Monday, February 27, 2006

கூகிள் ரெஃபெர்ரல்

கூகிள் ரெஃபெர்ரல் ப்ரோக்ராமில் இதற்கு முன் நேரக்கெடு எதுவும் இல்லை, சுமார் ஒரு மாதம் முன்பு ரகசியமாக 90 நாட்களுக்குள் நம்மால் ரெஃபர் செய்யப்படுபவர் 100 $ க்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற விதி கொண்டு வந்தது.இப்போது அக்கால அளவை 180 நாளாக நீட்டித்துள்ளது.எனக்கென்னவோ புதிதாக பயன்படுத்துபவர்கள் டெஸ்ட் செய்யவே இவ்வளவு காலம் ஆகி விடும், பேசாமல் ரெஃபர்ரல் பட்டனை எடுத்து விடலாமா என யோசிக்கிறேன் மேலும் விவரங்களுக்கு க்ளிக்

Saturday, February 25, 2006

பால்யமென்னும் நிழல்

குழந்தைப்பிராயத்தின் நினைவுகள் முதல் காதலை விடவும் இனிமையானவை.காட்டு மலர்ச்செடி போல மனதின் ஏதோ ஒரு மூலையில் அது தினமும் பூக்கிறது.நாம் அப்பிரதேசத்துக்குள் என்றாவது தான் நுழைகிறோம் அதுவும் நேரமில்லாத பயணி போல.

சிறு வயதில் புளியாங்காய் அடித்து உப்பு தொட்டு சாப்பிடும் போது ஒரு மிகப்புதிய புளிப்பு நாக்கில் உரசும், அதன் சுவை தாளாது சட்டென வெளியில் எடுத்து விடுவோம்.ஆனால் அதன் ருசி இப்போது வரை புளிப்பாக அடிநாக்கில் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது.அதிலும் பாதிப்பழம், பாதிக்காயாக ஒரு பருவம் உண்டு அதை பூப்பழம் என்போம் ( நிறைய பெயர்கள் உண்டு).அது கிடைப்பதும் அரிது ஆனால் சுவை வர்ணிக்க இயலாதது.

ஈவில் டெட் படம் ரிலீஸ் ஆகும்போது பல கதைகள் உலவும், தனியாகப்பார்த்தால் கோடி ரூபாய் பரிசு பிரிவியூ பார்த்த போது டைரக்டரே செத்து விட்டார் ஒரே ஒருவன் தனியாக பார்த்து வெளியே வந்தான் அவனும் அன்று இரவு தூங்கும்போது ரத்தம் கக்கி செத்து விட்டான் அந்த படத்தை தனியாக பார்க்கும்போது சீட்டுக்கடியில் ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள் என்று பல கதைகள் உலவும்.அதிலும் ஆசை சாக்லேட் பேப்பரை அதிக தூரம் இழுத்தால் பரிசு என்று நம்பி வாங்கி வாங்கி அவசியமாக கவனமாக இழுத்துக்கொண்டிருப்போம், இவையெல்லாமே குழந்தைகளின் நேரத்தை கழிக்க குழந்தைகளாலேயே உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.

எனக்கு சிறு வயதில் முக்கிய வேலையே என் எல்லா பிராப்பர்டியையும் பாதுகாப்பது தான்.ஆனாலும் சரியாக கிளம்பும் நேரத்தில் பேனா, ரப்பர், காம்பஸ் ஏதாவது காணாமல் போகும், அரை மணி நேரம் தேடியும் கிடைக்காது, சாயங்காலம் வீட்டுக்கு வந்தால் கண் முன்னாலேயே சமர்த்தாக உட்கார்ந்திருக்கும்.நான் ஏதோ ஒரு குட்டிச்சாத்தான் தான் அவைகளை தன் மாய உலகுக்கு எடுத்துப்போய் விட்டு திரும்ப வைத்து விடுவதாக நம்பினேன்.

