Friday, March 31, 2006

ஒரு மெயிலில் ஷூட் பண்ணுங்கள்

நான் இனியதளம் ஆரம்பித்ததிலிருந்து தான் இதை செய்ய ஆரம்பித்தேன் சேவை வழங்கு தளங்களில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அது இலவச சர்வீஸ் என்றாலும் கூட சேவை வழங்குவோருக்கு ஒரு மெயில் மூலம் தன்மையாகவோ காட்டமாகவோ ஒரு மெயில் அல்லது அவர்கள் தளத்திலியே படிவம் இருக்கும் அதில் எழுதுங்கள் அது மிகவும் குழந்தைத்தனமான சந்தேகமாக இருப்பினும் கூட. நிச்சயம் இரு வேலை நாட்களுக்குள் உங்களுக்கு பதில் தருவார்கள்.

அச்சேவையை முன்னேற்றுவது பற்றியும் கூறலாம், உங்கள் ஆலோசனை சிறப்பானதெனில் சில நேரங்களில் அவர்கள் விழாக்களுக்கு கூட அழைப்பு வரும் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை அவ்வளவு அருமையானது.

Thursday, March 30, 2006

ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

கருணாநிதி குங்குமம் சர்குலேஷன் அதிகப் படுத்து போல நினைத்து 2 ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என அள்ளி விட்டிருக்கிறார்.இதை சமாளிக்க ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

1.ஏழைகள் எல்லோரும் நடுத்தர வர்க்கத்திற்கு ‘அப்கிரேட்’ செய்யப்படுவார்கள். 2.வாழ்க்கையின் இன்றியாமையாத்தேவைகளான செல்போன், ஐபாட், ஷூ, கூலிங் கிளாஸ் மற்றும் பல இலவசம்
3.கோடை வெயிலை சமாளிக்க ஸ்விட்ஸர்லாந்துக்கு இலவச சுற்றுப்பயணம்
4.சென்னை முழுக்க சென்ட்ரலைஸ்டு ஏசி
5.கருணாநிதி பாசக்கிளிகள் மாதிரி படங்களில் பங்களிப்பதை தடுக்க கைது செய்யப்படுவார்
6. திருமணமாகாமல் தவிக்கும் ‘ஆண்’களுக்கும் திருமண உதவித் தொகை
7.மாணவர்களுக்கு தினமும் கோழி பிரியாணி
8. நிலமற்ற ஏழைகளுக்கு 10 ஏக்கர் நிலம் ( நிலம் தீர்ந்து போனால் கடலை வற்ற வைத்து அந்த இடம் கொடுக்கப்படும்)
9.பாஸ்போர்ட் அப்ளை செய்த அனைவருக்கும் அமெரிக்க ஹெச் 1 விசா (அல்லது அவர்கள் விரும்பும் நாட்டிற்கு)
10.எல்லா பண்டிகைகளுக்கும் அதை கொண்டாட தேவையான பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படும் (உதாரணம் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடை பொங்கலுக்கு சட்டி, விறகு, சர்க்கரைப் பொங்கல்)

Tuesday, March 28, 2006

சின்ன மலரும் நினைவு

இன்னும் மூன்று நாட்களில் தொழில் ரீதியான வாழ்க்கைக்கு விடுமுறை தரப்போகிறேன்.சென்னைக்கு வந்தபோது "வைரமுத்து கட்டிடக்காடு என்றாரே" அதற்குள் தொலைந்தது போல் இருந்தது.மாதம் ஒரு அறை,அப்போது தான் பழக ஆரம்பித்திருப்பேன்...அதற்குள் வேறு அறை மாறுவோம்.சுமார் எட்டு மாதங்கள் வேலையே கிடைக்கவில்லை கடுப்பாகி விட்டேன்.

