Tuesday, December 27, 2005

பொது அறிவு

எனக்கு தெரிஞ்ச அரிதுன்னு (நம்புற) பத்து விஷயங்கள் இதோ:

1.வின்டோஸில் con என்று (எந்த கேப்பிடல்,சிறிய எழுத்து காம்பினேஷனிலும்) எந்த ஃபைலையும் சேமிக்க முடியாது
2.ஃப்ளாஷ்பேக் முறையில் முதலில் கதை சொன்னவர் அல்லது அதை கண்டுபிடித்தவர் 'அகிரா குரோசோவா'
3.ஒரு நிமிடத்திற்கான செல்ஃபோன் கட்டணம் குறைவாக உள்ள நாடு 'இந்தியா'
4.குளிர்நீரானால் தலையிலிருந்தும் சுடுநீரானால் காலிலிருந்தும் ஊற்றி குளிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதா.
5.முட்டையில் வெள்ளை கரு தான் உயிர் மஞ்சள் கரு அது உண்ண இருக்கும் உணவு
6.எஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் படம் 'நேருக்கு நேர்'
7.தமிழிலும் , ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு ஒரே பொருள் தரும் வார்த்தை
'ஏடிட்டோரியல்' அதாவது ஏடு + இட்டோர் + இயல் ஆங்கிலத்தில் editorial
8.உலகப்புகழ் பெற்ற வலது கை ஆட்டக்காரரான சச்சினிடம் ஆட்டோகிராஃப்
வாங்கினால் கவனியுங்கள் அவர் இடது கையில் தான் போடுவார் (அவர் இடது கைப்பழக்கம் உள்ளவர், ரொம்ப சுற்றி வளைத்து விட்டேனோ)
9.தேன் தலையில் தேய்த்தால் நரைக்காது,பாம்பு தேன்,பால் சாப்பிடாது
10.காந்தி வாழ்நாளில் விமானப்பயணம் செய்ததில்லை (அப்போது விமானம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது)

Thursday, December 22, 2005

ஒரு வெண்பா (என்றே நினைக்கிறேன்)

ரொம்ப நாளா வெண்பா எழுத ஆசை... எழுதிட்டேன்

பாறைகளில் பொறித்தார்கள் பெருமை தனை
சேர சோழ பாண்டியர்கள் - அறிந்தால்
வருந்துவார்கள் அப்பளத்தில் எதற்கு இந்த
வீரத்தமிழன் எழுதுகிறான் பெயர்?

Thursday, December 15, 2005

சிவாஜி சிவாஜி சிவாஜி - வெளிவராத தகவல்கள்

என்னப்பா இது எங்கிட்டு திரும்பினாலும் சிவாஜியப்பத்தியே பேசுறாங்க
நானும் சும்மா இல்லாம விசாரிக்க ஆரம்பிச்சேன்
ஆச்சர்யம்... நிறைய புது விஷயங்கள் கெடைச்சுது
விட்டா வேற பத்திரிக்கையோ ப்லாக்லயோ பப்ளிஷ் பண்ணிடுவாங்க
அதுக்கு முன்னாடி பிடிச்சிக்கோ

1.இந்தியாவில் முதல் முறையாக ஓட்டு முறையை கொன்டு வந்த அரசர் சிவாஜி
2.போரில் வெற்றி பெற்றாலும் தோற்ற நாட்டினரின் பெண்களையோ, மத புனித பொருட்களையோ சேதம் செய்ய தடை விதித்த ஜென்டில் மேன்
3.தமது நாட்டிலேயே மற்ற மதத்தினருக்கு சம உரிமை தந்தவர் (அரச சபையிலேயே பதவி தரப்பட்டிருக்கிறது)
4.தமிழ்நாட்டில் இருக்கும் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் இவரால் வெற்றி கொள்ளப்பட்டவை
5.இவரது முழுப்பெயர் சிவாஜி போன்ஸ்லே
6.மகாராஷ்டிராவில் சிவாஜி பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் விமான நிலையமும் இயங்குகின்றன
7.மராத்தி இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் நிறைய ஹீரோயிஸ கதைகள் சிவாஜி பெயரில் உள்ளன