தூர்தர்ஷன் தான் கதி என்றிருந்த காலத்தில் ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை படம் இவை தான் பொழுது போக்கு.ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னை படம் பார்க்க பக்கத்து தெருவுக்கு கூட்டிப்போனார்கள். ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ எம்ஜிஆர் அண்ணன் குகைக்குள் மாட்டிக்கொண்ட வேளையில் விளம்பரம் போட்டு படத்தை முடித்து விட்டார்கள்.டிவியை ஆஃப் பண்ணி வெளியே அனுப்பி விட்டார்கள்.எனக்கு அதற்கப்புறம் என்னாகும் என்ற சஸ்பென் ஸ் தாள முடியவில்லை, ஆனால் அதற்கு மேல் படம் போட மாட்டார்கள் என்று எனக்கு புரிய வைக்க முயற்சித்தார்கள் ‘அது திரை மலர்’ என்று.நான் வெளியே அனுப்பத்தான் இப்படி சதி செய்கிறார்கள் என்று ரொம்ப நாள் நம்பினேன்.

சமீபத்தில் திருப்பதி போயிருந்தோம்,அங்கே லட்டு வாங்குமிடத்தில் எடுத்துப்போக பை நாமே தான் எடுத்து வர வேண்டும்.வெளியே பாலிதீன் கவர் விற்பார்கள் ஆதலால் லட்டு வாங்கி வெளியே வந்தோம் வேக வேகமாக ஒரு சிறுமி வந்து விற்றாள் அவளிடம் எவ்வளவு என்று கேட்டதற்கு ஒரு கவர் இரண்டு ரூபாய் என்றாள், எங்களுக்கு இரு கவர் தேவை ஆனால் இரண்டு ரூபாய் தான் உள்ளது (திருப்பதியில் சில்லரை கிடைப்பது கடினம், ஒருவேளை எல்லாம் உண்டியலில் போய் விடுகிறதோ என்னவோ) அவள் ஒப்புக்கொள்ளவேயில்லை.எங்கள் குடும்ப நண்பர் அச்சிறுமி கன்னங்களில் கொஞ்சுவது போல் கை வைத்து “என்னடா கண்ணா ரெண்டு ரூபாய்க்கு ரெண்டு தரக்கூடாதா”.என்றார்.அவ்வள்வு தான் அவள் உருகி விட்டாள், லேசாக சாய்ந்தாற்போல் நின்று அழகான புன்னகையோடு "“ஃப்ரீயாவே எடுத்துக்கங்க” என்றாள்.”பரவாயில்ல” என்று காசு கொடுத்து விட்டு நடந்தோம்.

கடைசியாக திரும்பி பார்த்தேன் அவள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ’டாடா’ காட்டினேன் அவளும் ‘டாடா’ காட்டினாள் அப்போது தான் கவனித்தேன் அவள் கண்கள் லேசாகப் பனித்திருந்தன.எனக்கு அப்போது தான் சுரீர் என உறைத்தது, ஒருவேளை இது போல் யாரும் அவளிடம் பேசியிருக்கவே மாட்டார்களோ? என் பால்யம் நிறைய கற்பனைக்கதைகளும், விளையாட்டுகளும் நிறைந்ததைப்ப் போல இவள் வாழ்க்கை பாலிதீன் கவர்களால் நிரப்பபட்டிருக்கிறதோ? அடுத்த முறை வரும்போது வெங்கடாஜலபதியை பார்க்கிறோமோ இல்லையோ லட்டு தருமிடத்தில் பாலிதீன் கவர் விற்கும் சென்னையை சேர்ந்த குமாரி என்கிற உதய குமாரியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.நீங்கள் கூட திருப்பதி போய் அவளைப்பார்க்க நேர்ந்தால் அவளை நான் கேட்டதாகச் சொல்லுங்கள் முடிந்தால்.