ஆனால் நின்று ரசித்து சிரிக்காமல் ஒரு கணமும் கழிந்ததில்லை.அப்போது சதர்லேண்ட் கம்பெனி இன்டர்வியூ நுங்கம்பாக்கத்தில் வாராவாரம் நடக்கும்.எங்களுக்கு அங்கே தான் இன்னும் பல நேர்காணல்கள் பற்றி தகவல் சொல்லும் புது நண்பர்கள் கிடைப்பார்கள். அங்கே முதலில் ஒரு டேப்பை ஓட விடுவார்கள் அப்புறம் அது சம்பந்தமாக கேள்விகள் வரும் இது மிக எளிமையானது மிகக்குறைந்த அளவிலேயே வெளியேற்றப்படுவார்கள்.அடுத்தது கிராமர்
இப்படியாக எல்லோரும் வெளியே வந்து விட்டோம், எங்கள் ஒரே ஒரு அறை நண்பன் மட்டும் கடைசி வரை தாக்கு பிடித்தான்.கடைசியில் அவனுக்கும் தோல்வியே மிஞ்சியது

எனக்கு புரியவில்லை ஏனென்றால் ஆங்கிலம் தான் கடுமையான சுற்று அதிலேயே தப்பியவன் பர்ஸனல் இன்டர்வியூ எளிமையானது எப்படி விட்டான்? அவனிடமே கேட்டேன் சொன்னான்:

“ஒண்ணுமில்லீடா ‘டெல் அபவுட் யூ’ன்னாங்க ஐ ஆம் சத்தியமங்கலம் ஃப்ரம்
பழனிச்சாமின்னேன்”

Monday, March 27, 2006

இன்னும் ஒரு வாரம் தான்

இன்னைக்கு ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துட்டேன், அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சம்பிரதாயம்லாம் பண்ணினதில்லையா அதான் தேடி பிடிச்சி காப்பியடிச்சேன். நீட்டி முழக்கி ரெண்டு பத்தி எழுதினேன்.பேசாம முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்ஸன் மாதிரி தந்திரலாம்.இன்னும் ரெண்டு மாசம் சொந்த ஊர் போறேனே ஹைய்யா
அப்ப... வலைப்பூ... அஸ்க்கு புஸ்க்கு அதெல்லாம் கண்டிப்பா இருக்கும் அவ்ளோ ஈஸியா தப்பிக்க விட்டுடுவேனா?

Thursday, March 23, 2006

வாஷர்மேன்பேட் / வண்ணாரப்பேட்டை

ஆங்கிலத்தில் பெங்களூர்ட் என்கிற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது.

சைக்கில், றூமற், ப்லே, ளாறி,ஸ்கூட்டற் இவை பார்க்கவே ஏதோ மாதிரி இருக்கிறது இல்லையா, அப்புறமென்ன நமக்கே தெரியாமல் இவற்றை ஏற்றுக்கொண்டோம் தமிழாக, என்று தானே அர்த்தம்.அதுவும் சென்னையில் கொஞ்சம் ஓவற் "பேட்டையை பேட் என்று சொல்" என எந்த இங்கிளீஷ் வாத்தியார் சொன்னாரோ தெரியவில்லை.சைதாப்பேட், புதுப்பேட், கொற்க்குப்பேட் என்று கொலை செய்கிறார்கள், அது கூட பரவாயில்லையப்பா திருவல்லிக்கேணி எவ்வளவு அழகான பெயர்? ஏன் ட்ரிப்ளிகேன் ஆனது?

உடனே ஒரு கதை சொல்வார்கள் திருவல்லிக்கேணி ஆங்கிலேயனுக்கு உபயோகிக்க கடினமாக இருந்தது அதனால் அப்படி மாறி விட்டது சரி அதற்காக அரசாங்க கோப்புகளில் கூடவா? யாரோ செய்த தவறை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

சரி இது கூட சற்று ஏற்புடைய வாதமே எந்த ஆங்கிலேயன் தமிழ் புரிந்து கொண்டு அழகாக வாஷர்மேன்பேட் என்று வைத்தான்? வண்ணாரப்பேட்டையை எவ்வளவு சிரத்தை எடுத்து ஆங்கிலப்படுத்தி இருக்கிறார்கள் இன்னும் உண்டு லிட்டில் மவுண்ட், ரெட் ஹில்ஸ் (அட அட) எனக்கு தெரிந்து தமிழ் இத்தனை வகைப்படும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, கேரளா, சிங்களம், மலேசியா, சுக்வீந்தர் சிங்.