போதுமா....? என்னங்ணா சிவாஜி படத்த பத்திங்ளா அது ரஜினி நடிக்றார்னு கேள்விப்பட்டனுங்ணா
அடி விழறதுக்கு முன்னாடி கெளம்பறேனுங்கோவ்

Wednesday, December 14, 2005

தடுமாற்றம்

'சட்'டென்று மாறுகிறது...
இயல்பின் நிறம்!
ஏதோ ஒரு ஏலியன்
கற்றுத்தந்ததோ...
காமம்?

Tuesday, December 13, 2005

இது ரெண்டும் ஹைக்கூன்னு நம்பறேன்

ஒரு முறை ஹைக்கூன்னா என்னன்னே தெரியாம எழுதி திட்டு வாங்கினதும் கூகிள் - ல அதப்பத்தி ஆராய்ச்சி பண்ணினதுல எல்லா விவரமும் சுமார் 50 சொச்சம் ரூல்ஸும் கெடைச்சது
எதிர்மறை விமர்சனத்தால் குட்டிய சுந்தருக்கு நன்றிகள் பல

பக்திப் பாடலின் நடுவே
கண் மூடினேன்
நிர்வாணம்

புழக்கத்தில் பத்து பைசா
ஏர்செல் புண்ணியத்தால்

அப்படியே இன்னொரு பதிவின் பக்கம் (இன்னமும் தமிழ் மணத்தில பதிவு பண்ணலை ஹி ஹி)

Sunday, December 11, 2005

பாரதியார் , ரஜினி , நான்

இன்று பாரதியார் பிறந்த நாள், தமிழக அரசு ஒப்புக்கு தரும் பேப்பர்
விளம்பரம் தவிர நான் எதிலும் இது பற்றி பார்க்கவில்லை
புதுக்கவிதை என்ற பெயரில் எதையோ கிறுக்கும் ஒரே காரணத்தால்
எனக்கும் பாரதி சொந்தமே

எல்லோரும் மறந்தார்கள் என்று புலம்புவதிலோ திட்டுவதிலோ அர்த்தமில்லை
என்றே நம்புகிறேன்.
சிறு வயதில் கேட்ட ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சி நினைவில் வருகிறது(நானும் பாரதி பாடல்களில் அதிக புலமையுள்ளவனல்லன் என நினைவில் கொள்க)
அதில் பேச்சாளர் சொன்னார்: காணி நிலம் வேண்டுமென்ற பாரதி பாடல் உங்களுக்கு நினைவில் இருக்கலாம் அந்த பாடலின் இடையே கத்தும் குயிலோசை கேட்க வேண்டும் என்றொரு வரி வரும். என் வகுப்பில் ஒரு மாணவன் கேட்டான் "அதெப்படி குயில் கத்துமென்று சொல்லலாம்? கூவும் என்றல்லவா சொல்ல வேன்டும்? பாடலில் பிழை" என்று.நான் சொன்னேன்,"அதற்கு இரண்டடி முன்னால் இளம்பென்னொருத்தி அருகில் வேண்டுமென்றானே இளம்பெண் அருகில் இருந்தால் உனக்கு குயில் கத்துமா கூவுமா" என்று.கைத்தட்டல்
பற்றி கேட்கவா வேண்டும்?
(பாடல் வரிகள் முழுமையாக நினைவில் இல்லை மன்னிக்கவும்)