Thursday, February 23, 2006

ரஜினியின் அடுத்த மூவ் ||

விஜயகாந்த் ஏற்கனவே வந்தாயிற்று அரசியலுக்கு. திராவிட கட்சிகளுக்கு மாற்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிற தருணத்தில் “எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்” என்ற திறமையான வாதத்தை முன் வைக்கிறார்.ஆனால் அதைத் தவிர எதையும் பேச பயப்படுகிறார்.சில நேரங்களில் "பறவைக்காய்ச்சல் புரளி" என்று வித்தியாசமான பேட்டி கொடுப்பது சுப்ரமணிய சுவாமியை நினைவூட்டுகிறது.இரு திராவிட கட்சிகளின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி லட்டு மாதிரி மக்கள் மனதை அள்ள வேண்டிய நேரத்தில் தயங்கி தயங்கி வம்புக்கு இழுப்பது எதுவும் வேலைக்கு ஆகாது.ஆக இன்னும் ஐந்து வருடங்களில் ஒன்று விஜய காந்த் அரசியல் கற்றுக்கொள்வார் அல்லது ஒதுங்கி விடுவார்.கருணாநிதியும் ஓய்வு பெறும் நேரம் வந்து விடும்,திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி அடுத்த கட்ட தலைவர்கள் உருவாக்கப்படவில்லை அல்லது உருவாக்கப்படுபவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

ஆக நேரம் கூடி வருகிறது என்பார்களே அப்படி ஒரு வாய்ப்பு ரஜினிக்கு அடுத்த ஐந்து வருடங்களில் நிகழலாம்.இமேஜை திரும்ப கொண்டு வர ஐந்து வருடங்கள் என்பது அளவுக்கு அதிக நேரம், நினைத்ததை விட அதிகமாகவே செய்யலாம்.அது மட்டுமன்றி ரஜினி என்றாலே கட்சிகள் எடுக்கும் முதல் பிரச்னை காவிரி நீர் தான் அதை சமாளிக்கவும் கடந்த காலத்தில் இதே பிரச்னையால் மக்களிடம் தனக்குள்ள கெட்ட பெயரை நீக்கவும் ரஜினி முயற்சிக்கலாம்.ஏன் திரும்ப ஒரு முறை அரசியல்வாதிகள் ரஜினியை வம்புக்கு இழுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதையே தனக்கு சாதகமாக மாற்றி அதிரடியாக ரஜினி பிரவேசிக்கலாம் அல்லது எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தது போல வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கலாம்.

சமீப காலமாக ரஜினி இவ்வளவு சீக்கிரம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டதில்லை சிவாஜி மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக? சந்திரமுகி வெற்றி ரஜினிக்கு முழு திருப்தி அளிக்காததாக இருக்கலாம். காரணம் அதன் வெற்றி ரஜினியால் மட்டுமே வரவில்லை.அந்தக்கதையின் பலமே ஜோதிகா கேரக்டர் தான். நூறாவது நாள் விழாவில் ஜோதிகா கலந்து கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக பத்திரிக்கைகளில் விமர்சிக்கப்பட்டதை நினைவில் கொள்க.ரஜினியின் இப்போதைய மிக முக்கிய நிலைப்பாடு பழைய இமேஜுக்கு வருவது அதற்கு வரப்போகும் வருடங்கள் சாட்சியாக அமையலாம்.

Wednesday, February 22, 2006

ரஜினியின் அடுத்த மூவ்

எல்லா பத்திரிக்கைகளும் ரஜினி இந்த தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று யூகங்கள் வெளியிட ஆரம்பித்து விட்டன. எனக்கென்னவோ இந்த தேர்தலுக்கு ஓட்டு போடறத தவிர அவரு எதையும் பண்ண் மாட்டார்னு தோணுது (யாருக்கு போட்டார்னு சொல்லவும் மாட்டார்).அப்போ ரஜினி அரசியலுக்கு வரப்போறதில்லயா? அதான் இல்ல கண்டிப்பா அடுத்த தேர்தல்ல ரஜினிய எதிர்பாக்கலாம்.சரி ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி சொல்றேன்?

