாபகம் வந்தது.வெள்ளுடை வேந்தர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.முதல் கூத்து: ஸ்பென்சர் பிளாசா அருகில் ஒரு ட்ராபிக் போலீஸ் வரிசையாக வண்டிகளை கப்பம் கட்ட நிறுத்திக் கொண்டிருந்தார் எங்கள் வண்டியை நிறுத்தி "ம்ம் எடுங்க" என்றார்.என் நண்பன் அவர் பல்ஸ் உணர்ந்தவனாக டிரைவிங் லைஸன்ஸ் எடுக்காமல் 50 ரூபாய் எடுத்தான்.அவர் "ஓகே சார் நீங்க போலாம்" என்றதோடு நில்லாமல் பக்கத்தில் பணம் தர முடியாது என போராடுபவனை பார்த்து "பாருய்யா வந்தாரு 100 ரூபா குடுத்தாரு போறாரு நீ என்னடான்னா..." அவனை நம்ப வைக்க மறுபடியும்,"100 ரூபா தானே ஸார் தந்தீங்க?" "ஹி ஹி ஆமா"

ரெண்டாவது கூத்து: தி. நகர் சிக்னல் அருகே வழக்கம் போல வசூல் வேட்டை என் நண்பன் மாட்ட அப்போது பார்த்து அவனிடம் பணமில்லை,"சார் பணமில்ல சார் நாளைக்கு தரேன் சார்" "தோடா டிரைவிங் லைசன்ஸ் குடுத்துட்டு நாளைக்கு வாங்கிக்க" "சார் ப்ளீஸ் சார்" கொஞ்ச நேரம் போராட அவர் மனமிறங்கி "சரி எவ்ளோ வெச்சிருக்க" "சில்லரை தான் சார்" "எடுய்யா" மொத்தமாக எட்டு ரூபாய் அல்பம் அப்புறம் தான் விட்டது இவன் அதை விட அல்பம் "சார் எல்லாம் தந்துட்டேன் தம்'முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்களேன்"

மூன்றாவது கூத்து: உதயம் தியேட்டர் பக்கம் சடாரென வண்டி நிறுத்தப்பட அந்த கடமை தவறாத அதிகாரி ஒரு பேச்சுக்கு கூட வேறெதுவும் கேட்கவில்லை "50 ரூபா எடு" நம்மாளு கோபமா "போன சிக்னல்ல இப்ப தான் சார் அழுதுட்டு வரேன்" என்று கதை விட்டான் "ஓ அவரு வாங்கிட்டாரா இன்னிக்கு வாங்கக்கூடாதே சரி சரி கிளம்பு"

Thursday, April 13, 2006

நோயாளியிடம் எப்படி பேச வேண்டும்

முந்தாநாள் அம்மா திடீரென வயிறு வலிக்கிறது என்று சொல்ல டாக்டரைப் பார்க்க அடுத்த 20 நிமிடங்களில் பெட்டில் சேர்த்து குளூகோஸ் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.அம்மாவுக்கு கிட்னீ ஸ்டோன்,நான் பொறுமையாக சிறு நீரகக்கல்லின் எல்லா விவரங்களையும் சொல்லி அம்மாவின் டென்ஷனை குறைத்துக் கொண்டிருந்தேன்.ஏற்கனவே என் நண்பன் ஒருவனுக்கு இப்பிரச்னை இருந்ததால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு எனக்கு (கடவுள் புண்ணியத்தில்) இருந்தது.அவனுக்கு இவ்வளவு சின்ன வயதில் வந்ததற்கு காரணம் ஹாட்டை ராவாக மிகக்குறைந்த நேரத்தில் அடித்துக்காட்டும் சாதனையை பலமுறை நிகழ்த்தியது தான்.இப்போது அதைத் தொட்டால் போதைக்கு முன்னால் எமன் வருவான் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதால் டாஸ்மாக் அவனுக்கு எதிர்ச்சொல்.