Tuesday, March 21, 2006

உங்கள் மொபைல் திருட்டு போனால் போலீஸ் கண்டுபிடிக்கும்

வரவர சென்னையில் நடக்கும் சம்பவங்களைக் கேட்டால் காதில் தேன் பாய்கிறது இனி மேல் இன்ஷ்யூர் பற்றி கவலைப்பட தேவையில்லை IMIE எனப்படும் ரகசிய எண்ணை மட்டும் குறித்துக்கொண்டால் போதும் அதை போலீஸிடம் கம்ப்ளைன்ட்டாக கொடுத்தால் அந்த செல் கண்டு பிடித்து தரப்படும் என்கிறது இரண்டு நாள் பழைய நியூஸ் பேப்பர், அதுவும் கம்ப்ளைன்ட்டை cop@vsnl.net-க்கு இமெயில் பண்ணினால் போதுமாம்.என்னமோ நடக்குது உலகத்துல

அந்த நம்பரை காண என் நண்பன் ஒரு வழி சொன்னான் *#06# என்று ப்ரெஸ் பண்ணவும் அந்த எண் கிடைக்கும் நான் நோக்கியா 1100வில் டெஸ்ட் செய்தேன் 15 இலக்க நம்பர் கிடைத்தது ஒன்றும் பயப்படத் தேவை இல்லை மற்ற மொபைல்களுக்கு எப்படி என்று தெரியவில்லை

Monday, March 20, 2006

ஐபாட் வாங்கலியோ ஐபாட்

சமீபத்தில் பத்திரிக்கைகளில் அல்லது உங்கள் நண்பர்கள் யாரும் டிஎஸ்சி (என்னை வம்பில் மாட்டி விட்டுடாதீங்க?!@) கம்பெனியில் இருந்திருந்தால் அங்கே ஒரு வருடம் வேலை செய்தவர்களுக்கு ஐ பாட் எனும் மல்டிமீடியா கருவி இலவசமாக தரப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அப்படி எங்கள் ரூமிற்கும் ஒரு ஐபாட் வந்தது. ஏதோ வேற்று கிரகத்திலிருந்து கிடைத்த பொருள் போல பார்த்தோம்.இப்போது தான் அது பற்றி நெட்டில் தேடி நண்பனுக்கும் எனக்கும் புரிய வைத்துக் கொண்டேன்.அவன் நேற்று கேட்டான், “உனக்கு வேணுமா இதே மாதிரி என் கொலீக்குக்கு கொடுத்த ஐபாட்? பதினாலாயிரம் தான்” அதன் விலை 24000 என்று அறிந்தேன் “ஆமா அத அவனுக்கு பிடிக்கல அவன்ட்ட இது வேணுமான்னு கம்பெனி டிஸ்கஸ் பண்ணவுமில்ல நிறைய பேர் விக்கலாம்னு இருக்காங்க” என்றான். நியாயந்தான், நமக்கு பாட்டு கேக்க எஃப் எம் போதுமப்பா பனிரெண்டாயிரம் செலவு பண்ணனுமா, ஐபாட் வேண்டும் என்பவர்கள் தங்கள் நண்பர் வட்டத்தில் விசாரிக்கவும்.

Friday, March 17, 2006

அறிவியல் தமிழா / தமிழாக்கமா?