முதல்ல பாபாவுக்கு முன் ,பாபாவில், பாபாவுக்கு பின் அப்டின்னு இத பாப்போம் அதாவது பாபாவுக்கு முன்னே ரஜினியின் இமேஜ் அளவிட முடியாதது.கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்கன்னா பாட்ஷாவுக்கு முன்ன ஒரு ரெண்டு வருஷமாவே ரஜினி படங்கள் சுமாராவே ஓடிட்டிருந்தது... கோபப்பட வேண்டாம், 100 நாள் படங்கள் தான் ஆனாலும் சுமார் தான் நல்ல உதாரணம் உழைப்பாளி,அண்ணாமலை.அடுத்ததாவோ அதுக்கு முன்னாடியோ பாண்டியன் வந்தது (தேவர் மகனும் இந்த படமும் ஒண்ணா வந்தது ரஜினி, கமல் படங்கள் ஒண்ணா வந்து அதில கமல் படம் ஹிட் ஆனது இங்க மட்டும் தான்,மத்த எல்லா தடவையும் ரஜினி படங்கள் தான் ஹிட்).ஆனா பாட்ஷா இந்திய அளவில ரஜினிக்கு பேர் வாங்கி கொடுத்தது.அதுக்கப்புறம் (இன்னமும் அதிக) உயரம் போக ஆரம்பித்தார். ஜெயலலிதாவுடனான உரசலில் முதல் தடவையாக நேரடியாக அரசியலுக்கு வரவேண்டிய சூழ் நிலை.

அப்போது மட்டும் கட்சி ஆரம்பித்திருந்தால் ,முதல்வராகியிருக்க முடியும் என்று இப்போது வருத்தப்படும் ரசிகர்கள் உண்டு.ஆனால் அதை செய்யவில்லை. 'இன்னொரு முறை இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது' என்று பேட்டி மட்டும் தான் கொடுத்தார்.அந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதற்கு ரஜினி முக்கிய காரணமானார். இது முதல் தவறு, ஆனாலும் தியரிடிகலாக ஸ்டடி ஆனார்.

அடுத்தது ‘முதல்வன்’ படத்தில் ஒப்புக்கொள்ளாமல் போனது.ரஜினிக்காகவே ஷங்கர் உருவாக்கிய படம் அது (அதன் இந்தி பதிப்பில் ஹீரோ பெயர் சிவாஜி ராவ் இதை வைத்து தான் பாலிவுட்டிலேயே விளம்பரம் செய்யப்பட்டது எப்படியும் அங்கு படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்).இப்போது பாபாவுக்கு வருவோம்,அதிக எதிர்பார்ப்பு ரஜினியின் கடைசி படம் என்கிற புரளி (ஒருவேளை ஹிட் ஆகியிருந்தால் நிஜமாகியிருக்கலாம்) இப்போது வரை ரஜினியின் இமேஜ் ஏறுமுகம் தான்.இந்த இடத்தில் கேசட் ரிலீஸ் இதுவரை இல்லாத வகையில் தியேட்டர் டோக்கன் கொடுத்து வித்தியாசமாக தரப்பட்டது.லேசாக நடு நிலையாளர்க்ள் மத்தியில் அதிருப்தி ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் ரஜினி இல்லை.பாடல் வெளியீட்டுக்குப் பிறகு ஒரு பாடலில் பெரியார் பற்றிய சர்ச்சை எழுந்தது இது தான் இங்கு வந்த முதல் பிரச்னை.சினிமாப்படங்கள் மீது கேஸ் போடும் வழக்கம் இங்கிருந்து தான் ஆரம்பமானது. வழக்கம் போல இதை அஹிம்சையாகவே ரஜினி சமாளித்தார் ஒரு பத்திரிக்கையில் அப்போது ரஜினி செயல்பட்ட விதத்தை இப்படி பாராட்டியிருந்தார்கள்,” தற்காலிகப் புகழுக்காக இதை செய்தவர்களுக்கு ரஜினி சரியாக பதிலடி தந்து விட்டார்.படத்திலிருந்து எடுப்பதாக சொல்லி பிரச்னையை முடித்து விட்டார்.ஆனால் ஆடியோ கேசட்டுகளில் ஏற்கனவே பதிந்ததை எப்படி மாற்ற முடியும் எதிர்ப்பவர்களால்?”.

மலேசிய கலை விழாவில் "அடுத்தது நான் போகப்போகிற பாதை ஒன்று இருக்கிறது.ஆனால் அது அரசியல் இல்லை" சற்று நிறுத்தி விட்டு "இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்" என்றார்.பயங்கர க்ளாப்ஸ் ஆனால் அரசியல் டெஸ்ட் ஆரம்பித்தது.