ஸ்கேன் செய்ய அங்கிருந்த லேப் போனோம் ரிப்போர்ட்டை சோதித்த டாக்டர் பெண் கேட்ட முதல் கேள்வி, "எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க?" அடப்பாவிகளா ஏற்கனவே அவதில இருக்கிற நோயாளி கிட்ட இப்டியா பேசறது...முறைத்தேன் கேள்வியின் விபரீதம் புரிந்தவராய் "அதாவது...இவ்ளோ பெரிய கல் இருக்கே பிரச்னைன்னு டாக்டர்கிட்ட வராம எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க இவ்ளோ நாள் ஏன் வரலைன்னு கேட்டேன்" என்றார்.அம்மா சற்றே ரிலாக்ஸ் ஆனார்.அதற்குள் சொந்தக்காரர்கள் வந்து விட்டார்கள், அம்மாவை அப்போது தான் தூங்க வைத்திருந்தோம் கொஞ்ச நேரம் காத்திருந்த அத்தை அதற்கு மேல் தாங்காது என்று ,"ஏ புள்ள எழுந்திரு" என்றார் ஆஹா எல்லாமே கடுப்படிக்கிறார்களே ஸாரிம்மா உனக்கு பயங்கர கெட்ட நேரம் தான் என நினைத்துக்கொண்டேன் பேச்சு வாக்கில் அத்தை சொன்னார்,"இதே மாதிரி தான் தம்பி ரெண்டு மாசம் மின்னாடி எங்க மாமனார சேத்திருந்தோம் வயித்து வலின்னு இதே ஆஸ்பித்திரில தான் ஏதேதோ பண்ணாங்க ம்ச் காப்பாத்த முடியல" அம்மா என்னை பாவமாக பார்த்தார் "அதெல்லாம் ஏன் அத்தை இப்போ பேசிக்கிட்டு?"என்றேன். "ஆமால்ல, பேச்சு வாக்கில சொல்லிட்டேனப்பா" இதே ரீதியில் மூன்று உறவினர்கள் பீதியை கிளப்பி விட்டார்கள். நோயாளியிடம் என்ன பேச வேண்டும் என்பதே பலருக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யமூட்டும்(?!@!) வேதனை.

Monday, April 03, 2006

ரயில் ரிசர்வேஷன் கட்டண உயர்வு யாருக்கும் தெரியுமா

சுமார் மூன்று நாட்களுக்கு முன் தினத்தந்தியில் நான் படித்த செய்தி இது
புறப்படும் இடத்தை தவிர வேறெங்கு இருந்து ரிசர்வ் செய்தாலும் முப்பது ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்.அதாவது சென்னையிலிருந்து மதுரை செல்ல மதுரையில் ரிசர்வ் செய்தீர்களானால் முப்பது ரூபாய் அதிகம் தர வேண்டும்.ஆனால் சென்னையிலேயே செய்தால் இக்கட்டணம் இல்லை (குழப்பவில்லையே...?) .இது நடைமுறைக்கு வந்து விட்டதா என்று எதுவும் தெரியவில்லை,உங்களுக்கு காட்ட தினத்தந்தி மின்னிதழில் தேடினேன் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை .நீங்கள் கண்டு பிடித்தால் கமெண்ட்டில் இடலாம்.
இது நிறைய குழப்புகிறது
1.ரிட்டர்ன் டிக்கட் எடுத்தாலும் இக்கட்டணம் தரவேண்டும் என்பது நியாயமா
2.என் ஊர் நாமக்கல் அங்கிருக்கும் ரிசர்வேஷன் கவுண்ட்டரில் எந்த ஊருக்கு பதிவு செய்தாலும் இக்கட்டணம் தந்து தொலைக்க வேண்டுமா
3.இன்டர் நெட்டில் பதிவு செய்தாலும் தரவேண்டுமா (இன்டர் நெட்டில் எங்கிருந்து பண்ணினால் என்ன? இல்லை சின்சியராக ஐ பி அட்ரெஸ் நோட் பண்ணுவார்களா?)

Saturday, April 01, 2006

தமிழ் நாட்டு மக்கள்னா ரெண்டு கட்சிக்கும் நக்கலா போச்சு

அட ஆமாங்கறேன் இன்னிக்கு காலைல பேப்பர தெறந்தா சிம்ரன் அதிமுகவுக்கு ஆதரவுன்னு போட்டிருக்கு,திமுக என்னன்னா கலர் கலரா கத விடுறாங்க,நாம என்ன சொன்னாலும் வேற வழியில்ல இந்த ஜனங்களுக்குன்னு நினைக்கிறாங்க போல...