வலைப்பூக்கள் இந்தியாவிலும் பிரபலமாக ஆரம்பித்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி அதுவும் தமிழில் பிரமிக்கும் வளர்ச்சி. என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் பெரும்பாலான பதிவர்கள் ஏதோ விதிக்கு (ரூல்) கட்டுப்பட்டது போல சுத்தத்தமிழில் எழுதுகிறார்கள்.எனக்கு
அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும் அவ்வப்போது முயற்சிப்பேன்.இது நல்லதே எனினும் சில பல நேரங்களில் எனக்கு நிறைய வார்த்தைகள் புரியாது அந்தப்பதிவின் ஓட்டத்தை வைத்தே
புரிந்து கொள்வேன் நல்ல உதாரணம் மறு மொழி மட்டுறுத்தல்.முதன் முதலாக இதை படித்த போது கமெண்ட் மாடரேஷனைத்தான் சொல்கிறார்கள் எனப் புரியவே இல்லை (ஆங்கில பெயர்ப்பை கவனிக்காதும் இருந்திருப்பேன்).படிக்கும்போதே இதை தான் சொல்கிறார்கள் என புரியும் வகையில் மொழி பெயர்ப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும், கருத்திடுகை அல்லது பதில்மொழியிடுகை என் கண்டுபிடிப்பு (ஆ அய்யோ அம்மா தமிழன்னை அடிக்கிறாள்).

அதே நேரம் அப்படியே ஆங்கிலம் - தமிழ் மாற்றவும் கூடாது. “யூத் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க நினைத்து இயக்குனர் ‘இளமை’ என்று வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆ... விஜய் ஜோடி யாரு ஷகீலாவா? என்று கேட்டிருப்பார்கள்” என்பார் என் நண்பர்.

உலகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டும்

சுமார் ஒரு மாத காலமாக நினைத்துக்கொண்டு (மட்டும்) இருந்த யோசனை (ஐடியா) ப்ளாக்கர்
வலைப்பூக்களுக்கு வகைப்படுத்துதல் (கேட்டகரைஸ் ) தரப்பட வேண்டும் என்பது.அதாவது நாம் எழுதும் பதிவுகளை நம் வலைப்பூவுக்குள்ளேயே அறிவியல் , கவிதை என வகைப்படுத்தும் வசதி, இதை ஒன்று ப்ளாக்கருக்கு ஒரு கடிதம் ,பலிக்கவில்லையென்றால் பல ஸ்கிரிப்ட்களை கலந்து புது ஸ்க்ரிப்ட் , இல்லையென்றால் நண்பர்களுடன் சேர்ந்து எப்படியாவது நாமே பண்ண வேண்டும் என எண்ணியிருந்தேன். நேற்று பார்த்தேன் இவ்வசதி தர ஒரு தளம் முளைத்து விட்டது.(ஆனால் இப்போது உறுப்பினராக இயலாது என்று சொல்லி விட்டார்கள்).யாரும் என்னடா இது இனிய தளத்தில் சொல்ல வேண்டியதை இங்கே சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் (உறுப்பினராகும் வசதி வரும்போது அங்கேயும் சொல்வேன் ) பாருங்களேன் அந்தக்காலம் போல் இல்லை நாம் நினைக்கும்போதே யாரோ செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் (அந்த தளம் பீட்டாவில் இருக்கிறது).அப்போதெல்லாம் அடுப்பில் காயும்போது தட்டு தூக்கியெறிந்ததைப் பார்த்து விட்டு நீராவி ரயில் எஞ்சினை ஒரு விஞ்ஞானி (ஸாரி பெயர் மறந்து விட்டது) கண்டுபிடித்ததாக அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன், அதாவது அவர் கண்டுபிடிக்க முயன்ற இடைவெளியில் யாருக்குமே அது தோன்றவில்லை. அவசரப்பட வேண்டாம் என்னை அந்த ரேஞ்சுக்கு ஒப்பிடவில்லை பொதுவாக சொல்கிறேன் .