ராமதாஸ் ரஜினிக்கு ஒரு டெஸ்ட் ஆக வந்தார்.ஒருவேளை ரஜினியின் அமைதியாக இருப்போமே என்கிற குணத்தை வைத்து முடிவெடுத்தாரோ என்னமோ எதிர்த்தார்.எதிர்க்க வேண்டுமே என்கிற மாதிரி ஒரு வாதம் ‘புகை பிடித்து எதிர்கால சந்ததிக்கு தவறான வழி காட்டுகிறார்’ (இதை எதிர்த்து இவர்களே இன்னமும் சட்டம் கொண்டு வரவில்லை / முடியவில்லை,இது ஏன் சப்பையான வாதம் என்று வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம்) ஆனால் ராமதாஸ் ஜெயித்தார் மிக முக்கிய காரணம் பாபா படக்கதை.சும்மா விட்டிருந்தாலே அந்தப்படம் ஓடியிருக்காது, ஏதோ அவர்களது பிரச்சாரத்தில் தான் ஓடாமல் போனது என்கிற மாதிரி தங்கள் இமேஜை உயர்த்திக்கொண்டார்கள்.சரியாக ரஜினி குழம்பியிருந்த நேரத்தில் காவிரிப்பிரச்னையை கையில் எடுத்தார்கள்.பிரச்னையை விட ரஜினி நிலைப்பாடு என்ன என்பதே அந்த வருடப்பிரச்னையின் முக்கிய நோக்கம் (இப்போது வரை காவிரிப்பிரச்னை இருக்கிறது) ஆனால் அந்த வருடம் தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிதாக ஆரம்பித்தது.ரஜினி நெய்வேலிப்போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.மொத்த தமிழகமும் வெறுப்படைகிற தர்மசங்கட சூழ்நிலை.முன்பு சொன்ன ரஜினியை ஆதரித்து பேசிய தினசரியே 'கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை' என்று விமர்சித்தது, கலைக்கப்படும் ரசிகர் மன்றங்களை படம் பிடித்துப்போட்டது. தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ரஜினி இங்கே ஜெயித்தார்.மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தார்,பல கட்சித்தலைவர்கள், கட்சி சார் நடிகர்கள் எல்லோரும் பங்கேற்றார்கள். சில நாட்களில் 'ஜக்கு பாய்' அறிவிப்பு வெளியிட்டார்."இறைவா நண்பர்களிடமிருந்து காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற கேப்ஷன் பெரிதாகப்பேசப்பட்டது.தேர்தலில் அதிமுகவுக்கு சப்போர்ட் பண்ணினார்.அனைவரும் அறிந்த கடைசி தவறான முடிவு.வரலாற்றுத்தோல்வி. இப்போதுவரை தான் குழப்பங்கள்.சட்டென்று காட்சிகள் மாற்றினார்.பழைய குரூப்பை ஒதுக்கினார், முற்றிலும் எதிர்பாராத காம்பினேஷனில் 'சந்திரமுகி'. (டைட்டிலில் கூட ஹீரோயிஸம் இல்லை) சொன்னபடி மிகப்பெரிய வெற்றி.தான் வசூலில் இன்னமும் சூப்பர் ஸ்டார் தான் என்று இன்னொரு முறை நிரூபித்தார் (கூட கமல் படம் ஒன்று வந்தது அதன் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?).அடுத்த மூன்றாவது வாரங்களில் இரு முன்னணி வார இதழ்களில் தொடர் கட்டுரைகள் , பார்க்காத புகைப்படங்கள்.படம் 100 நாள் ஓடுமுன்பே அடுத்த படம் பற்றிய பேச்சு வர ஆரம்பித்தது.அதே போல 'சிவாஜி' அறிவிப்பு.இவைதான் இதுவரை நடந்தவை.சரி அடுத்து என்ன நிகழும்? உண்மையிலேயே சினிமா போதும் என விரும்பினால் சில பல நிகழ்ச்சிகளை ஏன் நடத்தினார்? நாளை சொல்கிறேன்

Friday, February 17, 2006

என் கேள்விக்கென்ன பதில்?

எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் ஹாய் மதனில் கேட்க நினைப்பேன். ஆனால் சோம்பேறித்தனத்தால் அது என் மூளையில் சுமையாகவே தேங்கி கிடக்கிறது.உங்களுக்கு தெரிந்தால் விடை சொல்லுங்களேன்?

தமிழ் தான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்றும் தெலுங்கு,கன்னடம் & மலையாளம் ஆகியவற்றின் தாய் என்றும் சொல்கிறோம்.தெலுங்கு,மலையாள நண்பர்களிடம் பேசும்போது தெரிந்தது,அவர்களும் அவர்களது தாய்மொழியே பழமையானது மற்றும் அவற்றிலிருந்தே மற்ற மொழிகள் (தமிழும்) வந்ததாக கூறுகிறார்கள்.எது உண்மை?

Thursday, February 16, 2006

இலக்கணம்

எல்லோரிடமும் சொல்லியிருந்தேன்
கல்லூரியில் படித்த போது
எனக்கொரு தோழி இருந்தாள்
என்னை ஊக்குவித்த தேவதை
தோல்விகளில் கை கொடுத்தவள்
முயற்சிகளுக்கு உருவம் கொடுத்தவள்
நம்பிக்கைக்கு உயிர் க்டுத்தவள்
அந்த நல்ல நாளில் அறிமுகப்படுத்தினேன்
எல்லோர் முகத்திலும் ஏமாற்றம்
அப்புறம் தான் புரிந்தது...
அவர்களைப் பொறுத்தவரை,
'தேவதை என்பவள்
அழகாக இருப்பாள்!'

Wednesday, February 15, 2006

கடுப்பு கனவு இம்சை இரவு

இரவு மணி 10:30
காத்து கருப்பு சீரியல் பார்த்தால் காலை லேட்டாகும். ‘சுர்ர்ர்’ ஆ.. ஏதோ கடித்து விட்டது, மேல் தொடையில் உடனடி தடிப்பு.பயமாத்தான் இருக்கு ம்ச்ச் காலைல பாத்துக்கலாம்.

11 மணி
தூங்க ஆரம்பிக்கிறேன்.ஒருவேளை ஸ்பைடர் மேன் படத்தில வர்ற மாதிரி சிலந்தி கடிச்சிருந்தா...அய்யா பஸ்ல போற தொல்லையே இல்ல செலவும் மிச்சம் ஆனா சீக்கிரம் வீடு மாறிடணும், இந்த பக்கம் தான் மாடியே இல்லயே அப்புறம் எங்கே தாவுறது?....தூங்கி விட்டேன்.

12:30

கைகளில் கொத்தாக வலி, தேய்த்து விடலாமென்றால் தூக்க முடியவில்லை...இரண்டு கைகளையுமே லேசாக அசைக்க முயற்சி செய்தேன் பூச்சிகள் விறுவிறுவென்று ஏறுவது போல இருந்தது...ஆபத்து லைட்டை போடு முழுதும் இருட்டு யாரையாவது கூப்பிடு “அம்மா... லைட்டப்போடு” பலனில்லை வலி சுர்ர்ரென்றது கத்த ஆரம்பித்தேன்... " ர்ர்ர் ர்ரா ஆ ஆஆ ஆஆஆஆஆ".இடையில் நண்பன் குரல்,”டேய் ஏன்டா கத்துற...வேஷ்டிய ஒழுங்கா கட்டுறா லைட்ட போட்றேன்”.சரேலென வெளிச்சம்....இது வீடில்லை ரூம்.கைகளில் வலி...? வலியில்லை கண்ட மேனிக்கு படுத்ததில் மரத்துப்போய் விட்டது.பக்கத்து வீட்டு கணவன் மனைவி கதவைத்தட்டினார்கள் நண்பன்,“ஹி ஹி ஒண்ணுமில்ல தூக்கத்தில உள்றிட்டான்”.மனைவி,”இப்படியா அதுக்கு கத்துவாங்க?” கணவன்,”ஏதாவது உருவம் ஜன்னல் வழியா பாத்தாப்லயா?” (அவருக்கு ரொம்ப நாளாகவே திருடர் சந்தேகம்)