வேண்ணா பாருங்க இந்த தடவை விஜய காந்த் ஒரு கலக்கு கலக்க போறாரு
முதல் நல்ல விஷயம் மத்த கட்சிகளை விட நட்சத்திரக் கூட்டம் அங்க கம்மி தான்.கம்மி என்ன அவரு மட்டுந்தான்.இப்பல்லாம் பரவாயில்லியப்பா, நல்லா தான் பேசுறாரு "பாவம்யா நாமளாவது போடுவோம்"ன்னு எல்லாரும் நினைச்சாலே சோலி முடிஞ்சுது.

அதே மாதிரி சன் நியூஸ்ல வைகோ ஒரு குடும்பம் எல்லா மீடியாவயும் ஆக்ரமித்திருக்கிறதுன்னதுக்கு பதிலடியா ஒவ்வொரு பத்திரிக்கையும்,அரசியல் வாதியும் வச்சிருக்கிற மீடியா கம்பெனிகள காட்டுச்சு தெரிஞ்ச விஷயம் ரெண்டு...எல்லாரும் தப்பு பண்றான் நானும் பண்றேன்கிற கடுப்பேத்தற மனோ பாவம், அடுத்தது ஆமண்ணே எல்லாரும் ஃபிராடுப்பயலுவ தான்.இப்டி குறை சொல்றேன்னு உண்மைய உடைச்சிக்கிட்டிருக்கானுவ கடைசில இருக்கிறதிலயே நல்லவரு கேப்டன் தான்னு தனிப்பெரும்பான்மை கிடைக்கப் போகுது இல்லாட்டியும் கூட கூட்டணி ஆட்சி அமைக்கவாச்சும் வாய்ப்பு கிடைக்கப்போகுது

குறிப்பு: நேற்று இங்கே எழுதியதற்கு பிராயச்சித்தமாகவோ அவர்கள் கட்சியில் போன் வந்தது என்றோ இப்படி எழுதுகிறேன் என தவறாக நினைக்க வேண்டாம் ஹி ஹி

இன்னொரு வலைப்பூ

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நான் என்னங்க பண்றது? அதிசயமா இன்னிக்கு ஒரு கவித தோணிச்சு பூக்காடு இயல்பு வாழ்க்கை பத்தி எழுதற இடமா மாறிட்டதாலயும், கவிதைகளுக்குன்னு ஒரு சைட் வேணும்னு நினைச்சதாலயும் நிலா நதின்னு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுட்டேன்.டெடிகேட் பண்ணனும்னா என் ஆபீஸ்ல என் கவிதை நோட்ட படிச்சுட்டு வாலி வைரமுத்து ரேஞ்சுக்கு என்ன மதிக்கற அனுங்கிற (அப்பாவி) பொண்ணுக்கோ, என் ஒவ்வொரு கவிதைய படிக்கிறப்பவும் பாராட்டுறானோ இல்லையோ ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்புன்னு சளைக்காம சொல்ற அறை நண்பன் மனோஜுக்கோ டெடிகேட் பண்ணலாம் ஆனா அது ஓவரா இருக்கும்.

ஆரம்பிச்சு நாலு நாளாகுது என் வலைப்பூக்களில் கன்டென்ட் தவிர மற்ற இடங்களையும் கவனிப்போருக்கு தெரியும்.இதுக்கு முன்னாடி ஒரு இங்கிலீஷ் தளம் ஆரம்பிச்சியே என்னாச்சுன்னு கேக்குறீங்களா? ஐடியா ஸ்பார்க் ஆனா செயல்படுத்த வேண்டியது தான் ஜெயிக்காதுன்னா டெலிட் தான், ஆனா இது அப்டியாகாது, அதுக்கு பதில் வேறொரு ஆங்கில தளத்த ஆரம்பிச்சிட்டேன் rainy day coffeeன்னு பேர் வச்சிருக்கேன் இன்னும் பதிவிட ஆரம்பிக்கல