நேற்று ரயிலில் பேச்சு முசுவில் கிண்டி வந்தது தெரியாமல் இறங்க இரு நிமிடங்கள் தான் தாமதித்து இருப்பேன். அடுத்து ஏற வந்தவர்கள் சர சரவென உள்ளே வர நடுவில் மாட்டி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அதில் பாருங்கள் கிண்டியிலிருந்து வேளச்சேரிக்கு ஏகப்பட்ட பேருந்துகள், ஆனால் மவுண்ட்டிலிருந்து ஒன்று கூட கிடையாது. காலம் இதை விட வேகமானது அறிவை விட முயற்சியை தான் அது மதிக்கும்.

என் நண்பனின் அப்பா சொல்வார் (அவருடையதா என்றறியேன் ஆனால் சோம்பேறித்தனம் வந்தால் இதை தான் நினைப்பேன்)
“எப்போதும் வாழ்க்கைக்கு வாய்ப்பு தராதே, நீயாகவே வளைந்து விடு, கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு ஓய்வாக இருந்தால் அப்புறம் வாழ்க்கை வளைக்கும் எப்போதுமே வாழ்க்கை வளைத்தால் ரொம்ப வலிக்கும்”

Tuesday, March 14, 2006

நீங்கள் வலைஞரா

கீழ்கண்டவற்றில் அதிகபட்சமாக “ஆமாம், உண்மை” என்பவராக இருந்தால் நீங்கள் இணைய பைத்தியமாக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன
1. வைரஸ் இருவகைப்படும்
2. யாஹூ என்பது எப்போதாவது அதீத சந்தோஷத்தில் உபயோகிக்கும் வார்த்தை அல்ல
3. RSS என்று ஒரு கட்சி இருப்பது உங்களைப் பொறுத்தவரை ஆச்சர்யமான கோ-இன்சிடென்ஸ் 4. கூகிள் என்றால் தேடுவது என்று தான் டிக்ஷனரியில் போட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்
5. இப்போதிருக்கும் வேலையை விடாதிருப்பதற்கு இன்டர்நெட்டும் முக்கிய காரணம்
6. மெயில் ஐ.டி இல்லாத இளைஞன் இளைஞனா?
7. ஆடியோ சிடி வாங்கியதே இல்லை
8. வியாதிக்கு டாக்டரிடம் போவதற்கு முன் மெடிக்கல் சைட்களை ஒரு முறை பார்ப்பீர்கள்.
9. ஆங்கிலத்தில் கூட karuwAnidhi என்று எழுதுவீர்கள்
10. பேனாவை ரூமில் தேடிய போது ctrl + F இருந்தால் வசதி என்று யோசித்திருப்பீர்கள்

Monday, March 13, 2006

கேள்வியின் விலை


நேற்று ஏர்செல் ரீசார்ஜ் பேக் வாங்கப்போயிருந்தேன், அப்போதுதான் ஒருவர் 330 ரூபாய் கார்டு வாங்கினார்.அவர் போன பிறகு நான் “ஸ்கீம் ஏதாவது இருக்கிறதா?” என்றேன்.“200 ரூபா கார்டு இருக்கு சார் 50 ரூபா வேலிடிட்டி” “என்னப்பா சொல்ற 110 ரூபா கார்டுக்கே 75 ரூபா வேலிடிட்டி இருக்கே” “ஹி ஹி ஆமா சார்” முறைத்தேன்,”சரி வேறென்ன ஸ்கீம் இருக்கு” “300 ரூ கார்டு 272 ரூபா வேலிடிட்டி” “இப்ப தானே ஒருத்தர் 330 ரூ வாங்கிட்டு போறார் எப்படி வெச்சாலும் 300 ரூ கார்டு பெட்டராச்சே ஏன் குடுக்கல?” சிம்பிளா சொன்னான் “அவர் கேக்கலை” அவருடைய ஒரு கேள்விக்கு மதிப்பு 50 ரூபாய், நாம் இப்படி எதையுமே கேட்பதில்லை, சோம்பேறித்தனமோ, கூச்சமோ கேட்பதேயில்லை.கேட்காமலும் கிடைக்கும் ஆனால் கிடைத்தது நிச்சயம் பெட்டர் சாய்ஸ் ஆக இருக்காது, அதனால் எப்போதும் விசாரிப்போம், வெட்கப்படாமல் கேட்போம், யாருக்குத் தெரியும் ... சில கேள்விகள் 50 ரூபாயை விட பல மடங்கு விலை மதிப்புள்ளவையாக இருக்கலாம்