காலை 5:45

“ நாதாரி நைட் வேற காத்து கருப்பு பாத்தேன்.இவன் கத்தின கத்துல நான் அரண்டுட்டேன்". நண்பனின் புலம்பலில் எழுந்தேன் அப்புறமென்ன கொஞ்சம் வழிந்து விட்டு எங்களுக்கு வந்த வித்தியாசமான கனவுகளைப்பற்றி பேசி விட்டு கிளம்பி விட்டேன்.சரி இதே போல உங்களுக்கு வந்த அல்லது பயமுறுத்திய கனவுகளைப்பற்றி கமென்ட்டில் பகிருங்களேன்.

Tuesday, February 14, 2006

உங்களுக்கு தள்ளிப்போடும் குணமுள்ளதா?

ஆங்கிலத்தில் ப்ரோக்ராஸ்டினேஷன் எனப்படும் இந்த தள்ளிப்போடும் பழக்கம் தான் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பின்வரும் கேள்விகளுக்கு நெகடிவ் பதில் சொல்கிறீர்களா என செக் செய்து கொள்ளவும்:
கடைசி பத்து டெட்லைன் சம்பந்தபட்ட விஷயங்களை எப்போது முடித்தீர்கள்? அல்லது எத்தனை முடிக்காமல் விட்டீர்கள்? அதாவது தீபாவளீக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு துணியெடுப்பது, கரென்ட் பில், டெலெபோன் பில் அபராதத்துடன் கட்டுவது மாதிரி.

ஒருவேளை நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் பார்ட்டிகளில் உங்களோடு இருக்கும் எல்லோரையும் விட அதிகமாக குடித்தீர்களா? இல்லையென்றால் அப்படி யார் குடித்தார்களோ அவர்களுடன் கவனமாக பழகவும்.ஏனென்றால் இந்த பழக்கம் உள்ளவர்கள் அதிகம் குடிப்பார்கள் என்று சைக்கலாஜிகல் டுடே பத்திரிக்கை கூறுகிறது.

”இன்றை விட நாளை இந்த வேலையை நன்றாக செய்வேன்” “இது முக்கியமானதல்ல” என்பது போன்ற வரிகளை உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டா என கவனியுங்கள். அதே போல் “ நான் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படுவேன்” என கூறுபவரா? (இன்டர்வியூவில் இதை பிளஸ் பாயின்டாக சொல்வதை தவிர்ப்பது நலம்.)

இரண்டிலிருந்து நான்கு வருடங்களாக மிகப்பெரிய மாற்றம் எதையும் சந்திக்கவில்லையா? எவ்வளவு வேலை இருந்தாலும் மெயில் ஒன்று வந்தால் பார்த்து விட்டு தான் மறுவேலை.

இவற்றில் எந்த கேள்விக்கு ஆமாம் என்று சொல்லியிருந்தாலும் எச்சரிக்கை...தள்ளிப்போடும் பழக்கம் தான் வெற்றியை தவிர்க்க மிக சுலபமான வழி

Friday, February 10, 2006

காதலில்

உன் முத்தங்களை நிரப்ப என் கன்னக்குழி
உனக்குப் போதுமானதாயிருந்தது
ஒரு குழந்தையுடனானதை
ஒத்திருந்தது உன் ஸ்னேகம்
கவிஞனின் கண்களுக்கு கிடைத்த மஞ்சள் நிலவைப்போல
என் காதல் சரியாக உன்னிடம் சேர்ந்திருக்கிறது
துருப்பிடித்த இரும்பின் மரப்பலகை முத்தங்களாய்
காமத்தைப் பதிக்கிறாய்
ஏழைத்தாயின் அழுக்குச்சேலை தான்
அக்குழந்தைக்கு அற்புத வாசம்
ரயில் பயணத்து அதிர்வுகள் போல - உன்
சிறுு குறைகளும் எனக்கு சுகம் தான்