அடுத்தது ரஜினி

நமக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும் விளம்பரங்கள் விடாது.
எஸ் எம் எஸ் பண்ணுங்க ரஜினி கூலிங் கிளாஸ் ரஜினி சட்டை
என்று ஒரே ரவுசு.ஒரு படத்தில் வடிவேலு சொல்வார்: நான் ஏன்டா நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போறேன்னு.அது போல தமிழ்நாட்டுல இருக்கிறது குத்தமாடான்னு கேட்கணும் போல.எனினும் எனக்கும் ரஜினியை பிடிக்கும் என்ற வகையில் ஒரு விஷயம்.ரஜினி அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் கன்னட பதிப்பில் அவர் கேட்டை திறந்து உள்ளே வரும் அவருடைய முதல் காட்சியில் அப்படியே நிறுத்தி கன்னட எழுத்துகள் ஸ்லைடு காட்டுவார்களாம்.அதில் எழுதியிருப்பதற்கு அர்த்தம் "சனியன் வந்துருச்சு".
முதல் படத்திலேயே ஒரு நெகட்டிவ் ரோலில் கலை வாழ்க்கையை ஆரம்பித்தவர்
சாதித்தவை அறிந்ததே.

கடைசியாக நான்
என்னடா சைட்ல சத்தமில்லாம ஒரு விளம்பரம் போட்றானேன்னு முறைக்க வேணாம் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் பாரதி பிறந்த நாளில் நானும் பிறந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே (அப்புறம் அவரல்லவா கவலைப்பட வேண்டும்)
சரி மீன்டும் இன்னொரு நாள் சந்திப்போம்
தமிழ்மணத்தில் சேர்க்கும்வரை என் இன்னொரு ப்லாக்- க்கு இங்கிருந்தே ஆதரவு
தரவும்

Friday, December 09, 2005

ஜோக்-காடு

பூக்காடுங்கிற பேர்ல நிறைய இம்சை பண்றது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான்
இருந்தாலும் எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை
நாம தினமும் எவ்வளவோ ஜோக் கேள்விப்படறமே
அதெல்லாம் ப்லாக்ல சொன்னா என்னன்னு
இந்த மனுஷப்பய புத்தி இருக்கே அது ஒரு விஷயம் கேட்டு எஞ்ஜாய் பண்ணிடுச்சின்னா யார்ட்டயாச்சும் சொல்லணும்னு திரியும்
அப்டித்தான் எனக்கும் இப்படி தோணிச்சு
ஆனா பூக்காடு சரிப்படாது அங்க கவிதைகள் மட்டுந்தான் மலரணும் முடிஞ்சவரை

அதனால இன்னுமொரு இம்சையை தொடங்கறேன்
ஆனா கண்டிப்பா என்னை சிரிக்க வைச்ச ஜோக்ஸ் மட்டுந்தான்
ஸோ யாரும் பயப்பட வேணாம்
அதோட இணைய முகவரிக்கு போக இங்கே க்ளிக்கவும்
சீக்கிரமே தமிழ் மணத்திலயும் சேர்த்துடறேன்

Wednesday, December 07, 2005

பொருளாதார உயர்வு??

மழை சகதியில்
கிழிந்த சாக்கும், அழுக்கு வேஷ்டியுமாய்
உறங்கும்
பிச்சைக்காரன் தலைமாட்டில்
டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்

Monday, December 05, 2005

மன ரேகை

என் ஆயுளின் வெறுமைகளை
உன் காதல் நிரப்பவில்லை
அதை செய்துகொண்டிருக்கிறது....
வாழ்க்கை

Friday, December 02, 2005

கவிதையான்னு தெரியாது ஆனா சத்தியமா ஹைக்கூ இல்ல ஹி ஹி

...எழுதியிருந்தார்கள்
நாளைய ஸ்பெஷல் "வான் கோழி பிரியாணி"
நல்ல வேளை - உற்று பார்க்கும்
அந்த வான்கோழிக்கு
எழுதப்படிக்க தெரியாது

........................

பூப்பறிக்க கோடரி
சிசேரியன்
.........................

ஹி ஹி
-------
வளைவுகளை முந்தக்கூடாது
ரசிக்க வேண்டும்