Sunday, March 12, 2006

வல்லவனுக்கு வல்லவன்



என்னது தனுஷோட அடுத்த படமா...? இல்லைங்க நான் சொன்னது சவுத் ஆப்ரிக்காவப்பத்தி. நாங்க தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்ல 400 ரன் அடிக்கறவங்களா இருப்போம்னு ரொம்ப நாளாவே சொல்லிக்கிட்டிருந்தது ஆஸ்திரேலியா, ஆனா அது இப்படி அமையும்னு அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.ரெண்டு டீமும் சேந்து 872 ரன் அடிச்சிருக்கு ஒரே நாள்ல ஏதோ கஞ்சா போட்டுட்டு ஆடினாப்ல அதுக்குன்னு இப்படியா வெறி பிடிச்சு ஆட்றது.அதுவும் கடைசியா ஒரு பால் மிச்சம் இருக்கவே, இனி பவுலர்களுக்கு கஷ்ட காலந்தான்.அம்பயர் ஏன்டா வந்தோம்னு நினைச்சிருப்பார் அப்புறம், மத்த மேட்சில எல்லாம் நின்னா போதும் இந்த மேட்சில ரெண்டு கையயும் தூக்கிட்டு இல்ல நின்னிருப்பாரு.முதல்ல ரிக்கி பான்டிங் 160 ரன் 105 பாலுக்கு. நம்மூர்ல கேப்டன் பதவி வந்ததால நல்லா ஆட முடியல சுமை அதிகமாயிடிச்சின்னு கேப்டனாகிறவங்க எல்லாரும் (டிராவிட் உட்பட) சொல்றாங்க பான்டிங் என்னடான்னா வெளுக்கறாரு நம்ம கூட வேர்ல்ட் கப் ஃபைனல் ஆடின மாதிரியே தான் அங்கயும் ஆடியிருக்கார்.ஸ்கோரை பாத்து இந்திய அணி அன்னைக்கு மலைச்சு உக்காந்திருச்சு அது தப்பு துணிஞ்சிருக்கணும்னு சவுத் ஆப்ரிக்கா இன்னைக்கு நிரூபிச்சிருச்சு.ஆஸ்திரேலியாவ ஜெயிக்க முயற்சி பண்ற தகுதி இந்திய அணிக்கு தான் உண்டுன்னு எல்லாரும் நம்பினாங்க.ஆஸ்திரேலியாவ இப்ப ஈரத்துணி கட்டி ஓரமா உக்கார வச்சிருச்சு சவுத் ஆப்ரிக்கா.எல்லா தகுதி இருந்தும் ஒவ்வொரு தடவையும் வேர்ல்ட் கப் மிஸ்ஸாகிட்டு வந்த டீம் அது இந்த தடவையும் அப்படி நடக்கும்னு எனக்கு தோணலை

Saturday, March 11, 2006

நடிகர் முரளிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை

சந்தோஷமான அறிவிப்பு நான் விரும்பியதும் எதிர்பார்த்ததுமான எம்.பி.ஏ கனவு பலித்து விட்டது.மறுபடியும் ஸ்டூடண்ட் ஆகப்போகிறேண்.பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியில் திங்கட்கிழமை நடந்த மானாங்கன்னியான இன்டர்வியூவில் மிகுந்த போட்டிக்கிடையில் எப்படியோ (!?) என்னை செலெக்ட் செய்து விட்டார்கள்.விரைவில் மீண்டும் கல்லூரி மாணவனாக வலம் வரப் போகிறேன்.இது டபுள் பொனான்சா எப்படி என்கிறீர்களா? படிக்கப்போவது பாண்டிச்சேரியில் ஆயிற்றே

Thursday, March 09, 2006

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்


இன்று காலையில் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். நூறடி ரோடு அம்மன் கோவில் அருகே ஒரு வற்றாத ஜீவ குட்டை உண்டு.என் கெட்ட நேரம் ஏதோ சிந்தனையோடு ரோடு தாண்ட அங்கே நிற்க கடன் கேட்டவன் துரத்துவது மாதிரி வெறி பிடித்த வேங்கையாக தேங்கிய தண்ணீரை தெறிக்க விட்டு பறந்தான் ஒரு பஸ் ட்ரைவர்.உடனே முகுளமோ தண்டுவடமோ செயல்பட சட்டென்று திரும்பி நின்றேன். நல்ல வேளையாக முதுகு வரை சேறு எகிறவில்லை, கெட்ட வேளையாக முழங்காலுக்கு கீழே பேண்ட் நாஸ்தி.எனக்கு ‘சுர்’ரென்று கோபம் ஏறியது.எவ்வளவு அழகான காலைப் பொழுது, இப்படி டென்ஷன் ஏற்றி விட்டானே, சரி அவனுக்கு என்ன டென்ஷனோ வீட்டில் மனைவி திட்டோ, வேலை பிடிக்கவில்லையோ அப்படியானால் ஒரு வேளை அவனுடைய டென்ஷனை நான் வாங்கிக் கொண்டேனோ ஆமாம் ஒரு வகையில் உண்மை தானே ஆஹா காலையில் நிதானமாக இருந்தால் எவ்வளவு தத்துவங்கள் கொட்டுகின்றன? ஆகவே எதற்காக மற்றவர்களின் டென்ஷன்களை நாம் வாங்கி கஷ்டப்பட வேண்டும் அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்முடைய டென்ஷனை மட்டும் நாம் வைத்துக்கொள்வோம்.

இன்னொரு தொல்லை ஆரம்பம்

சில நாட்கள் ஆப்ஸென்ட் ஆனதற்கு மன்னிக்கவும்.இனிய தளம் என்று இன்னொரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் (’அய்யய்யோ’ கேட்கிறது).என்ன செய்ய? பூக்காடு மொழி பெயர்ப்பு தளம் ஆகிவிட்டதோ என்கிற மாதிரி வரிசையாக சில பதிப்புகள், மற்ற நல்ல ஆங்கில தளங்களின் கருத்துகளை எழுதியிருந்தேன்.தினமும் நிறைய புது தளங்களை பார்ப்பதால் அதை சொல்ல வேண்டும் என்ற வேட்கை எழுவது இயற்கையே எனினும் பூக்காட்டில் சொந்தமாக ஏதாவது யோசித்து எழுதுவோமே என்று இணையத்தில் என்னைக் கவர்ந்தவற்றை இங்கே தொகுக்கிறேன்.

Wednesday, March 01, 2006

பழமொழிகளை அனுபவிக்கணும்

சிறு வயதில் பட்டி மன்றங்கள் அதிகம் பார்ப்பேன், அதில் பெரும்பாலும் தமிழ் பற்றி அவர்கள் சொல்லும் உவமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.அதே போல் பழமொழிகளுக்கு புது விளக்கம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு “பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்பதற்கு கேள்விப்பட்ட புது விளக்கம் நம் கை சாப்பிடும்போது முன்னால் வரும் அது தான் பந்திக்கு முந்து, அதே போல் போரில் ஈட்டியை எறியும்போது கை பின்னால் போகும் இது தான் படைக்குப் பிந்து என்பது அதாவது கை பின்னால் போகிறது என்பது என்று கேள்விப்பட்டேன். இதே மாதிரி “சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்” சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் அகப்பை (கருப்பை) யில் கரு வரும் என்பதே உண்மையான பொருள் என்று சொன்னார்கள்.இதெல்லாம் தான் உண்மையா இல்லை சில பலரின் கிரியேட்டிவிடியா ஒன்றும் புரியவில்லை.கமல் ஒரு படத்தில் சொன்னது போல் பழமொழிகளை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.